Published:Updated:

`ஆவி பிடித்தால் கொரோனா அழியுமா?': கழக அரசை விமர்சிக்கும் திமுக-வினர்- இணையத்தில் சூடான விவாதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்க ஏற்பாடு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்க ஏற்பாடு

கொரோனாவைத் தடுக்க ஆவி பிடிக்க வேண்டும் என அரசு பரிந்துரைத்து வரும் நிலையில், அதற்கு எதிராக கருத்துவ தெரிவித்து வருகின்றனர் தி.மு.க-வினர்.

நீராவி பிடித்தால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்றும், ஆவி பிடித்தால் கொரோனா கிருமி கொல்லப்படும் என்ற தகவல் மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரவி வருகிறது. இது சரியா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், ஆவி பிடிக்கும் விவகாரத்தில் தி.மு.க அரசுக்கு எதிராக, உடன்பிறப்புகளின் தரப்பில் இருந்தே எதிர்க் கருத்து எழுந்திருக்கிறது.

பா.ஜ.க வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்றான மொடக்குறிச்சியில், பா.ஜ.க-வினரால் பொது இடங்களில் ஆவி பிடிக்கும் ஏற்பாடு செய்யபபப்ட்டிருந்தது. இது பல தரப்பில் இருந்தும் விமர்சனத்துக்குள்ளானது. இது நோயைத் தடுக்காமல், நோய் தொற்றைப் பரப்பத்தான் வழிவகை செய்யும் என கருத்துக்கள் பகிரப்பட்டன. தி.மு.க-வினரும் சமூக ஊடங்களில் விமர்சித்தனர். ``உடலில் மாட்டுச் சாணம் பூசி குளித்தால் கொரோனா ஒழியும் என்று சொல்வது எப்படி மூடநம்பிக்கையே, அதுபோல பா.ஜ.க-வின் மற்றொரு அறிவியல் பார்வையற்ற செயல் என கேலி" செய்தனர்.

கொரோனா: `பொது இடங்களில் ஆவி பிடித்தல் ஆபத்திலேயே முடியும்!' - எச்சரிக்கும் மருத்துவர்

ஆனால், இதற்கு அடுத்த நாள் தி.மு.க அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவ முகாமை திறந்த வைத்தனர். அதில், ஸ்டீமர் இயந்திரம் மூலம் ஆவி பிடிக்கும் சிகிச்சைப் பிரிவையும் ஆய்வு செய்தனர். இந்த படங்கள் வெளியாகி, விமர்சனத்துகுள்ளானது. அமைச்சர்களே பொது இடங்களில் ஆவி பிடிப்பதை ஊக்குவிப்பதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. தி.மு.க-வினர் சிலரும் தங்கள் அமைச்சர்களை விமர்சித்தனர்.

நீராவி சிகிச்சை மையத்தை ஆய்வு செய்யும் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி
நீராவி சிகிச்சை மையத்தை ஆய்வு செய்யும் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி

இந்த நிலையில் மின்சாரத்தில் இயங்கும் ஆவி பிடிக்கும் இயந்திரத்தை, பல இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யபப்ட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தமிழ்நாடு ரயில்வே போலீஸ் மூலம் அப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பலரையும் அதிரவைத்தது. அவற்றில் பொதுமக்கள் பலர் அடுத்தடுத்து ஆவிப் பிடித்தனர். இவை கொரோனாவத் தடுக்காது, மாறாக கொரோனா ஹாட்ஸ்பாட்களாக மாறும் அபாயம் இருப்பதாக கருத்துக்கள் பகிரப்பட்டன.

ஆவி பிடித்தல் நம்மை கொரோனாவிலிருந்து காக்குமா... மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதைத் தொடர்ந்து நேற்று, ஊடக ஆசிரியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, ஊடகங்களில் பரப்புரை செய்ய வேண்டிய சில வாசகங்களை அரசு வெளியிட்டது. அதில் ` நீராவி பிடி, கொரோனாவை விரட்டி அடி’, ` தினசரி நீராவி பிடிப்போம் கொரோனாவைத் தடுப்போம்’ போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. ```நீராவி பிடிப்பதை அரசு பரிந்துரைப்பதால் தான் பொது இடங்களில் ஆவி பிடிக்கும் செயல்களில் மக்கள் ஈடுபடுகின்றனர்’’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்க ஏற்பாடு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்க ஏற்பாடு

``நீராவிப் பிடித்தால் கொரோனாவை விரட்டி அடிக்கலாம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், அரசு நீராவி பிடிக்க அறிவுறுத்துவது சரியா?” என்ற கேள்வி எழுப்பபப்ட்டது. `` நீராவி பிடித்தால் கொரோனாவை தடுக்கலாம் என்று நம்பி, நீராவி பிடித்த தைரியத்தில் மக்கள், ஊரடங்கை அலட்சியம் செய்து வெளியில் சுற்றும் வாய்ப்பிருக்கிறது” என்ற கருத்தும் கூறப்பட்டது.

தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார், வெளிப்படையாகவே அரசு செய்வது தவறு என ட்விட்டரில் பதிவிட்டார். `` தி.மு.க ஒரு முற்போக்கு இயக்கம். அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத சித்தா மருத்துவ முறைகளை கோவிட் நோய்க்கு பயன்படுத்துவதில் அரசு ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. நீராவி பிடித்தல் கொரோனாவை தடுக்கும் என்று எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை. இது போன்ற செயல்கள், பெருந்தொற்று காலத்தில் மனித வளத்தை வீணடிப்பதாக இருக்கிறது.” என்று பதிவிட்டிருக்கிறார்.

`` ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு வாரத்தில் பெற்ற நல்ல இமேஜை தக்க வைக்கிறோம் என்ற பெயரில், அறிவியல்பூர்வமற்ற செயல்களில் அரசு ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்” என்ற விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதில் ஆச்சரியம் என்னவெனில், இந்த விமர்சனங்களை வைத்தவர்களில் தி.மு.க-வினர் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக அரசு சித்த மருத்துவத்தை ஊக்குவிப்பதை தொடக்கத்திலிருந்தே தி.மு.க-வின் இணைய உடன்பிறப்புகள், தி.மு.க ஆதரவு மருத்துவர்கள் சிலர் எதிர்த்து வருகின்றனர். அரசு ஒருபுறம், அமைச்சர்கள் மறுபுறம், கழக உடன்பிறப்புகள், ஆதரவாளர்கள் எதிர்புரம், கண்மூடித்தனமாக ஆபத்தான வழிகளில் ஆவி பிடிக்கும் மக்கள் ஒருபுறம் என களேபரங்கள் நீடிக்க இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதில் இந்த விவகாரத்தை, முடிவுக்கு கொண்டு வந்தது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது `` பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் நோய் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே மக்கள் இது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்” என்று தெளிவுபடுத்தினார்.

இருப்பினும், ஆவி பிடித்தல், சித்த மருத்துவ முறைகளை அரசு பரிந்துரைப்பதை நிறுத்த வேண்டும் என்ற குரல் தி.மு.க இணைய முகாமில் இருந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. உடன்பிறப்புகளின் மறுதரப்பு அதை எதிர்த்து கருத்து தெரிவிக்க, விவாதம் நீடித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு