Published:Updated:

சாத்தான்குளம்: `அனுமதித்த அதிகாரிகள்!' -அதிர்ச்சி கொடுத்த கொரோனா தன்னார்வலர்கள்

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ், கொரோனா தன்னார்வலர்கள் என ஸ்டேஷனுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நடமாடியதுடன், விசாரணைக்கு வந்தவர்களை அடிக்கவும் செய்திருக்கிறார்கள். 

சாத்தான்குளம் வியாபாரிகள் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்குக் காரணமான காவல்துறையினர் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

பென்னிக்ஸ், ஜெயராஜ்
பென்னிக்ஸ், ஜெயராஜ்

இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால் சி .பி.ஐ அதிகாரிகள் விரைவில் தங்கள் விசாரணையைத் தொடங்க இருக்கிறார்கள். எனவே, இரு அப்பாவி உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த காவல்துறையினருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது

சாத்தான்குளம்: சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு! - விசாரணையில் இனி என்ன நடக்கும்?

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸார் மட்டுமல்லாமல், கொரோனா தன்னார்வலர்கள், காவல்துறை நண்பர்கள் ஆகியோரும் சாதாரணமாக நடமாடியதுடன், விசாரணைக்கு வருவோரையும் அடித்து உதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதனால் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை தமிழகம் முழுவதும் தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு காவல் நிலையத்தில் என்ன வேலை இருந்திருக்க முடியும்?
சமூக ஆர்வலர்கள்

இருப்பினும், தூத்துக்குடியில் கொரோனா தன்னார்வலர்களுக்கான அடையாள அட்டையில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் கையெழுத்துப் போட்டுள்ளார். கொரோனா பணிகளைச் செய்ய வேண்டிய அவர்கள் காவல் நிலையத்துக்குள் சென்று போலீஸாருக்கு பணிவிடை செய்தது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

கொரோனா தன்னார்வலர்களை காவல் நிலையத்தில் அடியாட்கள் போல சாத்தான்குளம் காவல்துறையினர் பயன்படுத்தியது தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் ஆட்சியர் விஷ்ணுவின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

கொரோனா தன்னார்வலருக்கான அடையாள அட்டை
கொரோனா தன்னார்வலருக்கான அடையாள அட்டை

இந்த விவகாரம் பற்றி பேசிய கூடுதல் ஆட்சியர் விஷ்ணு, "கொரோனா ஊரடங்கு காலத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியை மேற்கொள்ளும் பணிக்காக மட்டுமே அவர்கள் சேர்க்கப்பட்டார்கள். அந்தப் பணிக்காக அந்தந்த தாலுகா தாசில்தார்கள் வழியாக அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது” என்று தெரிவித்தார்.

சாத்தான்குளம்: அதிர்ச்சி ஆடியோ; சிக்கிய சிசிடிவி காட்சி! - கைதாகும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்?

நெல்லை மாநகர பகுதியிலும் கொரோனா பணிக்காகத் தன்னார்வர்களுக்கு சேவாபாரதி அமைப்பின் பெயருடன் அடையாள அட்டை கொடுக்கப்பட்டதாகச் சர்ச்சை கிளம்பியது. இது குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணனிடம் கேட்டதற்கு, ``கடந்த மார்ச் மாதம் லாக்டௌன் காலத்தில் பணியாற்றிய தன்னார்வ இயக்கங்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டது. 

சேவா பாரதி பெயருடன் சர்ச்சைக்குரிய அடையாள அட்டை
சேவா பாரதி பெயருடன் சர்ச்சைக்குரிய அடையாள அட்டை

முதல் லாக்டௌன் முடிந்ததும் (21 நாள்களில்) அந்த அட்டையைத் திரும்பப் பெற்றுக் கொண்டோம். பல்வேறு சமூக இயக்கங்கள், லயன்ஸ் கிளப், ரசிகர் மன்றங்கள் எனப் பலரையும் தன்னார்வலர்களாகப் பணியில் சேர்த்திருந்தோம். அவர்கள் தன்னார்வப் பணியை மட்டுமே செய்தார்கள். நெல்லையில் தன்னார்வலர்களால் ஒரு சிறு பிரச்னைகூட ஏற்படவில்லை” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு