Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: `3-வது நாளாக 10,000-ஐ தாண்டிய கொரோனா’ - `மக்களிடம் பயமில்லை’ என்கிறது மத்திய அரசு

தடுப்பூசி
தடுப்பூசி

மகாராஷ்டிராவில் தொடர்ந்து 3=வது நாளாக கொரோனாவின் பாதிப்பு 10,000-க்கும் மேல் இருந்துவருகிறது. இது குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்திருக்கிறது. மும்பையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

கொரோனா தொற்று நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் குறைந்திருந்தாலும் மகாராஷ்டிராவை மட்டும் விட்டபாடில்லை. தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 10,000-க்கும் மேல் இருந்துவருகிறது. நேற்று 11,141 என்ற எண்ணிக்கையில் கொரோனா தொற்று இருந்தது. முந்தைய இரண்டு நாள்களான வெள்ளி, சனிக்கிழமைகளில் 10,216, 10,118 என்ற எண்ணிக்கையில் இருந்தது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மும்பையிலும் நேற்று 1,188 பேருக்கு கொரோனா தொற்று புதிதாகப் பரவியது. கடந்த நான்கு நாள்களாக மும்பையில் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

100-வது பிறந்தநாள் கொண்டாடும் பிரபாவதி
100-வது பிறந்தநாள் கொண்டாடும் பிரபாவதி

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவிலுள்ள கொரோனா எண்ணிக்கை இந்தியாவின் புதிய கொரோனா தொற்று அளவில் 59 சதவிகிதம். மாநிலத்தில் மும்பை, புனே, நாக்பூர், அமராவதி, தானே ஆகிய நகரங்களில்தான் அதிகப்படியான கொரோனா தொற்று இருக்கிறது. இது குறித்து மத்திய அரசு மிகவும் கவலை தெரிவித்திருக்கிறது. கொரோனா அதிகமாக இருக்கும் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மத்திய குழு ஆய்வு நடத்தி, மாநில அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.

பொதுமக்களிடம் கொரோனா தொடர்பான பயம் இல்லாமல் இருப்பதே இந்த அளவுக்கு கொரோனா அதிகரிக்கக் காரணம் என்று அந்தக்குழு தெரிவித்திருக்கிறது. அதோடு சமீபத்திய பஞ்சாயத்து தேர்தல், திருமணங்கள், பள்ளிகள் திறப்பு, பொதுப் போக்குவரத்தில் இருக்கும் அதிகப்படியான கூட்டம் போன்றவையும் கொரோனா தொற்று அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிப்பதிலும், கண்காணிப்பு மற்றும் சோதனை போன்றவற்றைத் தீவிரப்படுத்தும்படியும் மாநில அரசை மத்திய குழு கேட்டுக்கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் பகுதியில் சோதனையை நூறு சதவிகிதமாக மாற்றும்படியும், ஐந்து நாள்களுக்கு ஒரு முறை சோதனை மேற்கொள்ளும்படியும், வீட்டில் தனிமையில் இருப்பவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதியிலும் கொரோனா வேகமாகப் பரவுகிறது. எனவே, எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்தியக் குழு கேட்டுக்கொண்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

மும்பை, விதர்பா, புனே மண்டலங்களில் அதிகப்படியான கொரோனா தொற்று இருப்பதால், கடந்த 10 நாள்களில் மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் மும்பையில் மீண்டும் புறநகர் ரயில்களில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது குறித்து மாநில அரசு பரிசீலித்துவருகிறது. கொரோனாவில் ஏற்கேனவே ஏராளமானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர். மீண்டும் கட்டுபாடுகள் கொண்டுவந்தால் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்று அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

100 வயது மூதாட்டிக்குத் தடுப்பூசி!

இதற்கிடையே முதியோர்களுக்கு மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. மும்பை விலே பார்லே பகுதியைச் சேர்ந்த 100 வயது பிரபாவதி என்ற பெண், தனது 100-வது பிறந்தநாளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தன் மகன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸிலுள்ள கொரோனா சென்டரில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு கர்நாடகா மாநிலம், பெல்லாரியிலிருந்து மும்பை வந்த பிரபாவதி கடந்த 74 ஆண்டுகளில் பல இடங்களில் மாறி மாறி வசித்துவிட்டு இப்போது விலே பார்லேயில் வசித்துவருகிறார். மும்பையில் தினமும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருவது குறிப்பிடதக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு