Published:Updated:

108... 104... 102... ஆம்புலன்ஸ் அலைகழிப்பு!

கொரோனா பணியில் இருந்ததால ஆம்புலன்ஸால சீக்கிரமா வரமுடியலை.

பிரீமியம் ஸ்டோரி

காரைக்குடி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட ஒரு முதியவருக்கு ஆம்புலன்ஸ் வராமல் போனதால் அவர் பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, செஞ்சை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் மெய்யப்பன். இவர் சிறுநீரகப் பாதிப்புக்காக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துவந்திருக்கிறார். இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அவருடைய மகன் அஜித் நம்மிடம், ‘‘அப்பாவுக்கு நாலு வருஷத்துக்கு மேல டயாலிசிஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம். லேசா காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கவும், ஆஸ்பத்திரியில காண்பிச்சோம். அங்கே அழகப்பா காலேஜ் முகாமுக்குப் போய் கொரோனா டெஸ்ட் எடுத்துக்கச் சொன்னாங்க. ஆகஸ்ட் 4-ம் தேதி டெஸ்ட்டுக்குக் கொடுத்துட்டு, வீட்டுக்குக் கூட்டியாந்துட்டோம். திடீர்னு 7-ம் தேதி காலையில போன் பண்ணி ‘உங்க அப்பாவுக்கு கொரோனா இருக்கு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க’னு சொன்னாங்க. நாங்க ஆம்புலன்ஸ் வரும்னு எதிர்பார்த்தோம். ஆனா வரலை. அப்புறம் ஒரு ஆட்டோ வெச்சு காரைக்குடி பழைய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனேன். ஆஸ்பத்திரியில விஷயத்தைச் சொன்னதும், ‘வெளியில போய் மரத்தடியில இருங்க’னு சொல்லிட்டாங்க. காலையில 8 மணியிலருந்தே காத்துக்கிட்டிருந்தும், எங்களைக் கண்டுக்கவே இல்லை.

108... 104... 102... ஆம்புலன்ஸ் அலைகழிப்பு!

உள்ளே போய் டாக்டர், நர்ஸ்கிட்ட கெஞ்சிப் பார்த்தேன். ‘கிட்னி ஃபெயிலியர் கேஸை இங்கே பார்க்க முடியாது. மதுரைக்குக் கொண்டுபோங்க’னு சொல்லிட்டாங்க. உடனே ஆம்புலன்ஸுக்காக 108-க்கு போன் அடிச்சேன். அவங்க 104-க்கு அடிக்கச் சொன்னாங்க. அதுக்கு அடிச்சா, 102-க்கு அடிங்கனு சொன்னாங்க. நானும் மாத்தி மாத்தி போன் அடிச்சேன். ஆம்புலன்ஸ்காரங்க ‘வந்துடுறோம், வந்துடுறோம்’னு சொன்னாங்களே தவிர, வந்த பாடில்லை. அப்புறம் நான் ஆஸ்பத்திரியில கூச்சல் போட்டதும், 12 மணிக்கு ஒரு டெஸ்ட் எடுத்துட்டுப் படுக்கவெச்சாங்க. அப்பவே அப்பா ரொம்ப துவண்டுட்டாங்க. கொஞ்ச நேரத்துல இறந்தே போயிட்டாங்க. அஞ்சு மணி நேரம் அலைக்கழிக்கவெச்சு அவரைச் சாகடிச்சதை நினைக்கும்போது மனசு கனக்குது’’ என்றார் கண்கள் கலங்கியபடி.

காரைக்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தர்மரிடம் பேசினோம். ‘‘கொரோனா பாசிடிவ்வான டயாலிசிஸ் நோயாளிங்கறதால, கவர்மென்ட் புரோட்டோகால்படி மதுரை அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை கொடுக்கணும். கொரோனா பணியில் இருந்ததால ஆம்புலன்ஸால சீக்கிரமா வரமுடியலை. அதுக்கு இடையில அவருக்கு பிளட் டெஸ்ட், எக்ஸ்ரே எடுத்து, ஆரம்பக்கட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கு. டாக்டர் அவரோட உயிரைக் காப்பாத்த முயன்றிருக்காங்க. அவர் உடல்நிலை ஏற்கெனவே மோசமா இருந்ததால இறந்திருக்கார்” என்றார்.

மெய்யப்பன் - அஜித்
மெய்யப்பன் - அஜித்

சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் இளங்கோ மகேஷ்வரன், ‘‘மாவட்டத்தில் மொத்தம் 16 ஆம்புலன்ஸ் வண்டிகள்தான் இருக்கு. அதுல மூணு வண்டிகளை கொரோனா பணிக்கு ஒதுக்கியிருக்கோம். தினமும் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைச்சுக்கிட்டிருக்கு. ஆனாலும், பற்றாக்குறையால் கொஞ்சம் தொய்வு இருக்கு. இப்போ, எப்பவுமே காரைக்குடியில ஒரு ஆம்புலன்ஸ் இருக்கிற மாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கோம்’’ என்றார்.

‘ஓர் உயிர் போன பிறகுதான் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்பதுதான் சாமானிய மக்களின் கேள்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு