Published:Updated:

மகாராஷ்டிரா: குறையும் தொற்று; ஆனால் அதிகரிக்கும் பலி - ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா வாகன கட்டுப்பாடு
கொரோனா வாகன கட்டுப்பாடு

மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அதோடு ஏற்கெனவே இருக்கும் கட்டுப்பாடுகள் வரும் ஜூன் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் முதல் நாட்டிலேயே கொரோனா தொற்று மகாராஷ்டிராவில்தான் அதிக அளவில் பரவியது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பொதுமுடக்கத்துக்கு நிகரான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் கொரோனா படிப்படியாகக் குறைய ஆரம்பித்துள்ளது. மும்பையில் ஏறத்தாழ கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் வரும் 15-ம் தேதி வரை இருக்கும். இந்தக் கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை இருந்துவந்தது.

இரவு பொதுமுடக்கத்தில் மும்பை
இரவு பொதுமுடக்கத்தில் மும்பை

இதையடுத்து கொரோனாவை மேலும் கட்டுப்படுத்தும்விதமாக தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளை வரும் ஜூன் 1-ம் தேதி வரை மாநில அரசு நீட்டித்திருக்கிறது. அண்டை மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மகாராஷ்டிராவுக்குள் வேறு மாநிலத்திலிருந்து வருபவர்கள் 48 மணி நேரத்துக்கு முன்பு கட்டாயம் கொரோனா சோதனை செய்து, நெகடிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.

நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து வந்தாலும் இந்தச் சோதனைச் சான்றிதழ் கட்டாயம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவால் மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ள மும்பைத் தமிழர்கள், மீண்டும் மகாராஷ்டிராவுக்குச் செல்லும்போது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சரக்குகளை எடுத்து வரும் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள்கூட, இந்தச் சான்றிதழைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும், சான்றிதழ் ஏழு நாள்களுக்குச் செல்லுபடியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

``மாவட்ட நிர்வாகம் இதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். உள்ளுர் மார்க்கெட், ஏபிஎம்சி மார்க்கெட்களில் தொடர்ந்து கொரோனா விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும், நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் பட்சத்தில் உள்ளூர் நிர்வாகம் மேலும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் விற்பனைக்குத் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

மஹாராஷ்டிரா: மராத்தா சமூகத்துக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

வங்கி ஊழியர்கள் தங்களுக்கு புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதோடு மாநிலம் முழுவதும் கடை உரிமையாளர்கள் தங்களையும் காலையில் சில மணி நேரமாவது வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையையும் மாநில அரசு நிராகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால், லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்று கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா நோய் தொற்று குறைந்துவந்தாலும், இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 816 பேர் இறந்துள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனாவுக்கு 78,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு