Published:Updated:

`நெல்லை பள்ளிக்குத் தவறாகச் சான்றளிக்கப்பட்டதா..?!’ - அதிர்ச்சித் தகவல்

மாணவர்கள் உயிரிழந்த பள்ளி
News
மாணவர்கள் உயிரிழந்த பள்ளி

நெல்லை பள்ளியில் நடந்த துயரச் சம்பவத்துக்கு அனைத்துத் துறைகளின் அதிகாரிகளுமே பொறுப்பு என்பதால், நெல்லை கோட்டாட்சியர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் கொடுத்த சான்றிதழ் குறித்து ஆய்வுசெய்யப்படுகிறது.

நெல்லை டவுன் பகுதியிலுள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் 17-ம் தேதி கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆய்வு நடத்தும் அதிகாரிகள்
ஆய்வு நடத்தும் அதிகாரிகள்

சம்பவம் தொடர்பாக பள்ளியின் செயலாளர், தலைமை ஆசிரியை, கட்டட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளிக்கு முறையான உறுதித் தன்மைக்கான சான்றிதழ் வாங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் அந்தச் சான்றிதழ் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த துயரமான சம்பவம், தமிழகத்தையே உலுக்கியதால், தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளில் இருக்கும் கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பரிசோதிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகளில் தரமற்ற கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு இடிக்கப்பட்டுவருகின்றன.

தீயணைப்புத்துறை சான்றிதழ்
தீயணைப்புத்துறை சான்றிதழ்

நெல்லை மாவட்டத்தில் 17 குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. இதற்கிடையே, இடிந்து விழுந்த சாஃப்டர் பள்ளிக்கு வருவாய்த்துறை,, தீயணைப்புத்துறை, மாநகராட்சி, பொதுப்பணித்துறை என பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் சான்றளித்துள்ள தகவல் அம்பலமாகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடிந்து விழுந்த சுவர், அஸ்திவாரமே இல்லாமல் கட்டப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே சமீபத்தில் பெய்த மழையால் மோசமான நிலையில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததாக, சம்பவம் நடந்த பிறகு பள்ளிக்குச் சென்று பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருப்பதாகத் தீயணைப்புத்துறை சான்றளித்திருக்கிறது.

பள்ளிக்கு மாநகராட்சி அளித்த சான்று
பள்ளிக்கு மாநகராட்சி அளித்த சான்று

அதேபோல, மாநகராட்சி சார்பாக சுகாதார ஆய்வாளரும் பள்ளியை ஆய்வுசெய்து சான்றளித்திருக்கிறார். ஆனால், மாநகராட்சி நகர் நல அலுவலர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு பதிலாக அவருக்குக் கீழ் நிலையில் இருந்த அதிகாரியே சென்று பார்வையிட்டதாகச் சான்றளித்துள்ளார். அதுவும் சர்ச்சையாகியிருக்கிறது.

மாணவர்களை பலி வாங்கிய பள்ளியின் கட்டுமானம் அனைத்தும் உறுதித்தன்மையுடன் இருந்ததாக பொதுப்பணித்துறையும் சான்று கொடுத்துள்ளது. பள்ளியின் கட்டுமானம், சுவர்கள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை ஆய்வு செய்யாமலேயே அலுவலகத்திலிருந்தே சான்று கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் சந்தேகமாக இருக்கிறது.

வருவாய்த்துறை அளித்த சான்று
வருவாய்த்துறை அளித்த சான்று

வருவாய்த்துறையின் சார்பாக 2019, ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 2022, ஆகஸ்ட் 13-ம் தேதி வரைக்குமான அனுமதிச் சான்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பள்ளியில் 650 பேர் படிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சர்ச்சைக்குரிய பள்ளியில் 3,000-க்கும் அதிகமானோர் படித்துவருகிறார்கள்

பல்வேறு துறைகளும், எந்தத் தடையும் இல்லை எனச் சான்று கொடுத்ததன் காரணமாக பள்ளிக் கல்வித்துறையும் சாஃப்டர் பள்ளி செயல்பட அனுமதித்துள்ளது. ஆனாலும் அங்கு நடந்த துயரச் சம்பவத்துக்கு அனைத்துத் துறைகளின் அதிகாரிகளுமே பொறுப்பு என்பதால் நெல்லை கோட்டாட்சியர் சந்திரசேகரன் தலைமையில் மூன்று பேர்கொண்ட குழுவை அமைத்துள்ளார், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு.

பள்ளிக்குத் தவறாகச் சான்றளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை
விஷ்ணு, நெல்லை மாவட்ட ஆட்சியர்

ஆய்வுக் குழு, சான்றிதழின் உண்மைத்தன்மையை இன்று ஆய்வு செய்யவிருக்கிறது. அதில், தவறாகச் சான்றளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.