Published:Updated:

ஊரடங்கில் பசிபோக்கும் அன்பு சுவர் - நெகிழவைக்கும் கும்பகோணம் இளைஞர்களின் சேவை!

உணவு எடுக்கும் மூதாட்டி
உணவு எடுக்கும் மூதாட்டி ( ம.அரவிந்த் )

கொரோனா ஊரடங்கால் வருமானத்தை இழந்தவர்கள், பட்டினியாகக் கிடந்தாலும் பரவாயில்லை என யாரிடமும் கேட்கச் சங்கடப்பட்டுக்கொண்டு இருந்துவிடுவார்கள். இது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்க, எல்லோரும் பசியாறச் சாப்பிடும் வகையில் உணவு கொடுக்கும் இளைஞர்கள்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கால் வேலையிழந்த பலர் வருமானமின்றி தவிக்கின்றனர். பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், எந்தச் சங்கடமும் நேராமல் உணவின்றித் தவிப்போரின் பசியைப் போக்கும்விதமாக கும்பகோணத்தில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து வித்தியாசமான முறையில் உணவு கொடுத்துவருவது நெகிழ்ச்சியடையவைத்திருக்கிறது.

கொரோனா லாக்டெளனில் பசி போக்க வைக்கப்பட்டுள்ள உணவு
கொரோனா லாக்டெளனில் பசி போக்க வைக்கப்பட்டுள்ள உணவு

கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து, `யார் கொடுக்குறதுன்னும் தெரியக் கூடாது, யாரும் பசியாகவும் இருக்கக் கூடாது' என்ற எண்ணத்தில், `அன்பு சுவர்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் உணவு சமைத்து பொட்டலமாக ரெடி செய்து ஓர் இடத்தில் வைத்துவிடுகின்றனர். உணவு தேவைப்படுபவர்கள் தாங்களாகப் போய், தங்களுக்கு தேவையான அளவு சாப்பாட்டை எடுத்துக்கொள்ளலாம். இளைஞர்கள் செய்துள்ள இந்த ஏற்பாட்டுக்குப் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

இது குறித்து இளைஞர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளரான காளிதாஸ் என்பவரிடம் பேசினோம்.``கொரோனா பரவலுக்கு முன்பாகவே கும்பகோணத்தில் ஆதரவற்ற பலர் சாலையோரத்தில் வசித்துவந்தனர். தற்போது கொரோனா லாக்டெளன் அமலில் இருப்பதால் அவர்கள் உணவின்றி தவிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இதேபோல் தினக்கூலி வேலைபார்த்து வந்த பலர் வேலையிழந்துள்ளனர். திடீரென அவர்களுக்கு வருமானம் நின்றதால் என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்து நிற்கக்கூடிய நிலை உண்டானது.

உணவு
உணவு

பட்டினியாகக் கிடந்தாலும் பரவாயில்லை என, யாரிடமும் கேட்க சங்கடப்பட்டுக் கொண்டு பலர் இருந்துவிடுவர். இது போன்ற சூல்நிலையைத் தவிர்க்கவும், எல்லோரும் பசியாறச் சாப்பிடும் வகையில், உணவு கொடுக்க ஏற்பாடு செய்தோம். இதை யார் கொடுக்கிறார்கள் என்பது சாப்பாட்டை எடுத்துக்கொள்பவர்களுக்குத் தெரியாத வகையில் இதற்கான ஏற்பாட்டைச் செய்ய நினைத்து பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து `அன்பு சுவர்’ என்ற அமைப்பை தொடங்கினோம்.

தினமும் மதியம் 100 பேருக்கு தயிர், தக்காளி, எலுமிச்சை, சாம்பார் உள்ளிட்ட சாதங்கள் சமைத்து, அவற்றைப் பொட்டலங்களாக ரெடி செய்து சாரங்கபாணி கோயில் சந்நதி தெருவிலுள்ள கணிதமேதை ராமானுஜன் நினைவிடம் அருகே, மரச் சட்டகம் ஒன்றைவைத்து அதில் அடுக்கி வைத்துவிடுகிறோம். சாதத்துக்கான கூட்டு மற்றும் தண்ணீர் பாட்டிலையும் வைத்துவிடுகிறோம். அந்த இடத்தில் நாங்கள் யாருமே இருக்க மாட்டோம்.

கரூர்: 'தளபதி கிச்சன்; மூன்று வேளை இலவச உணவு!'- தொடங்கிவைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

பசியில் இருப்பவர்கள் அந்த இடத்துக்கு வந்து தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொண்டு செல்லாம். சங்கடத்தில் தவிக்கும் பலருக்கு இந்த முறை வரப்பிரசாதமாக இருக்கிறது. மதியம் 12 மணிக்கு உணவுப் பொட்டலத்தை வைத்துவிடுவோம். தேவைப்படுவோர் வந்து எடுத்துச் செல்கின்றனர். மூன்று நாள்களாக இதைச் செய்து வருகிறோம். ஒருவேளை உணவு மிச்சப்பட்டால் அவற்றை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். இதற்கு தினமும் ரூ.2,000 செலவாகிறது. இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள் எடுக்கலாம் என்பதே இதன் நோக்கம். வயிறு பசிக்கும்போது யாரும் தயங்கி நிற்கக் கூடாது என்பதை உணர்ந்தவர்கள் இணைந்ததால், இது நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல இளைஞர்கள் இதற்கான நிதி உதவியைச் செய்கின்றனர். கொரோனா லாக்டெளனுக்குப் பிறகும் இதைத் தொடரவிருக்கிறோம்" என்றார்.

இளைஞர்களின் இந்தச் சேவை பாராட்டுதலுக்குரியது.

அடுத்த கட்டுரைக்கு