சினிமா
Published:Updated:

குழந்தைகள் பிறப்பைக் குறைத்த கொரோனா!

குழந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தை

இந்த ஆண்டு மூன்று முதல் ஐந்து லட்சம் குழந்தைகள் குறைவாகப் பிறக்கும்’’ என ஆரூடம் சொன்னார்கள்.

30 வயதை நெருங்கும் பவித்ராவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட பேசி முடிவாகும் நேரத்தில், கொரோனாவால் ஊரடங்கு அமலானது. ஓராண்டு முடிந்து இன்னமும் அந்தத் திருமணம் முடிவாகவில்லை.

கொரோனா அச்சம் உலகை ஆக்கிரமிப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் நிவேதாவுக்கும் தர்ஷனுக்கும் திருமணம் முடிந்திருந்தது. தனிக்குடித்தனம் வந்திருந்தார்கள். தர்ஷனின் முதிய பெற்றோர் கொரோனாச் சூழல் காரணமாக வீட்டுக்குள் முடங்க நேர்ந்தது. அவர்களைப் பராமரிப்பதற்காக தர்ஷனும் நிவேதாவும் அவர்களுடன் வந்து இணைந்துவிட்டனர். அலுவலக வேலைகளும் வீட்டு வேலைகளும் அழுத்தம் சேர்க்க, புதுத் திருமணத்தின் மகிழ்ச்சி அவர்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை.

தீபாவும் மகேஷும் காதலித்தனர். ‘வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கி திருமணம் செய்துகொள்ளலாம்’ என நினைத்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு அமலானது. இருவரும் சந்திக்கும் வாய்ப்பே குறைந்துபோனது. வீட்டில் முடங்கிய சூழலில், போனில் பேசிக்கொள்ளவும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. வாட்ஸப் சாட்டில் நடந்த உரையாடலில் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு வந்துவிட, லவ் பிரேக் அப் ஆகிவிட்டது.

குழந்தைகள் பிறப்பைக் குறைத்த கொரோனா!

கொரோனா நிகழ்த்திய பொருளாதார பாதிப்புகள் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். அதேபோல உறவுகளிலும் உணர்வுகளிலும் அது நிகழ்த்திய பாதிப்பும் பெரிது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இந்தியாவில் மட்டுமன்றி, உலகம் முழுக்கவே இது புதிய இயல்பாக மாறியது. ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்ற நடைமுறை பரவலாகப் பல துறைகளுக்கும் அறிமுகமானது. எல்லோரும் 24 மணி நேரமும் வீட்டுக்குள் இருந்தனர்.

தம்பதிகள் வீட்டுக்குள் எப்போதும் இணைந்திருக்கும்போது, இயல்பாகவே ரொமான்ஸ் பூக்கும். எனவே, அப்போது சமூக வலைதளங்களில் நகைச்சுவையாகவும் சீரியஸாகவும் பேசப்பட்ட ஒரு விஷயம், ‘அடுத்த ஒன்பது மாதங்களில் குழந்தைப் பிறப்பு தாறுமாறாக எகிறப் போகிறது’ என்பதே! ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் தகவல் தலைகீழாக இருக்கிறது. ‘கொரோனா ஊரடங்கு உலகெங்கும் பல நாடுகளில் குழந்தைப்பிறப்பைத் தாறுமாறாகக் குறைத்திருக்கிறது’ என்பதே அது.

ஊரடங்கு அமலானபோது, இந்தியாவை நினைத்துதான் ஐக்கிய நாடுகள் சபை அதிகம் கவலைப்பட்டது. ஊரடங்கு காரணமாக இதர சுகாதார சேவைகள் பெரிதும் தடைப்பட்டன. கருத்தடை அறுவை சிகிச்சை, கருத்தடை மாத்திரைகள் என எல்லாமே கிடைப்பது சிக்கலானது. காண்டம்கூட கிடைக்கவில்லை. குடும்பக் கட்டுப்பாட்டு சேவை முடங்கியதால், குடும்பங்கள் பெருகும் என ஐ.நா அச்சம் கொண்டது. குறிப்பாக இந்தியாவில் மிக அதிக குழந்தைப்பேறுகள் நிகழும் என கடந்த மே மாதம் ஐ.நா சபை கணித்தது.

குழந்தைகள் பிறப்பைக் குறைத்த கொரோனா!

இந்தியா மட்டுமன்றி பெரும்பாலான ஆசிய நாடுகள் குறித்தும் இந்த அச்சம் இருந்தது. இந்தோனேஷியாவில் ஊரடங்கு நாள்களில் கொரோனா விழிப்புணர்வைவிட குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணர்வுப் பிரசாரமே அதிகம் செய்யப்பட்டது. சுகாதாரத் துறை அதிகாரிகள் வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டிக்கொண்டு வீதிவீதியாகச் சென்றனர். ‘கல்யாணம் செய்துகொள்ளுங்கள். ஆனால், கர்ப்பம் அடையாதீர்கள். மனக்கட்டுப்பாட்டுடன் இருங்கள்’ என்று அறிவிப்பு செய்தனர். மருத்துவமனைகளுக்கோ, மருந்துக் கடைகளுக்கோ மக்கள் போக முடியாத சூழலில், சுமார் ஒரு கோடிப் பேர் கருத்தடை சேவைகளைப் பெற முடியாத சூழல் அந்த நாட்டில் ஏற்பட்டது.

அதே சூழல்தான் இந்தியாவிலும் இருந்தது. அதனால் நம் சுகாதாரத் துறையினருக்கும் கவலை அதிகரித்தது. ஆனால், ஊரடங்கு அறிவித்து ஓராண்டு கடந்த நிலையில் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் சில உண்மைகளை உணர்த்துகின்றன.

மகப்பேறு மருத்துவமனைகளுக்கு பிரசவத்துக்காக வரும் தாய்மார்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பல மருத்துவமனைகளில் கொரோனா காலத்துக்கு முன்பு நிகழ்ந்ததில் பாதிப் பிரசவங்களே இப்போது நிகழ்கின்றன. இந்தியா முழுக்கவே இதுதான் சூழல்.

அபார்ஷன் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 40 வயதுப் பெண்மணிகள்கூட அபார்ஷனுக்காக வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு அறிவித்து ஓராண்டு கடந்த பின்பும், மருத்துவப் பரிசோதனைகளுக்காகப் பதிவு செய்துகொள்ளும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை இன்னும் பழைய இயல்புக்கு வரவில்லை.

வேறு வேலைகள் பெரிதாக ஏதுமின்றி ஒரே கூரையின் கீழ் தம்பதிகள் அடைபட்டுக் கிடந்தும், ஏன் குழந்தைப்பேறு அதிகரிக்கவில்லை? பல காரணங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

கொரோனா போன்ற ஒரு நோய்த்தொற்றும் ஊரடங்கும் மக்களுக்குப் புதிய அனுபவம். இது தந்த அச்சம், இயல்பு வாழ்க்கையைக் குலைத்துவிட்டது. வேலை பறிபோனது, வருமானம் குறைந்தது எல்லாமே, ‘இன்னொரு உயிரை வளர்த்து ஆளாக்க நம்மால் முடியுமா?’ என்ற கேள்வியை எழுப்பியது. ‘மற்ற தேவைகளுக்காக மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்க்கவும்’ என்று அரசே கேட்டுக்கொண்டபிறகு, இந்தச் சூழலில் கர்ப்பம் தரிப்பது பாதுகாப்பில்லை என்ற உணர்வு வந்துவிட்டது.

குழந்தை பிறந்தாலும், அதை இயல்பாக வளர்க்கும் நிலைமை இல்லை. குழந்தைகளைப் பராமரிக்கும் மையங்கள், பள்ளிகள் என எல்லாமே மூடப்பட்ட காலத்தில், ‘நமக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, இதற்குமுன் எல்லோருக்கும் கிடைத்த அதே பராமரிப்பு கிடைக்குமா’ என்ற சந்தேகம் எல்லோருக்கும் வந்தது. இந்த எல்லாம் இணைந்தே குழந்தைப் பிறப்புகளைக் குறைத்திருக்கின்றன.

அமெரிக்கர்கள் மட்டும் இதை முன்கூட்டியே கணித்திருந்தனர். அமெரிக்காவின் புரூக்ளின் இன்ஸ்டிட்யூட் பொருளாதார நிபுணர்கள், ‘`இந்த ஆண்டு மூன்று முதல் ஐந்து லட்சம் குழந்தைகள் குறைவாகப் பிறக்கும்’’ என ஆரூடம் சொன்னார்கள்.

அமெரிக்காவில் 1929-ம் ஆண்டிலும், 2008-ம் ஆண்டிலும் மாபெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது குழந்தைப் பிறப்புகள் குறைந்தன. கூகுள் தேடல் தகவல்களைப் பரிசீலித்தபோது, கர்ப்ப கால பரிசோதனை, பிரசவம் போன்றவை பற்றி மக்கள் தேடுவதும் குறைந்திருந்தது. அதையெல்லாம் வைத்தே, இப்போதும் அப்படி ஆகும் என்று கணித்தார்கள். ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்குக் குழந்தைப்பேறு குறைந்தது, அவர்களே எதிர்பார்க்காத ஒன்று.

அமெரிக்காவில் மட்டுமல்ல, எங்கெல்லாம் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடியதோ, அந்த நாடுகளில் குழந்தைப்பேறு படுமோசமாகக் குறைந்திருக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியில் குழந்தைப்பேறு 21 சதவிகிதம் குறைந்துவிட்டது. அங்கு 37 சதவிகித தம்பதிகள், குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தையே தள்ளிப் போட்டிருக்கின்றனர். ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், தென்கொரியா, தைவான் எனப் பல நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிறப்பு விகிதம் இப்போது குறைந்துள்ளது. சீனாவிலும்கூட இதே நிலைமைதான்.

அதேசமயத்தில், கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்த நெதர்லாந்து, நார்வே, டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகளில் குழந்தைப்பேறு குறையவில்லை.

இயல்பான குழந்தைப்பேற்றுக்கு வாய்ப்பில்லாத பலர், செயற்கைக் கருத்தரிப்பு உதவியை நாடுகின்றனர். சமீப ஆண்டுகளில் அது மிகவும் அதிகரித்துள்ளது. கொரோனா நாள்களில் இந்தச் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களும் கதவை மூடிக்கொண்டன. பிறப்பு விகிதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

இந்தியா உட்பட எல்லா நாடுகளும் இந்த விஷயத்தில் சொல்லும் செய்தி இதுதான்... தலைமுறை தலைமுறையாகக் குடும்பம் செழிக்க வேண்டுமென்றால் நிம்மதியும் மகிழ்ச்சியும் பொருளாதார வளமையும் முக்கியம். அவை கேள்விக்குள்ளாகும்போது, ‘இப்படிப்பட்ட இடத்தில் பிள்ளைகள் வந்து கஷ்டப்பட வேண்டாம்’ என்று முடிவெடுத்து குழந்தைப்பேற்றைத் தவிர்த்துவிடுகிறார்கள் மக்கள்.