Published:Updated:

புதிய பாய்ச்சலில் கொரோனா... தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

மகாராஷ்டிராவில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியவுடனேயே நாம் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திவிட்டோம்.

புதிய பாய்ச்சலில் கொரோனா... தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

மகாராஷ்டிராவில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியவுடனேயே நாம் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திவிட்டோம்.

Published:Updated:
கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

தமிழகத்தில் ‘கொரோனா’ அச்சுறுத்தல் மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 13 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் வைரஸ் பரவலின் தாக்கம் தீவிரமடைந்திருப்பதைச் சமீபத்திய புள்ளிவிவரங்கள் பட்டியலிடுகின்றன. லாக்டௌன், இ-பாஸ், வொர்க் ஃப்ரம் ஹோம் எனப் பழைய காட்சிகள் கண்முன்னே நிழலாடுவதால், மிரண்டுபோயிருக்கிறார்கள் தமிழக மக்கள்.

புதிய பாய்ச்சலில் கொரோனா... தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

கொரோனா பேரிடர் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை 1.3 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.64 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலம் முதலே மகாராஷ்டிரா முதல் இடத்தையும், அடுத்தடுத்த இடங்களை கேரளாவும் தமிழகமும் பிடித்தன. கடந்த வருடம் நாளொன்றுக்கு 7,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, 400-க்கும் குறைவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த எண்ணிக்கை தற்போது 3,000-ஐ தாண்டியிருப்பதுதான் அச்சத்துக்குக் காரணம். குறிப்பாக சென்னையில் மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி, தொற்றால் புதிதாக பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 171-ஆக இருந்த நிலையில், ஏப்ரல் 4-ம் தேதி நிலவரப்படி 1,344-ஆக உயர்ந்துள்ளது. இந்த ராக்கெட் வேக உயர்வைக் கலவரத்துடன் பார்க்கிறார்கள் ‘மக்கள் நல்வாழ்வுத்துறை’ அதிகாரிகள்.

சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம், ‘‘மகாராஷ்டிராவில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியவுடனேயே நாம் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திவிட்டோம். மாநிலம் முழுவதும் கொரோனா கண்காணிப்பு முகாம்களை, மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனாலும், தேர்தல் பிரசாரம் காரணமாக, மக்கள் அதிக அளவில் கூடியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இப்போதைய கொரோனா பரவலில் புதுவித தாக்கத்தை உணர்கிறோம். திடகாத்திரமாக இருக்கும் 35 வயதுக்குக் கீழானவர்கள்கூட வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். விரைவிலேயே நோய் முற்றுதல் நிலை ஏற்பட்டு, நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் காய்ச்சல், உடல்வலி, இருமல் போன்ற அறிகுறிகள் முதலிலேயே தென்பட்டன. இப்போது, அந்த அறிகுறிகளை உடனடியாக வெளிக்காட்டாமலேயே கொரோனா வைரஸ் தொற்ற ஆரம்பித்திருக்கிறது’’ என்றார்.

புதிய பாய்ச்சலில் கொரோனா... தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

‘‘கடந்த ஆண்டின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழகத்தில் தற்போது தேவையான மருத்துவ வசதி தயார்நிலையில் உள்ளது. அனைத்துக்கும் மேலாக, தடுப்பூசிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக நோய்க் கட்டுப்பட்டுப் பகுதிகளைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம். அனைத்து இடங்களிலும் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறை பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது. ஆன்மிகக் கூட்டம், விழாக்கள், அரசியல் கூட்டம், பரப்புரைக் கூட்டம் என்றெல்லாம் கொரோனா வித்தியாசம் பார்க்காது என்பதை மக்கள் உணர வேண்டும். கொரோனா பாதிப்பு கூடுகிறதே என்று பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். அதேசமயத்தில், கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம். தமிழகத்தில் 5,000-க்கும் அதிகமான இடங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, பொதுமக்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்க முடியும்’’ என்கிறார் தமிழகச் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

புதிய பாய்ச்சலில் கொரோனா... தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

மார்ச் மாதத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில், தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டேவருகிறது. சென்னையிலுள்ள கிண்டி கொரோனா மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டன. மற்ற அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 4-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 8,99,807 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தமிழக அரசு கூறியிருக்கிறது. இதில் 2,53,760 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்திருப்பதால், கொரோனா பரவல் அதிகரித்துவரும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலச் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஏப்ரல் 6-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

மக்களிடம் ‘கொரோனா’ அச்சம் போய்விட்டதுதான் இந்த இரண்டாம் அலை வேகமாகப் பரவுவதற்கு பிரதான காரணம். முகக்கவசம் இல்லாதிருப்பது, பொது இடங்களில் குழுமியிருப்பது, தேவையற்ற பயணங்கள், நோய் அறிகுறி தென்பட்டாலும் பொறுப்பின்றி பொது இடங்களுக்குச் செல்வது என்று தங்களுக்கு அதீத தன்னம்பிக்கை இருப்பதாக நினைத்துக்கொண்டு, பிறருக்குத் தொற்றை ஏற்படுத்துகின்றனர். பொதுமக்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே இந்த இரண்டாம் அலை தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியும். இல்லையென்றால், கடந்த ஆண்டு தமிழகம் சந்தித்த கொரோனா பாதிப்பைவிட இரண்டு மடங்கு சேதாரத்தைச் சந்திக்க நேரிடலாம்!

*****

புதிய பாய்ச்சலில் கொரோனா... தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

‘‘பொதுமக்கள் பொறுப்புணர வேண்டும்!’’

கொரோனா பரவல் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் இணை இயக்குநர் டாக்டர் பிரப்தீப் கவுர் கூறுகிறார்... ‘‘இந்தப் பரவல் மேலும் தீவிரமாக வாய்ப்பிருக்கிறது. முன்பைவிட, தொற்றுப் பரவும் வேகம் கூடுதலாக இருக்கிறது. முன்பைப்போல மக்களிடம் பயம் இல்லை. அதுதான் மிக முக்கியமான காரணம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான உதவிகளை அவர்களை நெருங்காமலேயே குடும்பத்தினர் கவனித்தனர். இப்போது அந்த பயம் போய்விட்டதால், குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தொற்று வேகமாகப் பரவுகிறது. போர்க்கால அடிப்படையில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில், கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். கடந்தமுறை சென்னையில் மட்டும் வேகமாகப் பரவிய நோய்த்தொற்று, இந்த முறை தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களிலும் வேகமாகப் பரவுகிறது. பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

புதிய பாய்ச்சலில் கொரோனா... தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

‘‘ஊரடங்கு என்பது வதந்தியே!’’

தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், ‘ஊரடங்குக்கு வாய்ப்பு இருக்கிறதா?’ எனச் சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘நோய் பரவும் விகிதம், நடப்புநிலை அனைத்தையும் கருத்தில்கொண்டே ஊரடங்கு செயல்படுத்தப்படும். தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவர வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் ஊரடங்கு போடும் திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை. ஒருவேளை மத்திய அரசு உத்தரவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம். ஆனாலும், அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவுதான். ‘தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்’ என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் கூறியிருக்கிறார்’’ என்றார்.