அலசல்
சமூகம்
Published:Updated:

கள்ளச்சாராய பெண் வியாபாரியுடன் உறவு...மருமகளுக்கு வரதட்சணைக் கொடுமை...

காவல் நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
News
காவல் நிலையம்

சர்ச்சை வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்!

குற்றத்தைத் தடுக்கவேண்டிய காவல்துறை அதிகாரியே, கள்ளச்சாராய வியாபாரம் செய்யும் பெண்ணுடன் உறவு வைத்திருந்ததோடு, அந்தப் பெண்ணின் மருமகளைக் கொடுமைப்படுத்திய வழக்கிலும் சிக்கியிருப்பது மயிலாடுதுறையில் பேசுபொருளாகியிருக்கிறது!

மயிலாடுதுறையை அடுத்த மூங்கில் தோட்டத்தைச் சேர்ந்த வினோத்குமாரும், செருதியூரைச் சேர்ந்த அபிராமியும் காதலித்து, திருமணம் செய்துகொண்டவர்கள். இந்த நிலையில், கணவர் வினோத்குமார், மாமியார் புஷ்பவல்லி, இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டு அபிராமியை அடித்து உதைத்தாகக் கூறப்படுகிறது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

இது குறித்து நம்மிடம் பேசிய அபிராமி, ‘‘திருமணமான புதிதில் நாகையை அடுத்த கீழ்வேளூரில் மாமனார், மாமியாருடன் சேர்ந்து வசித்தேன். என் மாமியார் கள்ளச்சாராய வியாபாரி. இந்தச் சூழலில் அங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனுக்கும், என் மாமியார் புஷ்பவல்லிக்கும் முறை தவறிய உறவு ஏற்பட்டது. எனவே, என் மாமனாரைப் பிரித்து, மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள மூங்கில்தோட்டத்தில் வீடு கட்டிக்கொடுத்து, குடியமர்த்திவிட்டார் இன்ஸ்பெக்டர்.

அதன் பிறகு என் மாமியாரைச் சந்திக்க வரும்போதெல்லாம் மதுபானங்களைக் கொண்டு வருவார் இன்ஸ்பெக்டர். அவற்றை என் மாமியார்தான் விற்பனை செய்வார். வீட்டில் என் மாமியாரும், இன்ஸ்பெக்டரும் ஒன்றாக மது அருந்தி, என் கண்ணெதிரிலேயே உல்லாசமாக இருப்பார்கள். இன்ஸ்பெக்டர் வாங்கி வரும் கறி, மீன்களை நான்தான் அவர்களுக்குச் சமைத்துத் தர வேண்டும். அவர்கள் உல்லாசத்தில் இருக்கும்போதே என்னிடம், ‘அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா’ என்று அசிங்கமாக நடந்துகொண்டது எனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருந்தது. எனவே, என் கணவரிடம் பேசி தனிக்குடித்தனமாக மயிலாடுதுறைக்குச் சென்றுவிட்டோம்.

புஷ்பவல்லி
புஷ்பவல்லி

இந்த நிலையில் என் தங்கையின் திருமணம் நடைபெற்றது. அவளுக்கு என் பெற்றோர் செய்த சீர்களைக் கேள்விப்பட்ட என் மாமியார், என்னிடமும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். ஏற்கெனவே நான் தனிக்குடித்தனம் வந்த கோபத்தில் இருந்த அவர், என் கணவருக்கும் அடிக்கடி போன் செய்து, ‘அவளை அடித்து, உதைத்து வெளியில அனுப்பு. இரண்டு நாள் பட்டினி போடு. அப்பதான் அவள் அப்பன்கிட்ட நகை, பணம் வாங்கிட்டு வருவா’ என்று கூறுவார். ஒரு கட்டத்தில், என் கணவரும் தினமும் மதுபோதையில் வந்து என்னை அடித்து உதைத்து டார்ச்சர் செய்தார்.

அப்போதும்கூட, ‘நீ உன் மனைவியை அடிப்பதை எங்க கண்ணால பார்த்து ரசிக்கணும்’ என்று இன்ஸ்பெக்டரும், என் மாமியாரும் கூறுவார்கள். அதன்படியே என் கணவரும் என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து, அதை செல்போனில் வீடியோவாக கான்ஃபரன்ஸ் காலில் போட்டுக்காட்ட... அவர்களும் பார்த்து ரசிப்பார்கள். அதன் பிறகு என் ஆடையை உருவி, நிர்வாணமாக வெளியேற்றி கதவைப் பூட்டிவிடுவார். மான அவமானத்துக்கு பயந்து, பின்புறச் சந்து வழியாக மாடிக்குச் சென்று விடியும்வரை உட்கார்ந்திருப்பேன். அதிகாலையில் பின்பக்க வாசல் வழியாக மீண்டும் வீட்டுக்குள் வருவேன். இந்தக் கொடுமைகளையெல்லாம் என் தந்தையிடம் சொல்லி, அவரது உதவியால் சென்னைக்குத் தப்பிச் சென்று வேலை பார்த்துவருகிறேன்.

கள்ளச்சாராய பெண் வியாபாரியுடன் உறவு...மருமகளுக்கு வரதட்சணைக் கொடுமை...

அண்மையில், தீபாவளிக்காக நான் மயிலாடுதுறைக்கு வந்தபோது இன்ஸ்பெக்டர் தலைமையில், மாமியாரும் கணவரும் என்னை அடித்து உதைத்தார்கள். இன்ஸ்பெக்டர்தான் முதலில் என் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி என்னை அடித்தார். என்னை ஆட்டோவில் ஏற்றி, கொண்டு செல்லும்போது, என்னைக் காப்பாற்றவந்த எனது பெற்றோரையும் நடுரோட்டில் என் கண்முன்னேயே அடித்து உதைத்தார்’’ என்றார் தழுதழுத்த குரலில்.

இதையடுத்து அபிராமியின் தந்தை முத்துக்குமாரிடம் பேசியபோது, “எங்களைத் தாக்கியவர் இன்ஸ்பெக்டர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், மயிலாடுதுறை எஸ்.பி உத்தரவின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் எவரும் கைதுசெய்யப்படவில்லை” என்றார்.

அபிராமியின் கணவர் குடும்பத்தினர், கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனிடமே நடந்த சம்பவம் பற்றி விளக்கம் கேட்டுப் பேசினோம். “என்னைப் பற்றி என்னிடமே கேட்டால் நான் என்ன பதில் சொல்வது... எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்... கோர்ட்டில் என்மீது கேஸ் இருக்கிறது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்

இதையடுத்து விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் வழக்கு குறித்துப் பேசியபோது, “இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார். அபிராமி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், வினோத்குமார், புஷ்பவல்லி, கார்த்திக், திவ்யா ஆகிய ஐந்து பேர்மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறோம். மேலும், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்யவும் மாவட்ட எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்” என்றார்.

களையெடுப்பின் மூலமே, காவல் துறை தன் மீதான களங்கத்தைத் துடைக்க முடியும்!