அலசல்
Published:Updated:

கொரோனா ஊரடங்கு: குடிநோயாளிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது தமிழக அரசு?

குடிநோயாளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
குடிநோயாளிகள்

டி.எல்.எஸ்

கட்டுரைக்குள் செல்வதற்கு முன்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம். சிந்தாதிரிப்பேட்டை ஆற்றோரத்தெரு அருகில் இருக்கும் குடிசைப் பகுதியில் வசித்துவந்தவர் இளைஞர் குமார். 25 வயது இருக்கும், கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவியும் நான்கு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். குமார், முற்றிய நிலையில் இருக்கும் குடிநோயாளி. காலை கண் விழித்ததுமே அவருக்கு ‘ஹாஃப்’ பாட்டில் மது தேவை. தேவை என்று சொல்வதைக்காட்டிலும் கட்டாயம் என்பதே பொருத்தமாக இருக்கும். அது இல்லையெனில், மூர்க்கமாகிவிடுவார். அன்றைய நாளில் அடுத்தடுத்து எடுத்துக்கொள்ளும் மதுவின் அளவு இரண்டு முதல் மூன்று ஃபுல் பாட்டில்களை நெருங்கிவிடும்.

அவருக்கு குடிநோயின் முற்றிய நிலையில் ஏற்படும் விஷுவல் ஹாலுசினேஷனுடன் ஆடிட்டரி ஹாலுசினேஷனும் இருந்தது. மிகவும் அபாயகரமான கட்டம் இது. விஷுவல் ஹாலுசினேஷன் என்றால், கண்களில் மாயத் தோற்றங்கள் தோன்றுவது. நோயாளியின் கண் முன்பாக அச்சு அசலான காட்சிகள் தத்ரூபமாகத் தோன்றும். அவை பெரும்பாலும் எதிர்மறையான வையாக இருக்கும். யாரோ ஒருவர் அரிவாளால் வெட்ட வருவதுபோல் காட்சிகள் தோன்றலாம். பிடிக்காத நபர்கள் ஒன்றுசேர்ந்து, அவரின் குடும்பத்தினரை கொலை செய்வதுபோல் காட்சிகள் தோன்றலாம். நாய் துரத்தலாம், பாம்பு துரத்தலாம். இப்படியான காட்சிகள்.

குடிநோயாளிகள்
குடிநோயாளிகள்

ஆடிட்டரி ஹாலுசினேஷன் என்றால், காதுக்குள் மாயக்குரல்கள் கேட்கும். பெரும்பாலும் விரக்தியான, ஆக்ரோஷமான வார்த்தைகள், வசவுகள். ‘நீயெல்லாம் ஏண்டா உயிரோடு இருக்க... புள்ளக்குட்டிகளுக்குக் கஞ்சி ஊத்த வக்கில்லை... போய் சாவுடா!’ என்றெல்லாம் குரல்கள் கேட்கும். இப்போது இங்கே குறிப்பிட்டிருப்பது மிதமான வசவுகளே! இன்னும் கடுமையான, நாரசாரமான வசவுகளே பெரும்பாலும் கேட்கும். அரிதினும் அரிதாக மிகச் சிலருக்கு நல்ல இசை கேட்கலாம்.

குடிநோய் மீட்பு மையங்கள் தொடங்கி மின்சாரம் மூலம் ஷாக் அடிக்கவைப்பது, அடி, உதை உள்ளிட்ட சட்டவிரோத சிகிச்கை மையங்கள் வரை எதிலுமே தீர்வு கிடைக்காத நிலையில் குமாரை வீட்டில் உள்ள சிறு அறை ஒன்றில் அடைத்துவைத்திருந்தார்கள். இரண்டு நாள்கள் இரவும் பகலுமாகக் கத்திக் கதறிக்கொண்டிருந்தார் குமார். தலையை முட்டிமோதி ரத்தம் கொட்டியது. குடும்பத்தினர் ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தனர்.குழந்தைகளின் குரல் கேட்கும்போது மட்டும் அவரது ஆவேசம் சற்றே தணியும். மற்ற நேரங்களில் எல்லாம் அவரது அலறல் அந்த ஏரியாவையே உலுக்கிக் கொண்டிருந்தது.

மூன்றாவது நாள் அதிகாலை. பூட்டப்பட்டு இருந்த கதவு படாரெனத் தெறித்து விழுந்தது. கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்த குமார், அந்தச் சிறு சந்தில் நின்றுகொண்டு வெறிகொண்டு கத்தினார். பிறகு அவர் திபுதிபுவென வேகமாக ஓடினார். பின்னாலேயே குடும்பத்தினரும் ஓடினர். எக்மோர் ரவுண்டானா அருகில் இருக்கும் பாலத்திலிருந்து கூவத்தில் குதித்துவிட்டார். பிறகு பிணமாகத்தான் குமாரை மீட்க முடிந்தது. பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு அவரின் மனைவி சொன்னது இது... “நல்லவேளை... நிம்மதியா போய்ச் சேர்ந்துட்டார். உயிரோடு இருந்திருந்தா அவர் அனுபவிக்கிற சித்ரவதைங்களை நினைச்சுக்கூட பார்க்க முடியலை.” அவரின் மனைவியும் நான்கு பெண் குழந்தைகளும் இப்போதும் அங்குதான் வசிக்கிறார்கள். இப்படி இன்னும் மோசமான நிறைய உதாரணங்களை, குடியால் கெட்ட குடும்பங்களைப் பட்டியலிட முடியும்.

இப்படி சென்னை ராயபுரம், தண்டையார் பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதி களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் தங்கள் கணவரை இழந்திருக்கிறார்கள். திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி கிராமத்தில் மட்டுமே 35-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் குடிநோய்க்கு கணவரை பலிகொடுத்திருக் கிறார்கள். தேனி மாவட்டம், கோடாங்கிப் பட்டியில் குடிநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்கென்றே செயல்பட்டுவருகிறது பால்பாண்டி என்பவர் நடத்தும் மனிதநேயக் காப்பகம். திருநெல்வேலி மாவட்டம், உவரி கடலோடி கிராமத்தில் இருக்கும் பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்குத் திருச்சபையில் குடிநோயாளிகளை மீட்பதற்காகவே நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மொத்த கிராமத்தினரும் சேர்ந்து ‘மதுவிலக்கு’ சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகில் இருக்கும் பூமுனீஸ்வரர் கோயிலுக்கு குடிநோயால் பாதிக்கப்பட்ட தங்கள் கணவனை, மகனை, மகளை அழைத்துவந்து சத்தியம் வாங்கி கையில் கயிறு கட்டவைத்து அழைத்துச் செல்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர். இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலைமை.

தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் தற்காலிக மதுவிலக்கு நிலவுகிறது. நல்ல விஷயம்தான். இதில் நன்மை பயக்கும் அம்சங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து, லட்சக்கணக்கான குடிநோயாளி களை உருவாக்கி ஏராளமான குடும்பங்களை நிர்கதியாக்கிய தமிழக அரசு, இந்தச் சூழலிலும் குடிநோயாளிகளுக்கான மருத்துவபூர்வமான, அறிவியல்ரீதியான தீர்வுகளை நோக்கி நகரவில்லை.

குடி நோயாளிகள்
குடி நோயாளிகள்

தமிழகத்தின் குடிநோயாளிகள் சுமார் ஒரு கோடி பேர் இருப்பார்கள் எனத் தெரிகிறது. இவர்களில் மூன்றில் ஒருவர் முற்றிய நிலையில் இருக்கும் குடி நோயாளி. இது தொடர்பாக அரசுத் தரப்பிலும் வேறு எந்த ஒரு தரப்பிலும் தெளிவான புள்ளி விவரங்களோ தரவுகளோ எடுக்கப் படவில்லை. குடிநோயாளிகள் மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்த குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களுமே இவர்களால் உடல்ரீதியாக, மனரீதியாக மிகக் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். அதன்படி குடிநோய் என்பது தனிநபர் சார்ந்த நோய் மட்டுமல்ல, அது ஒரு சமூக நோயாகவும் உருவெடுத்துள்ளது.

அதனால்தான், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உட்பட அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் இருக்கும் குடிநோய் சிகிச்சை மற்றும் மீட்பு மையங்கள் நிரம்பி வழிகின்றன. சென்னை அடையாறில் இருக்கும் டி.டி.கே குடிநோய் சிகிச்சை மையத்தில் எப்போதுமே படுக்கைகள் நிரம்பி இருக்கின்றன. இந்த மருத்துவமனையில் நாடு முழுவதுமிருந்து குடிநோயாளிகள் சிகிச்சை பெற்றுவருவதால், அங்கும் சிகிச்சை பெற முன்பதிவு செய்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். இவை தவிர திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே முறையான அனுமதி பெற்ற, அனுபவம்கொண்ட மருத்துவர்களுடன் இயங்கும் குடிநோய் சிகிச்சை மற்றும் மீட்பு மையங்கள் இயங்குகின்றன. எஞ்சியிருப்பவை எனப் பார்த்தால் அடி, உதை, மின்சார ஷாக் கொடுக்கும் முறையற்ற சிகிச்சை மையங்களே ஏராளம்.

இப்படியான சூழலில் தமிழக அரசு என்ன செய்திருக்க வேண்டும்? “ஏராளமான குடிநோயாளிகள் வாழும் மாநிலத்தில், எந்த மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், மதுக்கடைகளை மூடுவது குடிநோயாளிகளுக்கு மறைமுகமாக அறிவிக்கப் பட்ட ஒருவித மருத்துவ அவசர நிலை” என்று திகிலூட்டுகிறார்கள் இதுதொடர்பாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.

“மது உள்ளிட்ட எந்தப் போதைப் பழக்கத்தை நிறுத்தும்போதும் சில உடல்நலப் பாதிப்புகளும் மனநலப் பாதிப்புகளும் உண்டாகும். இதை ‘வித்ட்ராயல் சிம்டம்ஸ்’ (Withdrawal symptoms) எனச் சொல்வோம். அதாவது, ஒரு குடிநோயாளி மதுவை நிறுத்தினால் அவருக்கு கை, கால்கள் நடுங்க ஆரம்பிக்கும்; பதற்றம், கோபம், எரிச்சல் ஏற்படும். சோஷியல் டிரிங்க்கர்ஸ், அக்கேஷனல் டிரிங்க்கர்ஸ் என, எப்போதாவது மது அருந்துப வர்கள் மற்றும் ஆரம்பநிலை மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இது தற்காலிகப் பிரச்னைதான். போதைப்பழக்கத்திலிருந்து வெளியேற அவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம்.

பொதுவாகவே ஆரம்ப நிலை குடிநோயாளி களை மூன்று வாரங்களுக்குள் முழுமையாக மீட்டுவிடுவோம். அவர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கே வரத் தேவையில்லை. அவர்கள் மது கிடைக்காத இதுபோன்ற சூழலில் குழந்தைகளுடனும் பிடித்தமானவர்களுடனும் நேரத்தைச் செலவிடலாம்; பிடித்தமான விஷயங்களைச் செய்யலாம்; பிடித்தமான உணவு வகைகளை வயிறு நிரம்ப உண்ணலாம். தியானம், யோகாசனம் என நேரத்தைச் செலவழித்தால் இந்த 21 நாள்கள் இடைவெளியில் ஆயுசுக்கும் அவர்கள் மதுவை நாட மாட்டார்கள்” என்று சொல்லும் மனநல மற்றும் போதை மீட்பு சிகிச்சை மருத்துவரான மோகன வெங்கடாஜலபதி, அடுத்து சொல்லும் விஷயங்கள்தான் நெஞ்சை பதறவைக்கின்றன.

“ஆனால், எல்லை மீறி முழுநேரம் குடிக்கும் முற்றிய நிலையிலான குடிநோயாளிகளுக்குத்தான் இது மருத்துவ அவசரநிலை. அவர்களின் நிலையை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. இது அந்தக் குடிநோயாளிக்கு மட்டுமான பிரச்னையல்ல. அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆபத்து நேரிடும்... அக்கம்பக்கத்தினருக்கும் ஆபத்து நேரிடும். கிட்டத்தட்ட வெறிபிடித்து அலைவார்கள். சிறிது சீண்டினாலே கொலை செய்யக்கூட தயங்க மாட்டார்கள். தற்கொலை களும் அதிகரிக்கும்.

சிகிச்சையில் இருக்கும்போதே இவர்களை மருத்துவர்கள் கையாள்வது மிகவும் சிக்கல். குடும்ப உறுப்பினர்களால் அவர்களை எப்படி எதிர்கொள்ள முடியும்? குடிநோயாளியை வீட்டில் வைத்திருப்பவர்கள் அவர் நினைவு தப்பி உளறத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மதுப்பழக்கத்திலிருந்து ஒருவரை மீட்க, குறைந்தது ஒரு வார கால சிகிச்சையாவது தேவை. அங்கு 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். எனவே, பிரச்னை தீவிரம் அடைவ தற்குள் முற்றிய நிலையில் உள்ள குடிநோயாளிகளை அடையாளம் கண்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். போர்க்கால அடிப்படையில் அரசு மருத்துவ மனைகளின் மனநலப் பிரிவில், இதற்கென தனி வார்டுகள் அமைத்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்றார்.

வீதிக்கு வீதி மதுக்கடைகளை நடத்தி குடிநோயாளிகளை உருவாக்கிய தமிழக அரசின் காதுகளில் இந்தக் குரல் விழுமா?

பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த கேரளா!

அண்டை மாநிலமான கேரளாவில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், இதுவரை ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டனர். மது கிடைக்காத விரக்தியில் இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்.

பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட மாநில முதல்வர் பினராயி விஜயன், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மதுபானங்கள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படும் குடிநோயாளிகளை அடையாளம் கண்டு சிகிச்சையளிக்க, அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேகமாக படுக்கைகள் ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.