Published:Updated:

கொரோனா... இடம் மாறிய தொழிலாளர்கள்! - தடுமாறுகிறதா தமிழகம்..?

இடம் மாறிய 
தொழிலாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
இடம் மாறிய தொழிலாளர்கள்

தமிழகத்தில் தொழில் துறையே முடங்கிவிடும் என்று பயப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்காது!

கொரோனா... இடம் மாறிய தொழிலாளர்கள்! - தடுமாறுகிறதா தமிழகம்..?

தமிழகத்தில் தொழில் துறையே முடங்கிவிடும் என்று பயப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்காது!

Published:Updated:
இடம் மாறிய 
தொழிலாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
இடம் மாறிய தொழிலாளர்கள்
கொரோனாநோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களின் வேதனையைவிட, ஊரடங்கு நடவடிக்கைகளால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை அதிகம்.

`நாடு முழுவதுமுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 கோடி’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். `பெரும்பாலான வெளி மாநிலத் தொழிலாளர்கள் இல்லாத இந்தச் சூழலில், தொழில்துறை எப்படிச் செயல்படப்போகிறது...’ என்பது முக்கியக் கேள்வி. காரணம், அமைப்புசாரா தொழில்துறைகளில் ஏற்கெனவே நிலவிவந்த ஆள் பற்றாக்குறையை இதுநாள் வரையிலும் ஈடுசெய்துவந்தவர்கள் வெளி மாநிலத் தொழிலாளர்கள்தான். இந்த நிலையில், ‘நமது மாநிலத்திலுள்ள தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தொழிலாளர்கள் கிடைக்க என்ன செய்யப் போகிறோம்’ என்ற கேள்வியை சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் மா.விஜயபாஸ்கரிடம் கேட்டோம்.

கொரோனா... இடம் மாறிய தொழிலாளர்கள்! - தடுமாறுகிறதா தமிழகம்..?

“வட மாநிலத் தொழிலாளர்கள் அனைவருமே சொந்த ஊர் செல்லவில்லை. கணிசமான பேர் இன்னும்கூட தமிழகத்தில்தான் இருந்துவருகின்றனர். கொரோனா பாதிப்பால் சந்தையின் நிலையும் மோசமாகத்தான் இருக்கிறது. எனவே, இப்போதைய முழு ஊரடங்கு முடிந்த பின்னரும்கூட, உடனே அனைத்துத் தொழில் நிறுவனங்களும் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்துவிடும் என்று சொல்ல முடியாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருப்பூர் ஆடை ஏற்றுமதித் தொழிலைப் பொறுத்தவரை, கடந்த மே மாதம் வரையிலான கணக்கெடுப்பில், கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு வெளிநாட்டு ஏற்றுமதி என்பது 70% வரை குறைந்துள்ளது. இது மத்திய அரசின் புள்ளிவிவரம். தோல் உற்பத்தித் தொழிலிலும்கூட 62% அளவுக்குத் தேவை குறைந்திருக்கிறது. எனவே, ஊரடங்கு முடிந்துவிட்டாலும்கூட தொழில் நிறுவனங்கள் 100% உற்பத்தியைத் தொடங்கிவிட முடியாது. தொழில்துறை உற்பத்தி என்பது ஏற்கெனவே இருந்த நிலைக்கு மாற இன்னும் பல மாதங்கள் ஆகும். இது உள்நாட்டுச் சந்தை மட்டுமல்லாமல், வெளிநாட்டுச் சந்தைக்கும் பொருந்தும்.

கொரோனா... இடம் மாறிய தொழிலாளர்கள்! - தடுமாறுகிறதா தமிழகம்..?

அடுத்ததாக, புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை பார்த்து வரும் துறை என்றால், அது கட்டுமானம் சார்ந்த தொழில்கள்தான். இந்தத் துறையை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். அதாவது, ஆயிரக்கணக்கிலான குடியிருப்புகளைக்கொண்ட அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தரும் வெளிமாநில நிறுவனங்கள் மற்றும் நெடுஞ்சாலைப் பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் ஒரு பிரிவு. இவர்கள் தங்கள் துறை சார்ந்த பணிகளுக்குத் தேவையான ஆட்களை இவர்களே வெளி மாநிலங்களிலிருந்து அழைத்து வந்துவிடுகிறார்கள். இன்னொரு பிரிவு என்பது, தனிப்பட்ட நபர்களுக்குச் சொந்தமான வீடு கட்டும் பணி அல்லது கிராமப்புறச் சாலைப் பணிகள் என்பதாக இருக்கிறது. இந்தப் பிரிவு கட்டுமானங்களில் பெரும்பாலும் நம் உள்ளூர் தொழிலாளர்கள்தான் வேலைபார்த்து வருகிறார்கள்.

இதில், முதலாவது பிரிவினர் இன்றைய சூழலில் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். அதாவது, `பீகார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் மிகக் கடினமாக உழைக்கிறார்கள்’ என்று இவர்கள் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.

எது எப்படி இருந்தாலும், தற்போதைய சூழலில் கட்டுமானத்துறை சிறப்பாக இல்லை. காரணம், `எந்தவொரு பணி வாய்ப்புமே நிரந்தரமற்றது’ என்ற புதிய சூழல் உருவாகியிருப்பதால், நடுத்தர மக்களின் அடிப்படை வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே, நீண்டகால முதலீடாக புதிய வீடு வாங்கவோ, விற்கவோ முடியாத சூழலில்தான் பலர் இருக்கிறார்கள். இப்படிப் புதிய வீடுகளுக்கான தேவை அதிகரிக்காதபோது, கட்டுமானத்துறையும் கடுமையாக பாதித்திருக்கிறது. `இந்தச் சூழல் மாற்றமடைய இன்னும் ஒரு வருட காலம் வரைகூட ஆகலாம்’ என்றுதான் துறைசார்ந்த நிபுணர்களும் கூறுகிறார்கள்.

அடுத்ததாக ஆட்டோமொபைல் துறை... கணிசமான வேலை வாய்ப்புகளை உள்ளடக்கிய துறை இது. ஆனால், இங்கேயும்கூட இரு சக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனத்தையோ புதிதாக ஒரு பெருந்தொகையை முதலீடு செய்து வாங்கியாக வேண்டிய சூழலில் இன்றைக்கு யாரும் இல்லை. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும்கூட இதே மந்தநிலைதான் நிலவுகிறது. எனவே, வெளிநாட்டுச் சந்தையானாலும், உள்நாட்டுச் சந்தையானாலும் ஆட்டோமொபைல் துறையில் தேவை ஏற்படும் சூழல் மிகக் குறைவுதான். என்றாலும், ஆறு மாத காலத்தில், ‘வேலைக்கு ஆள் தேவை’ என்ற நிலை வரத்தான் செய்யும். ஆனால், அது நாம் எதிர்பார்க்கக்கூடிய அளவில் எக்கச்சக்கமாக இருக்காது.

கொரோனா... இடம் மாறிய தொழிலாளர்கள்! - தடுமாறுகிறதா தமிழகம்..?

`புலம்பெயர் தொழிலாளர்கள்’ எனப்படும் வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் செய்துவரும் வேலைகளை இரண்டு வகைகளாகப் பிரித்துவிடலாம். முதலாவது, சம்பளம் குறைவான தொழில்கள். இந்த வேலைகளை நம்மவர்கள் செய்ய மாட்டார்கள். அடுத்து, கடினமான வேலைகள். உதாரணமாக, பாதுகாவலர் பணிக்கு (Security Guards) நல்ல சம்பளம் கிடைக்கிறது என்றாலும்கூட, 12 மணி நேரம், இரவுப் பணி போன்ற சிரமங்களைப் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தப் பணிகளைச் செய்ய ஆர்வப்படுவதில்லை. எனவே, அஸ்ஸாம், ஒடிசா என வெளிமாநில இளைஞர்கள்தான் அதிக அளவில் இது போன்ற பணிகளைச் செய்துவருகிறார்கள்.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, சென்னையில் வேலை செய்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற மாவட்டத் தொழிலாளர்களும்கூட கொரோனா பீதியில் அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். ஏனென்றால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதால், வருமானமின்றித் தவிக்கும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். இதையடுத்து, தமிழக இளைஞர்களும்கூட தாங்கள் இதுவரை விரும்பாத கடினமான பணிகளைச் செய்தாக வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இல்லாததால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாகத் தொழில் துறையே முடங்கிப்போய்விடும் என்று பயப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்காது!’’ என்றார் நம்பிக்கையோடு.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு வந்துவிட்டால் பிரச்னை இல்லை. அது நடக்காமல் போனால், அதற்கான மாற்றுத் திட்டங்களை இப்போதே தயார் செய்ய வேண்டியது அவசியம்!

“வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவார்கள்!’’

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரான ராஜா சண்முகத்திடம் பேசினோம். “திருப்பூரைப் பொறுத்தவரை, 40 சதவிகிதத் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களில் 90% பேர் அவரவர் சொந்த ஊர்களுக்குப் போய்விட்டார்கள். கொரோனா பாதிப்பெல்லாம் முடிந்து சகஜநிலை திரும்பிய பிறகுதான் இவர்களெல்லாம் மறுபடியும் தமிழ்நாட்டுக்குத் திரும்புவார்கள். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிலும்கூட கணிசமான பேர் அவரவர் சொந்த மாவட்டங்களுக்குச் சென்று, திரும்பி வர முடியாமல்தான் இருக்கின்றனர்.

கொரோனா... இடம் மாறிய தொழிலாளர்கள்! - தடுமாறுகிறதா தமிழகம்..?

கொரோனா என்பது உலகளாவிய பிரச்னை. திருப்பூர் துணி உற்பத்தித் தொழிலின் ஏற்றுமதி என்பது ஐரோப்பிய நாடுகளை நம்பியுள்ளது. அங்கே கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால், ஏற்கெனவே ஏற்றுமதியான பொருள்களையே அங்கே விற்க முடியாத சூழல். நிலைமை சீராக இன்னும் ஆறு மாதங்கள் ஆகலாம். அதுவரை திருப்பூர் தொழிற்சாலைகள் முழு வேகத்தில் செயல்பட முடியாது.

வழக்கமாகவே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களிலும் பின்னலாடைத் தொழில் மந்தமாகத்தான் இருக்கும். இப்போது வெறுமனே 40% தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கிவருகின்றன. இவற்றில் வேலை செய்வதற்கு திருப்பூரில் தங்கியிருக்கும் நம்மூர் ஆட்களே போதுமானவர்களாக இருக்கிறார்கள். செப்டம்பருக்குப் பிறகுதான் இந்தச் சூழல் அனைத்தும் மாறும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் ஆர்டர்கள் அதிகரிக்கும்; போக்குவரத்து உள்ளிட்ட சகஜநிலை திரும்பும். வெளிமாநிலத் தொழிலாளர்களும் தமிழ்நாடு திரும்புவார்கள்.

பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம் என வட மாநிலத் தொழிலாளர்கள் எல்லோருமே தமிழ்நாட்டில்தான் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள். வட மாநிலங்களில் இன்றைக்கும்கூட ஆண்டான்-அடிமை முறைதான் இருந்துவருகிறது. ஆனால், நம்மூரில் சாதி, மதம் என எந்தப் பாகுபாடுமின்றி சமத்துவமாகப் பார்ப்பதால், அந்தத் தொழிலாளர்களுக்கும் திருப்பூர்தான் சொர்க்கபூமியாக இருக்கிறது. எனவே, சகஜநிலை திரும்பியதும் வட மாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் நிச்சயம் திருப்பூர் திரும்பிவிடுவார்கள்.’’