Published:Updated:

ஆவின் நிறுவனத்தைச் சுற்றும் சர்ச்சைகள்... சாட்டையை சுழற்றுமா அரசு?

ஆவின்
பிரீமியம் ஸ்டோரி
ஆவின்

ஆவினில் 8,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவுப் பால் சங்கங்கள் உறுப்பினராக இருக்கின்றன. அவற்றின் மூலம் விவசாயிகள் தினமும் ஆவினுக்குப் பால் சப்ளை செய்கிறார்கள்

ஆவின் நிறுவனத்தைச் சுற்றும் சர்ச்சைகள்... சாட்டையை சுழற்றுமா அரசு?

ஆவினில் 8,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவுப் பால் சங்கங்கள் உறுப்பினராக இருக்கின்றன. அவற்றின் மூலம் விவசாயிகள் தினமும் ஆவினுக்குப் பால் சப்ளை செய்கிறார்கள்

Published:Updated:
ஆவின்
பிரீமியம் ஸ்டோரி
ஆவின்

தரத்திலும் விலையிலும் எந்தத் தனியார் நிறுவனத்தாலும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பது, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின். சமீபகாலமாக அதைச் சுற்றிச் சுழலும் சர்ச்சைகள் கவலை கொள்ளவைக்கின்றன!

“ஆவின் பால் மற்றும் சில உப பொருள்கள் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது” என்பது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டு. “கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு வழங்கும் சத்துப் பொருள்கள் தொகுப்பில், ஆவின் நிறுவனத்தின் ‘ஹெல்த் மிக்ஸ்’ வாங்க அனுமதி வழங்காமல், தனியார் நிறுவனத்தின் ‘ஹெல்த் மிக்ஸ்’ வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது” என்பது தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு. இவை மட்டுமின்றி, ஆவின் நிறுவன ஒன்றியங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை, பணி நியமன முறைகேடு எனப் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.

ஆவின் நிறுவனத்தைச் சுற்றும் சர்ச்சைகள்... சாட்டையை சுழற்றுமா அரசு?

பணி நியமன முறைகேடுகள்

ஆவின் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே, அது சந்தித்துவரும் மிகப்பெரிய பிரச்னை பணி நியமனம்! பணி நியமனம் தொடர்பாக இதுவரை 300-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மதுரை ஆவினில், மேலாளர், துணை மேலாளர், எக்ஸிகியூட்டிவ், எஸ்.எஃப்.ஏ., உள்ளிட்ட 61 பணி நியமனங்களுக்கான அறிவிப்பு 2019-ம் ஆண்டு வெளியானது. அந்த அறிவிப்பு காலாவதியான நிலையிலும், 2020-ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு, 2021-ம் ஆண்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்தத் தேர்வில் விதிமீறல்கள், வினாத்தாள் லீக், நேர்காணல் அழைப்பில் முறைகேடு என்று பல்வேறு குளறுபடிகள் நடந்தன. இது குறித்து தணிக்கைப் பிரிவு இணை இயக்குநர் தலைமையில் ஒருங்கிணைந்த குழு நடத்திய விசாரணையில் முறைகேடு உறுதியானது. இருப்பினும், லஞ்ச ஒழிப்பு எஸ்.பி ஜெயலட்சுமி தலைமையில் கடந்த மே மாதம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இதிலும் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கின. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2020-ம் ஆண்டு, அ.தி.மு.க ஆட்சியில் 460 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், 46 தொழில்நுட்பாளர் உள்ளிட்ட 138 பணியிடங் களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதற்கிடையே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதால், பணி நியமனங்களுக்கான அறிவிப்பு ரத்துசெய்யப்பட்டது. ஆனால், அப்போது பதவியிலிருந்த பொது மேலாளர்கள், மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட எந்த ஆவின் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆவின் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருக்கிறது. நிதியமைச்சரும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் இதற்கு ஆதரவளித்தார். அதன்படி `ஆவின் பணியிடங்கள் அனைத்தும் டி.என்.பி.எஸ்.சி மூலமே நிரப்பப் படும்’ என்று அறிவிப்பு வெளியிடப் பட்டது. ஆனாலும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை.

ஆவின் நிறுவனத்தைச் சுற்றும் சர்ச்சைகள்... சாட்டையை சுழற்றுமா அரசு?

லஞ்ச ஒழிப்பு சோதனை... அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கோவை ஆவின் நிறுவனத்தில், லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையில் நடந்த சோதனையில், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து 8.4 லட்சம் ரூபாயை போலீஸார் கைப்பற்றினர். இது குறித்தும் வழக்கு பதிவுசெய்யப்பட்டதே தவிர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட வில்லை.

ஆவினில் மதுரை மண்டல துணை பால் ஆணையர் கிறிஸ்துதாஸ், மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் புகழேந்தி, புரொடக்‌ஷன் பிரிவு பொது மேலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட எட்டு அதிகாரிகள் ஓய்வுபெறவிருந்த நிலையில் ஊழல் புகார் காரணமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். புகார் ஓரிடம், நடவடிக்கை வேறிடம் என்று அதிலும் தவறு நடந்திருப் பதாகச் சர்ச்சையானது.

எந்திரம் வாங்கியதிலும், பால் கொள்முதலிலும் மோசடி!

நபார்டு நிதியுதவியுடன் 18 ஆவின் ஒன்றியங்களுக்கு, சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ‘மில்க் அனலைசர்’ எந்திரங்களை வாங்க ஆவின் நிர்வாகம் டெண்டர் கோரியது. 3 முதல் 5 லட்ச ரூபாய் வரை மதிப்புள்ள எந்திரங்களை, 18 லட்ச ரூபாய் என்று அதிக மதிப்பில் ‘கோட்’ செய்ததால், விலையைக் குறைத்து மாற்று டெண்டர் விடுமாறு கடிதம் அனுப்பியது மத்திய அரசு. ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஏற்கெனவே, ‘மில்கோ ஸ்கிம்மர்’, ‘மில்கோ ஸ்கேனர்’ என்ற இரு வகை எந்திரங்கள் இருக்கிறபோது, தேவையே இன்றி புதிய எந்திரங்களைக் கொள்முதல் செய்ததும் சர்ச்சையானது.

ஆவினில் 8,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவுப் பால் சங்கங்கள் உறுப்பினராக இருக்கின்றன. அவற்றின் மூலம் விவசாயிகள் தினமும் ஆவினுக்குப் பால் சப்ளை செய்கிறார்கள். கொள்முதல் செய்யப்படும் பாலில் கொழுப்புச்சத்து 3.5 சதவிகிதம், திடச்சத்து 8.5 சதவிகிதம் என மொத்தம் 12 சதவிகிதம் இருந்தால்தான் ஒரு லிட்டர் பாலுக்கு 32 ரூபாயை ஆவின் வழங்கும். “இங்கிருந்துதான் ஊழலே தொடங்குகிறது” என்கிறார்கள் பால் விவசாயிகள். “12 சதவிகித சத்துகள் இருந்தபோதும், வேண்டுமென்றே இரண்டு சத்துகளும் சேர்த்து 11 அல்லது 10 சதவிகிதம்தான் இருக்கிறது என்று சொல்லி அதற்குரிய தொகையை மட்டும் விவசாயிகளுக்குக் குறைத்து வழங்கிவிட்டு, பால் பண்ணைக்கு அனுப்பும்போது அதற்கான முழுத் தொகையையும் ஆவின் அலுவலர்கள் வசூலித்துவிடுகிறார்கள். இப்படிப் பால் கொள்முதலில் கொள்ளையடிப்பவர்கள், பால் விவசாயிகள் என்ற பெயரில் போலி ஐ.டி-க்களை தயாரித்துவைத்துக்கொண்டு, அதன் மூலமும் கொள்ளையடிக்கிறார்கள்” என்கிறார்கள் அவர்கள்.

விற்பனை நிறுத்தம், விலையேற்றம்

சென்னை சென்ட்ரல், எழும்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட ஆறு ரயில் நிலையங்களில் இயங்கிவந்த ஆவின் பாலகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. மேலும் காரைக்குடி, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தலா ஒன்று, திருச்சியில் மூன்று, கோவையில் நான்கு ரயில் நிலைய ஆவின் பாலகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்த இடங்களிலெல்லாம் இப்போது பிற மாநில அரசுப் பாலகங்களே இயங்கிவருகின்றன.

ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றதும், ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டார். ஆனால், ஆவின் பால் பொருள்களுக்கான நெய், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட பால் பொருள்களின் விலை கடந்த மார்ச் 4-ம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்படி, ஒரு லிட்டர் நெய் 515 ரூபாயிலிருந்து 535 ரூபாயாகவும், 15 லிட்டர் நெய் டின் 8,350 ரூபாயிலிருந்து 8,680 ரூபாயாகவும், அரை லிட்டர் தயிர் 27 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும் அதிகரிக்கப் பட்டது. அதேபோல, பாதாம் பவுடர், ஐஸ்க்ரீம் வகைகள் விலையும் உயர்த்தப்பட்டன. விலையேற்றம் குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “தனியார் நெய் ஒரு லிட்டர் 695 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், ஆவின் நெய் அதைவிடக் குறைவான விலைக்கு விற்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி ஆவின் நெய்யைக் குறைவான விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்குத் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. இதைத் தடுக்க இந்த விலை ஏற்றம் உதவும்” என்றார்.

ஆவின் நிறுவனத்தைச் சுற்றும் சர்ச்சைகள்... சாட்டையை சுழற்றுமா அரசு?

அமைச்சர் விளக்கம்

“ஆவின் பொருள்கள் அதிகமாக விற்பனையாகும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நெய், வெண்ணைய், செறிவூட்டப்பட்ட பால் உள்ளிட்டவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையொட்டியே, ‘நுகர்வோரின் தேவைக்கேற்ப ஆவின் பொருள்கள் கிடைப்பதில்லை’ என்ற குற்றச்சாட்டை ஓ.பி.எஸ் வைத்தார்” என்று ஏற்றுக்கொள்கிறார்கள் ஆவின் அதிகாரிகள். ஆனால் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டை அடியோடு மறுக்கிறார்கள் அவர்கள்.

குற்றச்சாட்டுகள் குறித்து பால் வளத்துறை அமைச்சர் நாசரிடம் பேசினோம். “ஓ.பி.எஸ்., அண்ணாமலை இருவரும் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கி றார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சிறு விவகாரங்களையும் அரசியலுக்காகத் தேவையில்லாமல் பெரிதாக்குகிறார்கள். இந்த ஆட்சியில் ஆவினின் வருவாய் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இந்த விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு அடுத்தடுத்து செய்யவேண்டியதை நோக்கிச் செல்ல வேண்டியதுதான்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் மீது அத்தனை ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் அதுவும் கேள்விக்கு உள்ளாக்கப்படும். குற்றம் இல்லை என அவர்கள் நிரூபித்துவிட்டுச் செல்லட்டுமே...” என்று விளக்கமளித்தார்.

பெருமைக்குரிய ஆவினைக் காக்கவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. சாட்டையைச் சுழற்றுவாரா முதல்வர்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism