Published:Updated:

உடல்நிலை மோசமா... நாடகமா? - நித்தியை சுற்றும் சர்ச்சை!

நித்தியானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்தியானந்தா

மொரீஷியஸ் நாட்டிலிருந்து சில மருத்துவர்களை அழைத்துவந்து, நித்தியானந்தா தங்கியிருக்கும் தென் பசிபிக் பெருங்கடல் தீவில், அவருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது

உடல்நிலை மோசமா... நாடகமா? - நித்தியை சுற்றும் சர்ச்சை!

மொரீஷியஸ் நாட்டிலிருந்து சில மருத்துவர்களை அழைத்துவந்து, நித்தியானந்தா தங்கியிருக்கும் தென் பசிபிக் பெருங்கடல் தீவில், அவருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது

Published:Updated:
நித்தியானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்தியானந்தா

‘சாமியார் நித்தியானந்தா மறைந்துவிட்டார்!’ எனப் பரவிய செய்தி, காட்டுத்தீயாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. இதை மறுத்து, நித்தியானந்தாவின் முகநூல் பக்கத்திலேயே பதிவுகள் தடதடத்தன. நித்தியானந்தா கைப்பட எழுதியதாக ஒரு கடிதம், அவர் புகைப்படத்தோடு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. ‘நித்தியானந்தாவின் உடல் நிலைக்கு என்ன ஆனது... அவரைச் சுற்றி நடக்கும் மர்மங்களுக்கு விடை என்ன?’ கேள்விகளுடன், அவருடைய ஆதரவாளர்கள், ஆசிரமத்திலிருந்து வெளியேறிய முன்னாள் சீடர்கள் எனப் பலரிடமும் பேசினோம்.

நம்மிடம் பேசிய திருவண்ணாமலை நித்தியானந்தா ஆசிரம நிர்வாகிகள் சிலர், “நித்தியானந்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். நடப்பவற்றை ஓரளவு தெரிந்துகொள்ளும் நிலையில்தான் இருக்கிறார். அதேநேரம், அவ்வப்போது ஆட்களை அடையாளம் காண முடியாமல் சிரமப்படுகிறார். சைகையால்தான் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்கிறார். 2012-ம் ஆண்டு முதல் அவர் எடுத்துக்கொண்ட ‘குறிப்பிட்ட’ ஒரு மருந்துதான், இந்தப் பக்கவிளைவுகளுக்குக் காரணம். அந்த மருந்தால் அவரது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, சிறுநீரகம் செயலிழந்துவிட்டது. ரத்தக் கொதிப்பு பிரச்னையும் சேர்ந்துகொண்டதால், அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது.

உடல்நிலை மோசமா... நாடகமா? - நித்தியை சுற்றும் சர்ச்சை!

மொரீஷியஸ் நாட்டிலிருந்து சில மருத்துவர்களை அழைத்துவந்து, நித்தியானந்தா தங்கியிருக்கும் தென் பசிபிக் பெருங்கடல் தீவில், அவருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. ‘சிறுநீரக அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என மருத்துவர்கள் அளித்த ஆலோசனையை, நித்தியானந்தா ஏற்க மறுத்துவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு, ‘என் உயிர் திருவண்ணாமலையில்தான் பிரிய வேண்டும்’ எனத் தன் முக்கிய சீடர்களிடம் நித்தியானந்தா அறிவுறுத்தியிருக்கிறார். 2019-ல் நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பிறகு, இந்தியாவுக்கும் அவருக்குமான தொடர்பு வெறும் சமூக வலைதள பக்தி பிரசாரங்களோடு நின்றுவிட்டது. இந்தியாவுக்குத் திரும்ப வர வேண்டுமென நித்தியானந்தா விரும்புகிறார். இதற்கிடையே, அவரின் அம்மாவும், இரண்டு சகோதரர்களும் நித்தியானந்தாவின் உடல்நிலையின் உண்மையை அறிய விரும்புகிறார்கள். உடல்நிலையை மேற்கோள்காட்டி, விரைவிலேயே அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அதற்கான அனுமதியை நீதிமன்றம் வாயிலாகப் பெறவும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன” என்றனர்.

நித்தியானந்தாவின் உடல்நிலை மோசமானதாகப் பரவும் செய்தியைத் தொடர்ந்து, அவரது ஆசிரமத்துக்குள்ளும் பிரச்னைகள் வெடித்திருக்கின்றன. “நித்தியானந்தாவின் சொத்துகளைப் பராமரிக்கும் குறிப்பிட்ட சில சீடர்கள், அவரது உடல்நிலை குறித்து உண்மைத் தகவல்களை வெளியிடுவதில்லை. சமீபத்தில் அமெரிக்கா, கனடா நாடுகளைச் சேர்ந்த சில சீடர்கள் நித்தியானந்தாவைச் சந்திக்க முயன்றபோது, அனுமதி மறுக்கப்பட்டது” என்கிறார்கள் கர்நாடகா பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர்.

உடல்நிலை மோசமா... நாடகமா? - நித்தியை சுற்றும் சர்ச்சை!

மேலும் அவர்கள் கூறுகையில், “நித்தியானந் தாவிடம் சுமார் 6,000 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. இதில், கனடா, அமெரிக்காவிலுள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள பெரும் தொகையும் அடக்கம். இவை தவிர, அசையா சொத்துகளும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் இருக்கின்றன. இவை அனைத்தையும் நித்தியானந்தா பெயரால் தற்போது நிர்வகிப் பவர்கள் அவரின் குறிப்பிட்ட சில சீடர்கள்தான். இந்த அதிகாரம் தங்கள் கையைவிட்டுப் போய் விடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். இதற்காக, நித்தியானந்தா நலம் விரும்பிகளை மட்டுமல்ல, அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்கூட நித்தியானந்தாவைச் சந்தித்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் கள். பெங்களூரில் இருக்கும் பிடதி ஆசிரமத்துக்கு முறையாகப் பொருளுதவி செய்வதில்லை. இதனால் அங்கிருப்பவர்கள் கடுமையான நோய் களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பிடதி ஆசிரமத் தில் சிரமம் அதிகரித்ததால், அங்கிருந்து கடந்த வாரம் திருவண்ணாமலையிலுள்ள நித்தியானந்தா வின் ஆசிரமத்துக்கு 30 பேர் இடம்பெயர்ந்தார்கள். நிலைமை சீரியஸாகிக்கொண்டேபோகிறது. இதைச் சமாளிப்பதற்காகத்தான், நித்தியானந்தா கைப்பட எழுதியதாகக் கடிதங்களும், அவரது சில போட்டோக்களும் வெளியிடப்படுகின்றன. என்ன நடக்கிறது என்றே புரிந்துகொள்ள முடியாதவரால், எப்படி எழுத்துகளைக் கண்ட றிந்து இந்தத் தகவல்களை எழுதி அனுப்பியிருக்க முடியும்... நித்தியானந்தாவைச் சுற்றி நடப்பதெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன. அவரது உடல்நிலை சரியாக வேண்டுமென யாகம் வளர்த்து பூஜித்திருக்கிறோம்” என்றனர்.

நித்தியானந்தாவின் உடல்நிலை பற்றிய தகவல்களும், அவரது சொத்துகளுக்காக நடக்கும் ஆசிரமப் பூசல்களும் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன. பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, திருவண்ணாமலையிலுள்ள நித்தியானந்தாவின் ரத்த உறவுகள் மூலம், ‘ஆட்கொணர்வு மனு’ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் தடதடக்கின்றன. இதற்கிடையே, ‘நடப்பதெல்லாமே நாடகம்’ என்கிறது நித்தியானந்தாவின் எதிர்த் தரப்பு.

நித்தியானந்தாவின் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய அவரது முன்னாள் சீடர்கள் சிலரிடம் பேசினோம். “நித்தியானந்தா இந்தியாவிலிருந்து தப்பி ஓடுவதற்கு மூல காரணமே, இங்குள்ள சில சாமியார்களுடன் ஏற்பட்ட தொழில் போட்டிதான். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கைதான் அவர் வாழ்கிறார். ஆன்லைன் மூலமாக ‘சத்சங்’ நிகழ்ச்சிகள் நடத்தியும், நித்தியானந்தா எதிர் பார்த்த அளவுக்குக் கூட்டமும் வருமானமும் வரவில்லை. தன் சொத்துகளை அபகரிக்க நடக் கும் முயற்சியும் அவருக்கு நன்கு தெரியும். இதை யெல்லாம் சமாளிக்கத்தான் இந்தியாவுக்கு வர அவர் விரும்புகிறார். இதற்காக, பா.ஜ.க-வைச் சேர்ந்த சில மேலிடப் பிரமுகர்களுடன் மறை முகப் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது அவர் தரப்பு. ‘நாங்கள் தமிழகத்தில் ஆன்மிகம் மட்டும் பரப்புகிறோம். தன் மீதிருக்கும் வழக்கு களை எதிர்கொள்ள நித்தியானந்தா தயாராக இருக்கிறார். இந்தியா திரும்புவதற்கு அனுமதி தாருங்கள்’ என டெல்லிக்குத் தூது விட்டிருக் கிறார்கள். நித்தியானந்தா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் ‘சரண்டர் பெயில்’ பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ‘அவருக்கு உடல்நிலை சரியில்லை. சரண்டராகி உடனே பெயிலில் விடுவிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்’ என நீதிமன்றங்களை நாடவிருக்கிறார்கள். நீதிமன்றங் களை நம்பவைப்பதற்காகத்தான், ‘நித்திக்கு உடல்நிலை சரியில்லை; கோயிலில் விளக்கேற்றுங் கள்’ எனத் தகவல் பரப்பப்படுகிறது. இவை எல்லாமே நாடகம்தான். தன் சொத்துகளைப் பாதுகாப்பதற்கும், வியாபாரத்தைப் பெருக்குவதற் கும் மட்டுமே இந்தியா வரத் துடிக்கிறார் நித்தியானந்தா” என்றனர் விரிவாக.

உடல்நிலை மோசமா... நாடகமா? - நித்தியை சுற்றும் சர்ச்சை!

நித்தியானந்தா என்றாலே சர்ச்சையும் மர்மங்களும் என்றாகிவிட்டது. அவர் உடல்நிலை மோசமான செய்தி வதந்தியாக இருந்தாலும்கூட, நித்தியானந்தா இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட வேண்டியவர்தான். அவர்மீது இன்டர்போல் அமைப்பு, சர்வதேச அளவில் ‘புளூ கார்னர் நோட்டீஸ்’ கொடுத்திருக்கிறது. குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு எனப் பல்வேறு மாநிலங் களில் நித்தியானந்தா மீது வழக்குகள் நிலுவை யிலுள்ளன. இவற்றையெல்லாம் சந்திப்பதற்கு நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டியது அவசியம். இதற்கு மேலும் தாமதிக் காமல், சட்டப்படி நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு? பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism