Published:Updated:

5000 ரூபாய் திருமணம்! - கல்யாணமே... வைபோகமே...

திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமணம்

காயத்ரி சித்தார்த்

“வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி இடப்பக்கம் சுழலுது உன்னாலே” - `போக்கிரி' படத்தில் அசின் விஜய்யைப் பார்த்து பாடும் இந்த வரியை இப்போது நாம் அனைவரும் சேர்ந்து கொரோனா வைரஸைப் பார்த்து பாட வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

இந்த ஒற்றை வைரஸால் உலகில் எத்தனை எத்தனை மாற்றங்கள். அனைத்து நாடுகளிலும் சுற்றுலாத்துறைகள் முடங்கி விட்டன. விமானப் போக்குவரத்து குறைந்துவிட்டது. தீம் பார்க்குகள், பப்புகள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள் காற்று வாங்குகின்றன. கோயில்கள் மூடப்பட்டாலும் பிரார்த்தனைகள் அதிகரித்திருக்கின்றன. அரைநாள் விடுப்புத் தராத ஹெச்.ஆர்கள் யாரும் அலுவலகப்பக்கம் வந்துவிட வேண்டாமென கெஞ்சுகிறார்கள். பிள்ளைகள் கையிலிருந்து செல்போனைப் பிடுங்கிப்போன பெற்றோரும், போன் வைத்திருந்தால் அபராதம் விதித்த ஆசிரியர் களும் ஆன்லைன் வகுப்பில் லாகின் பண்ணச் சொல்லி போனையும் லேப்டாப்பையும் கையில் திணிக்கிறார்கள். முதல் காட்சிக்கு முட்டி மோதாமல், லீவ் கேட்டு நிற்காமல் வீட்டிலேயே உட்கார்ந்து இன்று ரிலீஸாகும் புதுப்படங்களைப் பார்க்கலாம். ஹெல்மெட்டைக் கழற்றச்சொன்ன பெட்ரோல் பங்க்குகளில் இப்போது மாஸ்க் போடாதவர்களை அனுமதிப்பதில்லை. க்யூவை மதிக்காமல் எப்போதும் முண்டியடித்தே பழகிய மக்கள் வரிசையில்கூட தள்ளித் தள்ளி நிற்கிறார்கள். எந்தக் காவலரும் வழியில் வரும் வாகனத்தை நிறுத்தி முகத்தில் ஊதச் சொல்லிக் கேட்பதில்லை. தும்மினால் ‘நூறாயுசு’ என்ற அம்மாக்கள் கபசுரக் குடிநீரை வாயில் ஊற்றி, ஆவி பிடிக்கச் சொல்லி பதறுகிறார்கள். `என்னை ஏன் கூப்பிடல?' என்ற கேள்விக்கே இடமில்லாமல் பிறந்தநாள், புதுமனை புகுவிழா, மஞ்சள் நீராட்டு விழா, காதுகுத்து, சீமந்தம், பூஜை புனஸ்காரங்கள், கொலு கொண்டாட்டங்கள் என எல்லாவற்றிலும் கூட்டத்தைக் குறைத்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம். இந்த விழாக்களின் வரிசையில் பெரிய அளவில் அடிவாங்கியிருப்பவை திருமணங்கள்.

இந்தியாவில் கார், போன், வீடு போல மக்களின் அந்தஸ்தை நிர்ணயிக்கும், அடுத்தவருக்கு பறைசாற்றும் விஷயங்களில் முக்கியமான இடத்தில் இருப்பவை திருமணங்கள். இந்திய திருமண சந்தையின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடிகள் என்றும் இது வருடா வருடம் 25 முதல் 35 சதவிகிதம் வரை அதிகரித்து வருவதாகவும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இன்னமும் அதிகரித்திருக்க வேண்டிய அசுர செலவினங்களை இந்த 2020-ம் ஆண்டு ஒரேயடியாகத் தரையில் போட்டு மிதித்திருக்கிறது. கூடச் சேர்ந்து கொரோனா வைரஸும் `ஆடிய ஆட்டமென்ன...' என்று நம்மை எள்ளி நகையாடிக்கொண்டிருக்கிறது.

5000 ரூபாய் திருமணம்! - கல்யாணமே... வைபோகமே...

நம் மக்கள் திருமணத்தைக் காரணமாக வைத்துச் செய்த அட்டகாசங்கள் கொஞ்சமா என்ன... நடந்தும், குதிரையிலும் மெள்ள நகரும் ஜானவாசக் காரிலுமாக நிகழ்ந்த மாப்பிள்ளை ஊர்வலங்களை ஹெலி காப்டரிலும், ஹாட் ஏர் பலூன்களிலும் நடத்தியவர்களாயிற்றே. சமீபமாய் கர்நாடகாவில் நடந்த வெகு பிரமாண்ட திருமணத்தில் மணப்பெண் அணிந்திருந்த உடை 170 மில்லியன்கள், ஆபரணங்கள் 900 மில்லியன்கள் மதிப்புள்ளவை என்றும் தகவல்கள் வெளிவந்தது நினைவிருக்கலாம். திருமணத்தின் அழைப்பிதழ்கள் மட்டுமே ஆறு கோடி ரூபாய் செலவில் எல்.சி.டி திரையுடன் தயாரிக்கப்பட்டிருந்தன. திருமணத்துக்காக மேடையும் அரங்கமும் சினிமா ஆர்ட் டைரக்டர்களைக் கொண்டு 36 ஏக்கர் பரப்பளவில் அமைத்திருந்தார்கள்.

இந்தியர்களுக்கு ஆடம்பரத் திருமணங்கள் என்பவை தொன்று தொட்டு ரத்தத்தில் ஊறிய பழக்கம் என்பதற்கு ஆண்டாள் நாச்சியாரும் ஒரு சான்று. ஆயிரம் யானைகள் சூழ மாப்பிள்ளை ஊர்வலம். முத்துகள் மாலை மாலையாகத் தொங்கும் திருமண பந்தல். பொற்குடங்களை பூரண கும்பங்களாக வைத்து வெளியில் தோரணங்கள் என அவள் கனவு விரிகிறது. ஆனால் இப்போது, அவளைப் போலவே வழி வழியாக ஆடம்பரத் திருமணங்களைத் திட்டமிட்டுக் கொண்டிருப்பவர்களிடம், `பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா... இந்த பந்தம் கிந்தம் கொளுத்திக்கக்கூடாதா...' என்று கேட்டுக்கொண்டிருக்கிறது கொரோனா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கூந்தலிருப்பவர்கள் அள்ளி முடிவதில் என்ன தவறு என்று தோன்றலாம். ஆனால், அது உருவாக்கும் சமூக அழுத்தத்தையும் பொருளாதார சீர்குலைவுகளையும் நாம் கணக்கில்கொள்ள வேண்டியிருக்கிறது. `அஞ்சு பொண்ணைப் பெத்தா அரசனும் ஆண்டியாவான்' என்பது போன்ற சொலவடைகள் சொல்லிப்போவது பெண்ணைப் பெற்றவர்கள், பெற்ற நாள் முதல் அஞ்சிக்கொண்டிருக்கும் திருமணச் செலவுகளைத்தான். பெண் சிசுக் கொலைகளின் ஆணிவேர் இந்தத் திருமணச் செலவுகளிலும் வரதட்சணையிலும்தான் தொடங்குகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இருப்பவர்கள் படோடாப மாகவும் இல்லாதவர்கள் எளிமையாகவும் செய்துவிடும் திருமணத்தைக் கையில் வைத்துக்கொண்டு மத்திய வர்க்கத்தினர்தான் பாம்பைக் கையில் பிடித்த வானரம் போல செய்வதறியாமல் அவதிப்படுகின்றனர். பெரும்பாலான மத்திய வர்க்கத்துத் தந்தையரை, பெண்ணின் சகோதரர்களை வாழ்நாள் முழுக்க கடனாளியாகவே காலம் தள்ள வைப்பவையாக இந்தத் திருமணங்கள் அமைந்துவிடுகின்றன.

சில வருடங்களாக நுகர்வுக் கலா சாரத்தின் அத்தனை சாத்தியங்களையும் அனுபவித்துவிடும் பேராசையில், திருமணங்களை மேலும் மேலும் ஆடம்பர மாக்க மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள், அதன் சந்தை மதிப்பை வானளவுக்கு உயர்த்தியிருக்கின்றன. திருமணங்களை மையமாக வைத்துக் கொழிக்கும் வியாபாரங்கள் பெருகி விட்டன. டிரோன்கள் வைத்தும், கிரேன்கள் வைத்தும் எடுக்கப்படும் வெட்டிங் போட்டோகிராபி, ப்ரீ வெடிங் ஷூட், `முகூர்த்தப் புடவை 15,000 தான். அதுக்கு ப்ளவுஸ்ல டிசைன் பண்றதுக்கு 50,000 ஆச்சு” என்று பீதியைக் கிளப்பும் தாய்மார்களால் வளரும் ப்ளவுஸ் டிசைனிங் தொழில், இலை முழுக்க வதவதவென 150 ஐட்டங்களை பரப்பி வைத்து இலைக்கு 500 முதல் 2,500 ரூபாய் வரை வசூலிக்கும் கேட்டரிங் நிறுவனங்கள், சினிமா செட் போல பகட்டும் பிரமாண்டமுமாகப் போடப்படும் மேடை அலங்காரங்கள், தாமரையிலும் ஆர்க்கிட்டிலும் செய்யப்படும் மாலைகள், மலர் ஒப்பனைகள், திருவிழா போல விதவிதமான ஸ்டால்கள், திருமணத்தில் ஆர்க்கெஸ்ட்ரா என்பதையெல்லாம் விஞ்சி பிரேசில் நாட்டிலிருந்து நடனப் பெண்களை வரவழைத்து ஆட வைப்பது வரை இப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

‘டெஸ்டினேஷன் வெடிங்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மாப்பிள்ளை ஊரிலும் இல்லாமல் பெண்ணின் ஊரிலும் இல்லாமல் இருவருக்கும் பிடித்தமான சுற்றுலாத்தலத்தில், சொந்த பந்தங்களுக்கெல்லாம் விமான டிக்கெட்டு களும், தங்கும் ஏற்பாடுகளும் செய்து கொடுத்து திருமணத்தை வெகு விமரிசையாக நடத்துவது. அது வெளியூராகவோ, வெளி மாநிலமாகவோ வெளிநாடாகவோ இருப்பது அவரவர் அந்தஸ்தைப் பொறுத்தது. இவை எல்லாவற்றுக்கும் இப்போது கொரோனா வைத்திருப்பது கமாவா அல்லது முற்றுப் புள்ளியா என்பது இன்னும் சில ஆண்டு களில் தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மார்ச் மாதத்தின் நடுவிலேயே நண்பரொருவர் `எனக்கு கல்யாண மாயிடுச்சு மக்களே! கூப்பிட முடியல மன்னிச்சுக்கோங்க...' என்று முகநூலில் புகைப்படம் பகிர்ந்திருந்தார். மணமக்களும் இரு வீட்டுப் பெற்றோரும் மட்டும் நின்றிருந்த புகைப்படம் அது. திருமணத்துக்கு இவர்கள் இருந்தால் போதாதா... எதற்கு 2,000 பேர்... செப்டம்பரில், ஒரு குடும்பத்தார், இரண்டு தரப்பிலிருந்தும் தலா 10 உறவினர்களோடு திருமணம் நடத்தி வாட்ஸ்அப்பில் அழைப்பிதழும் புகைப்படமும் அனுப்பியிருந்தார்கள். நகை, உடைக்கான செலவு தவிர, மொத்த திருமணச் செலவே 5,000 ரூபாய்க்குள் தான் ஆனதாம். மணப்பெண்ணின் இதயநோயாளியான தந்தை இப்போது மனநிறைவுடன் இருக்கிறார்.

சென்ற நவம்பரில் நிச்சயதார்த்தத்தையே 1,000 பேரை அழைத்து ஒருநாள் முழுக்க மூன்று நேர சாப்பாட்டுடன் நடத்திய வசதிக்காரர்களோ, ஜூனில் வேறு வழியில்லாமல் அரசு அனுமதித்த 50 பேருடன் அரை நாளில் திருமணத்தை முடித்திருக்கிறார்கள். நிலைமை மாறுவதைப் புரிந்துகொண்டு, பாரத் மேட்ரிமோனி, ஷாதி.காம் போன்ற திருமணத் தரகு அமைப்புகள் வீடியோ கான்ஃப்ரன்சிங், ஸூம் மீட்டிங் மூலம் மணமக்கள் சந்திக்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். திருமணங்களை நடத்திக்கொடுக்கும் ஏஜென்சிகள் ஒரு லட்சத்துக்குள் திருமணத்தை முடித்துத்தருவதாகப் புதிய பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

கொரோனாவால் மக்கள் உயிரிழந்து வேலையிழந்து ஒருபக்கம் பரிதவித்துக் கொண்டிருந்தாலும், திருமணச் செலவுகள், தீபாவளிச் செலவுகள் என்று மூச்சுத் திணறிக் கொண்டிருந்த குடும்பத் தலைவர்களை சற்றே இளைப்பாற வைத்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை. கொரோனாவுக்குப் பின் உலக அளவில் ஆறு கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்திருக்கும் நிலையில், இந்த ஆடம்பர திருமணக் கலாசாரத்தை மீட்டெடுக்காமல் இருப்பதே நாட்டுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.

பகட்டாக ஏதாவது செய்தே தீர வேண்டும் என நினைப்பவர்கள் பட்டுப்புடவைக்கும் வேஷ்டிக்கும் பொருத்தமாக மாஸ்க் தைத்து அதில் எம்ப்ராய்டரியும் முத்தும் மணியும் பதித்து அணிந்துகொள்வதோடு மனதிருப்தி அடைந்துகொள்ளலாம். இனிவரும் நாள்களில் திருமண வீட்டார் வாட்ஸ்அப்பில் அழைப்பிதழ் அனுப்பி, ஸூம் மீட்டிங்கில் திருமணத்தை நடத்தி, ஸ்விக்கியில் சாப்பாடு ஆர்டர் செய்வார்கள். நாம் வீட்டிலிருந்தே அட்சதை தூவி வாழ்த்திவிட்டு, அமேசானிலிருந்து மரபை மீறாமல் ஒரு வால் க்ளாக்கையோ, ஹாட் பாக்ஸையோ வாங்கி திருமணப் பரிசாக அனுப்பி விடலாம். ஸோ சிம்பிள்.