Published:Updated:

̀`இந்தியா என்ற ஜனநாயகத்தின் முரண்பாடு!' கும்பல் கலாசாரத்திற்கு பணிந்த தனிஷ்க் #TanishqEkatvam

Tanishq ekatvam
Tanishq ekatvam ( Photo: Tanishq Website )

விளம்பரத்திற்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் முதல் சசி தரூர் போன்ற அரசியல் பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தும், அந்த விளம்பரத்தை அனைத்து தளங்களிலிருந்தும் டாடாவின் தனிஷ்க் நிறுவனம் நீக்கியிருக்கிறது.

எடுத்தவுடன், ஏதோ ஒரு விழாவுக்காக வீடு அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அடுத்த ஷாட்டில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50+ வயது மதிக்கத்தக்க பெண்மணி, பொட்டு வைத்து மல்லிகைப்பூ சூடியிருக்கும் 25+ வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண்ணை, ஓர் அறையில் இருந்து வெளியே அணைத்தவாறு அழைத்து வருகிறார்.

Tanishq ekatvam Ad
Tanishq ekatvam Ad

''உறவு இன்னும் கொஞ்சம் புதிதாகவே இருக்கிறது…

பாதி நெய்யப்பட்ட நூலினைப்போல, இன்னும் இணைந்துகொண்டிருக்கிறது...

நாம் அதை அன்பாலும் ஒருமித்த மனதாலும் வலுவாக்குவோம்...

நாம் அனைவரும் சேர்ந்து அந்த உறவினைப் பின்னுவோம்…

அன்பின் பிணைப்பினால்…

நாம் ஒரு முனையை மற்றொரு முனையுடன் இணைப்போம்...

வலுவான பிணைப்போடு அவற்றை ஒன்று சேர்ப்போம்…”

என்று ஹிந்தியில் வாய்ஸ் ஓவர் போகிறது. அது முடியும்போது கர்ப்பிணிப்பெண், ''அம்மா, இது உங்கள் வீட்டின் வழக்கம் இல்லைதானே?” என்கிறார். அதற்கு அந்த வயதான பெண், ''ஆனால், தன் மகளை சந்தோஷமாக வைத்திருப்பது எல்லா வீட்டின் வழக்கம்தானே?” என்று கேட்கிறார்.

அந்த இந்து இளம்பெண் அந்த வயதான இஸ்லாமியப் பெண்ணின் மருமகள். கர்ப்பிணியாக இருக்கும் தன் மருமகளுக்கு, தங்கள் வழக்கம் இல்லாவிட்டாலும் அவள் சந்தோஷத்துக்காக சீமந்தம் நடத்துகிறார்கள். அனைவருமே பார்ப்பதற்கு மலையாளிகளைப்போல தோற்றமளிக்கிறார்கள்.

இப்படியாகச் செல்லும் விளம்பரத்தை வெளியிட்டதற்காகத்தான் டாடாவுக்குச் சொந்தமான தனிஷ்க் நிறுவனத்துக்கு எதிராக #BoycottTanishq கடந்த இரண்டு நாள்களாக டிரெண்ட் ஆனது. ''மலையாளிகளை எப்படி வீடுகளில் ஹிந்தி பேசுவதாகக் காட்டலாம்?” என்று சேட்டன்கள் சண்டை போடவில்லை. அப்படி என்னதான் இந்த விளம்பரத்தில் பிரச்சனை என்றால்… கங்கனா ரனாவத் போன்ற பாலிவுட் பிரபலங்களை உள்ளடக்கிய இந்துத்துவ ஆள்கள், இந்த விளம்பரம் லவ் ஜிஹாத்தை தூண்டுவதாகவும், ஆதரிப்பதாகவும் இருப்பதாகக் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளனர். குஜராத், கட்ச் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனிஷ்க் கடையில் இந்துத்துவ கும்பல் புகுந்து கடையில் வேலைப்பார்த்தவர்களை அச்சுறுத்தியது மட்டுமல்லாமல், விளம்பரத்தை ஒளிபரப்பியதற்காக கடையின் கிளை மேலாளர் மன்னிப்புக் கேட்பதாக அவர்களே ஒரு பேப்பரில் எழுதி, கடைக்கு வெளியே ஒட்டியிருக்கிறார்கள்.

Tanishq ekatvam
Tanishq ekatvam
Photo: Tanishq Website

விளம்பரத்திற்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் முதல் சசி தரூர் போன்ற அரசியல் பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தும், அந்த விளம்பரத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் டாடாவின் தனிஷ்க் நீக்கியிருக்கிறது.

இது தொடர்பாக தனிஷ்க் நிறுவனம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில்,

''இந்த சவாலான காலங்களில் பல்வேறு தரப்பினைச் சேர்ந்த மக்கள், சமூகம் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக இணைவதைக் கொண்டாடுவதும், அந்த ஒற்றுமையின் அழகைக் கொண்டாடுவதும்தான் `ஏகத்வம்’ பிரசாரத்தின் அடிப்படை நோக்கம். இந்த விளம்பரப் படம் அந்த நோக்கத்திற்கு மாறாக கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. இப்படியாக (மக்களின்) உணர்வுகள் கவனக்குறைவாக தூண்டப்பட்டதில் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம். மேலும், உணர்வுகள் புண்படுத்தப்பட்டதையும், எங்கள் ஊழியர்கள், கூட்டாளர்கள் மற்றும் கடை ஊழியர்களின் நல்வாழ்வையும் மனதில் கொண்டு இந்தப் படத்தை (விளம்பரம்) திரும்பப் பெறுகிறோம்” என்று கூறியிருக்கிறது.

ஒற்றுமைப்பாட்டினை நோக்கமாகக் கொண்ட விளம்பரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட `கும்பல் கலாசாரத்தால்' டாடா போன்ற பெருநிறுவனத்தை அச்சுறுத்த முடிந்தது, இந்தியா என்ற ஜனநாயகத்தின் முரண்பாடு!

அடுத்த கட்டுரைக்கு