Published:Updated:

`பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்!'-தொடர் புகாரால் குமுறும் விஜய் மக்கள் இயக்கத் தலைவர்

பணம்கேட்டு மிரட்டிய கும்பலுக்கு அடிபணியாததால், தன் மீது அவதூறு பரப்புவதாக, வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் வேல்முருகன் புகார் கூறியிருக்கிறார்.

விஜய்யுடன் வேல்முருகன்
விஜய்யுடன் வேல்முருகன்

வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் வேல்முருகனுக்கு எதிராக, சதீஷ்குமார் என்பவர் தன் நண்பர்கள் 4 பேரை சேர்த்துக்கொண்டு பிரசாரம் செய்துவருகிறார். ``நாங்களும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தாம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட நிர்வாகிகளை மாற்றுகிறார்கள். 

விஜய்
விஜய்

அரசியல் கட்சிகளைப் பார்த்து அப்பா முதல்வர், மகன் அமைச்சரா என்று கேட்கிறோம். அதைப்போல விஜய்யின் மக்கள் இயக்கத்திலும் நடக்கலாமா, தளபதி இதைக் கண்டுகொள்ள மாட்டாரா?’’ என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் வேல்முருகனிடம் பேசினோம்.

``எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கூறும் சதீஷ்குமார் உள்ளிட்ட சிலர் எங்களின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. பணம்கேட்டு அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். பணம் தராததால் இயக்கத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் தவறாகப் பிரசாரம் செய்கிறார்கள். அந்தக் கும்பலின் மோசடி குறித்த ஆதாரங்களைத் திரட்டி வைத்திருக்கிறேன். 

பணம்
பணம்

பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக, எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறேன். மிகவும் அடித்தளத்திலிருந்து கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். இதுபோன்ற அவதூறுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். ஆண்டுதோறும் தளபதி பிறந்தநாளில் லட்சக்கணக்கான ரூபாயில் நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறோம். 

அத்தனை நிர்வாகிகளிடமும் என்னைப் பற்றி கேட்டுப் பாருங்கள். ஒருவர் தவறாகச் சொன்னாலும் இந்தப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன். யாரென்றே தெரியாத நபர்கள் பிரச்னை செய்கிறார்கள். அந்தக் கும்பல் மாதம் ஒரு அரசியல் கட்சியில் கொடிபிடித்து கோஷம் போடுவதை எங்களின் இயக்கத்தினர் போட்டோ ஆதாரங்களுடன் கண்டுபிடித்துள்ளனர்.

விஜய்யுடன் வேல்முருகன்
விஜய்யுடன் வேல்முருகன்

தி.மு.க, நாம் தமிழர் கட்சியில் இருப்பதாகப் பொய் சொல்லிப் பல பிரமுகர்களை மிரட்டி அந்தக் கும்பல் பணம் பறித்திருக்கிறது. அந்தக் கட்சியினரும் இந்த நபர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்னை மிரட்டிப் பறிக்க நினைக்கும், அந்தக் கும்பல் குறித்து, எஸ்.பி அலுவலகத்தில் மீண்டும் புகார் அளிக்க உள்ளோம்’’ என்றார்.

புகார் தொடர்பாக சதீஷ்குமார் கூறுகையில், ‘‘நான் வங்கியில் பணிபுரிகிறேன். தமிழ்த் தேசிய ஆதரவாளர். பொதுச்சேவையும் செய்துவருகிறேன். விஜய் மக்கள் இயக்கத்தில் பேச்சாளராக இருந்த என்னை திடீரென நீக்கிவிட்டார் வேல்முருகன். அவரை நான் மிரட்டவில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை. என் மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்’’ என்றார் கொதிப்புடன்.