Published:Updated:

கொரோனா: ஆவி பிடிக்க மின் இயந்திரம்; வைரஸ் பரவும் வாய்ப்பிருக்கிறதா? - எழும் சந்தேகம்!

நீராவி பிடிக்கும் தூய்மை பணியாளர்கள்
நீராவி பிடிக்கும் தூய்மை பணியாளர்கள் ( ம.அரவிந்த் )

கொரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தவிர்க்க தினமும் ஆவி பிடிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. பல இடங்களில் பொது பயன்பாட்டுக்காக ஆவி பிடிக்கும் மின் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை சரியா என்றும், இதன் மூலம் வைரஸ் பரவும் வாய்ப்பிருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இச்சூழலில் தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கும்பகோணம் அருகே உள்ள பேரூராட்சியை சேர்ந்த செயல் அலுவலர் நீராவி பிடிப்பதற்காக மின்சாரத்தில் இயங்கும் நீராவி கருவியை அலுவலகத்தில் வாங்கி வைத்து, தூய்மை பணியாளர்களை ஆவி பிடிக்க வைத்து வருகிறார்.

ஆவி பிடித்தல் நம்மை கொரோனாவிலிருந்து காக்குமா... மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இது குறித்து அலுவலர் சிவலிங்கம் கூறுகையில், ``தினமும் நீராவி பிடித்தால் கொரானா தொற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

துாய்மைப் பணியாளர்கள் காலை பணிக்கு வரும் போதும், பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போதும் இரண்டு முறை நீராவி பிடிக்க வைத்து வருகிறேன். அத்துடன் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களையும் இதனை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறேன்.

ஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா? - விளக்கும் மருத்துவர்

இந்த நீராவி கருவியில் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஓடவைத்து அதில் வரும் ஆவியை பிடித்தாலே போதும். அல்லது பச்சை கற்பூரத்தை தண்ணியில் போட்டும் பயன்படுத்தலாம். இதன் மூலம் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் உடலில் இருக்காது. கொரோனா பாதிப்பிலிருந்தும் தப்பித்து கொள்ளலாம்." என்கிறார்.

இதே போல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸ் சார்பாக ஆவி பிடிக்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரே இயந்திரத்தில் பலர் ஆவி பிடிப்பதால் நோய்த் தொற்று பரவும் வாய்ப்பிருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. விகடன் வாசகர்கள் பலரும் இதைக் குறிப்பிட்டு சந்தேகம் எழுப்பியிருந்தனர். எனவே இது குறித்து நிபுணர்களின் கருத்தைப் பெற்று விரைவில் விளக்க கட்டுரை ஒன்றை வெளியிடுகிறோம்.

அடுத்த கட்டுரைக்கு