Election bannerElection banner
Published:Updated:

ஒரே பள்ளியைச் சேர்ந்த 229 மாணவர்களுக்குத் தொற்று! - கொரோனா அலர்ட்டில் மகாராஷ்டிரா

முன்னெச்சரிகையுடன் மாணவர்கள்
முன்னெச்சரிகையுடன் மாணவர்கள் ( Mahesh Kumar A )

மகாராஷ்டிராவில் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருக்கிறது. வாசிம் என்ற இடத்திலுள்ள பள்ளி மாணவர் விடுதியில் தங்கிப் படித்த 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விடுதியில் 327 பேர் தங்கிப் படிக்கின்றனர். மாணவர்கள் மட்டுமல்லாமல் மூன்று ஊழியர்களையும் கொரோனா பாதித்ததிருக்கிறது.

கொரோனா எச்சரிக்கையுடன் மாணவிகள்
கொரோனா எச்சரிக்கையுடன் மாணவிகள்

பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. அமராவதி, ஹின்கோலி, நாண்டெட், வாசிம், புல்தானா, அகோலா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தங்கிப் படிக்கின்றனர். அமராவதி, அகோலா ஆகிய மாவட்டங்களில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த இரு மாவட்டங்களிலும் தற்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டு நாள்களுக்கு முன்பு, லாத்தூர் என்ற பகுதியில் 39 பள்ளி மாணவர்கள், ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது வாசிம் விடுதியில் கொரோனா பரவியிருப்பது பெற்றோரை அச்சமடையச் செய்திருக்கிறது.

மும்பை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் அதிகரித்திருக்கும் கொரோனாவின் தாக்கம் கவலையளிக்கும்விதமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தவிர 80 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவுக்கு 51,937 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மும்பையிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் 1,167 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா அதிகரிப்பு: மகாராஷ்டிராவில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்குத் தடை!

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இப்போது மீண்டும் கொரோனா அதிகரித்துவருவது மிகவும் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக அரசு தெரிவித்திருக்கிற்து. அடுத்த 10 நாள்கள் மிகவும் முக்கியமானவை என்றும், இந்நாள்களில் மக்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்; சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

மும்பையில் நேற்று ஒரே நாளில் 21,000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதே போன்று மாநிலம் முழுவதும் சோதனைகளை அதிகரிக்கும்படி முதல்வர் உத்தவ் தாக்கரே மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார். மும்பைக்கு அருகிலுள்ள கல்யாண், டோம்பிவலி பகுதியிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகு, எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு