தூத்துக்குடியில் சமீபத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், “விசைப்படகு மீனவர்கள் கூடுதலாக ஐந்து மணி நேரம் மீன்பிடிக்க அனுமதியளிக்கப்படும்” என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொன்னது சர்ச்சையாகியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, ஃபைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்கத் தலைவர் கயஸ், “மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைக்கு வந்ததே, பாரம்பர்ய நாட்டுப்படகு மீனவர்கள் இரவில் மீன்பிடிப்பதற்கு எந்த இடைஞ்சலும் வரக் கூடாது என்பதற்காகத்தான். அதனால்தான், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க, காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதியளிக்கப்பட்டது. ஏற்கெனவே கூடுதல் சக்திகொண்ட மோட்டாரைப் பொருத்தியி ருப்பதோடு, இழுவை மடியையும் பயன்படுத்துறாங்க. இந்த லட்சணத்துல, `விசைப்படகு மீனவர்கள் கூடுதலா ஐந்து மணி நேரம் மீன்பிடிக்க அனுமதிக்கப்படும்’ன்னு மீடியாக்கள்லயே சொல்லியிருக்கார் அமைச்சர்.எந்தக் கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தாம, தன்னிச்சையா அவர் இப்படிச் சொன்னது அதிகார துஷ்பிரயோகம். கடந்த 2021 ஜூன்-ல இப்படித்தான் வலை, தூண்டில் வைத்து மட்டுமே மீன்பிடித்துவரும் தருவைக்குளம் கடல் பகுதியில், விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதி கொடுத்தார் அமைச்சர். முதல்வரிடம் நாங்கள் முறையிட்ட பிறகே அந்த ஆணை ரத்துசெய்யப் பட்டது. பொதுவாகவே அவர் விசைப்படகு முதலாளிகளின் நலனில்தான் அதிக அக்கறை காட்டுறார். அமைச்சர் என்பவர் இரு பிரிவு மீனவர்களுக்கும் பொதுவானவர் என்பதை அவர் நினைவில்கொள்ள வேண்டும்” என்றார்.

தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வெலிங்டனோ, “விசைப்படகுகள் காலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் மீன்பிடிக்க வேண்டும் என்ற விதிமுறை உருவான காலத்துல டீசல் விலை 20 ரூபாயைவிடக் குறைவு. இப்போ ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாய். இப்போதும் அதே விதிமுறைகளின்படி தொழில் செய்யறது எப்படிக் கட்டுப்படியாகும்... ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்கள்ல தங்குகடல் மீன்பிடிக்கு அனுமதி இருக்கு. நாட்டுப்படகு மீனவர்களோட எதிர்ப்பால தூத்துக்குடியில மட்டும்தான் அனுமதியில்லை. இங்கே ஆழ்கடலுக்குப் போனா, போயிட்டு வரவே நேரம் சரியாப் போயிடுது. அதனாலதான் கூடுதல் நேரம் கேட்டோம்” என்றார்.

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, விசைப்படகு மீனவர்கள் கூடுதலாக ஐந்து மணி நேரம் மீன்பிடிக்க அனுமதி கேட்டாங்க. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக விசைப்படகு மீனவர்களிடம் கூறினேன். விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் கூட்டி கருத்து கேட்ட பிறகே, இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.