Published:Updated:

நெல்லை: கூடங்குளத்தில் 164, இஸ்ரோ மையத்தில் 132 பேருக்கு கொரோனா-ஊர் திரும்பும் வடமாநிலப் பணியாளர்கள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா பரவல் வேகம் பிடித்திருப்பதால், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தப் பணியாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஆர்வம்காட்டிவருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் கொரோனோ நோய்த் தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறது. அதனால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

வெளி மாநிலப் பணியாளர்கள்
வெளி மாநிலப் பணியாளர்கள்
file picture

நெல்லை மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலின் வேகம் அதிகரித்திருப்பதால், இங்கு தங்கிப் பணி செய்துவரும் வெளி மாநிலப் பணியாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஆர்வம்காட்டிவருகிறார்கள். குடும்பத்துடன் தங்கியிருந்த பலர் வீடுகளைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரியில் இஸ்ரோ மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் திரவ இயக்க உந்தும வளாகம் மற்றும் தனியார் நிறுவனங்கள், காற்றாலைகள் ஆகியவற்றில் 20,000-க்கும் அதிகமான வடமாநிலத் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருகிறார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம்

கொரோனா அச்சம் காரணமாக அவர்களில் பலர் சொந்த ஊருக்குச் செல்ல ரயில்களில் டிக்கெட் புக் செய்துவிட்டனர். இந்தநிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இன்று கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேரும், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகத்தில் பணியாற்றும் 132 பேரும் அடங்குவர். அத்துடன், காவல்கிணறு பகுதியிலுள்ள தனியார் நிறுவனப் பணியாளர்கள் 99 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மகேந்திரகிரி இஸ்ரோ மைய வளாகம்
மகேந்திரகிரி இஸ்ரோ மைய வளாகம்

நெல்லை மாவட்டத்தில் தற்போது 2,381 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த ஆண்டு தொடங்கி மாவட்டத்தில் இதுவரை 20,333 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 225 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு