Published:Updated:

“எனக்கு அழிவே கிடையாது!”

தத்தளிக்கும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
தத்தளிக்கும் தமிழகம்!

கொக்கரிக்கும் கொரோனா... தத்தளிக்கும் தமிழகம்!

“எனக்கு அழிவே கிடையாது!”

கொக்கரிக்கும் கொரோனா... தத்தளிக்கும் தமிழகம்!

Published:Updated:
தத்தளிக்கும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
தத்தளிக்கும் தமிழகம்!
பாரபட்சமின்றி, பலரையும் தாக்கிக்கொண்டிருக்கிறது கொரோனா. முகக்கவசம் அணிவது, கை கழுவுதல், தனிமனித இடைவெளி என அரசாங்கம் சொல்லும் அத்தனை விதிமுறைகளையும் பின்பற்று வோரையும் அது விட்டுவைப்பதில்லை. மீள்வதும் மாள்வதும் மனிதர்கள் கையில் இல்லாத நிலை. இதற்கு மருத்துவர்களும் விதிவிலக்கல்ல.

‘கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்’ என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நமக்கெல்லாம் கண்ணுக்குத் தெரிந்த கடவுள்கள் மருத்துவர்கள்தான். ஆனால், அந்தக் கடவுள்களுக்கும் இது சோதனைக் காலம்போல.

‘கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை `மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி இல்லை’ என்ற குற்றச்சாட்டைக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தோம். இனிவரும் நாள்களில், `மருத்துவமனைகளே இல்லை’ என்ற நிலையும் வரலாம்!’ - இப்படிச் சொல்பவர் சாமானியர் இல்லை... ஒரு மருத்துவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருகட்டத்தில் கொரோனா இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட அதே கோவையில், இன்று அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை யால் அடுத்தடுத்து மருத்துவமனைகளை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கோவையில் மட்டுமல்ல, சென்னையிலும் பிரபலமான விஜயா மருத்துவமனை மூடப்பட்டிருக்கிறது.

சில நாள்களுக்கு முன்னர் சென்னை விஜயா மருத்துவமனையின் இயக்குநரும், நாகி ரெட்டியின் பேரனுமான சரத் ரெட்டி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அடுத்த சில நாள்களில் அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விஜயா மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பிரதான பகுதிகளில் மருத்துவமனைகள் மூடப்படும் நிலை தொடர்கிறது.

எங்கே செல்லும் இந்தப் பாதை?

கோவை மருத்துவர் ஒருவர் பகிரும் தகவல்கள் அத்தனையும் `பகீர்’ ரகம்.

‘‘ஒரு நோயாளி மருத்துவமனைக்குள் நுழையும்போது, அவருக்கு டெம்பரேச்சர் சரிபார்ப்பது முதல் அவருடைய கான்டாக்ட் பற்றிய தகவல்களைக் கேட்டறிவது வரை பல விஷயங்களைக் கட்டாயமாகப் பின்பற்றுகிறோம். அந்தத் தகவல்களில் எந்தப் பிரச்னையும் இல்லாதபட்சத்தில்தான் அவரை உள்ளே அனுமதிக்கிறோம். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தாலோ, சந்தேகம் இருந்தாலோ அந்த நோயாளிகளை நாங்கள் தனியே நிர்வகிக்கும் ‘ஃபீவர் கிளினிக்’கில் அனுமதிப்போம். அறிகுறிகள் இல்லாதவர்களுக்குச் சிகிச்சை அளித்து, பிறகு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில், அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைவரையும் ‘ஹை ரிஸ்க்’ கான்டாக்ட்டில் சேர்க்கிறோம்.

இந்த நபர்கள் ஏழு நாள்களுக்குள் ஆர்.டி-பி.சி.ஆர் மற்றும் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதோடு, தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். ஒருவேளை எங்களுக்கு `பாசிட்டிவ்’ என்று வந்தால் எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதோடு, நாங்கள் புழங்கிய இடங்களைக் கிருமிநீக்கம் செய்ய வேண்டும்.

ஒருவேளை நோயாளி பாசிட்டிவ்வாக இருந்து, நாங்கள் கவச உடைகள் அணிந்து வெறும் 15 நிமிடங்களுக்குக்கீழ்தான் அவர்களுடன் இருந்திருக்கிறோம் என்றால், ‘லோ ரிஸ்க் கான்டாக்ட்’டில் வருவோம். அறிகுறிகள் இல்லாதவரை எங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

இப்போது இந்த விதிமுறைகளில் மாற்றம் வந்திருக்கிறது. ஹை ரிஸ்க்கோ, லோ ரிஸ்க்கோ எதுவாயினும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்திருந்தால், எங்களை நாங்கள் ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு நாள்கள் ஃபியூமிகேஷனும் (சுத்திகரிப்பு), ஒருநாள் சானிட்டேஷனும் செய்ய வேண்டும். அதாவது, மூன்று நாள்களுக்கு மருத்துவமனை இயங்க முடியாத நிலை.

“எனக்கு அழிவே கிடையாது!”

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் அரசின் விதிமுறைப்படி தினமும் 10 முறைகள் சுத்தப்படுத்துவது, சுவர், கைப்பிடிகள் உள்ளிட்ட பகுதிகளை கிருமிநாசினி வைத்துத் துடைப்பது போன்றவை நடக்கின்றன. இரண்டு வாயில்கள் இருந்தும், அரசு சொல்வது போன்ற தூய்மைப் பணிகளைப் பின்பற்றியும், முகக்கவசமும் கையுறைகளும் அணிந்திருந்தும் புறநோயாளிகளைப் பார்க்கும் மருத்துவமனைகளை மொத்தமாக மூடச் சொல்வது ஏன் என்பதுதான் எங்கள் கேள்வி’’ என்கிறார் அந்த மருத்துவர்.

`தனியார் மருத்துவமனைகளுக்கு இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசாங்கம், அரசு மருத்துவமனைகளை மட்டும் கண்டுகொள்வதில்லை’ என்பதே பல தனியார் மருத்துவர்களின் குற்றச்சாட்டாகவும் இருக்கிறது.

மருத்துவர்களின் ஐந்து கோரிக்கைகள்!

முதல்வருடனும், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலருடனும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனின் (ஐ.எம்.ஏ) பிரதிநிதிகள் நடத்தும் மீட்டிங் அவ்வப்போது நடக்கும். `இந்த மீட்டிங்குகளில் மருத்துவர்கள் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் பெரும்பாலும் பரிசீலிக்கப்படுவதில்லை’ என்பதையும் வருத்தத்துடன் சொல்கிறார்கள் ஐ.எம்.ஏ-வைச் சேர்ந்த மருத்துவர்கள். கடைசியாக நடந்த சந்திப்பிலும் முக்கியமான சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவை...

1. தளர்வில்லாத, முழுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். (டாஸ்மாக்குக்கு நிச்சயம் அனுமதி கூடாது).

2. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பாதிக்கப்படும்போது, அவர்களின் இடங்களிலோ அல்லது ஐ.எம்.ஏ கட்டடத்திலோ சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். `சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மருத்துவர்களுக்கே படுக்கை இல்லை’ என்ற செய்தியைக் கேள்விப்படுகிறோம். எனவே, அந்தந்த மாவட்ட ஐ.எம்.ஏ கட்டடத்தில் இந்த வசதியை ஏற்படுத்துவது பாதுகாப்பானது.

3. ‘தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்கு 30 சதவிகித இடத்தை ஒதுக்க வேண்டும்’ என்று அரசு கேட்கிறது. மகப்பேறு மாதிரியான பிரத்யேக சேவை மேற்கொள்ளும் மருத்துவமனைகளில் இப்படி

30 சதவிகிதத்தை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கும்போது, அது மற்ற நோயாளிகளிடையே நெகட்டிவ் மனநிலையை ஏற்படுத்துகிறது. மக்களிடம் பீதியை உருவாக்குகிறது.

4. மருத்துவர்களுக்கு குரூப் இன்ஷூரன்ஸ் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்.

5. ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைக்கான கட்டணத்தைத் தனியார் லேப்கள் குறைக்க வேண்டும்.

சென்னையில் கட்டுக்குள் வந்துவிட்டதா கொரோனா?

சென்னையில் தினமும் தொடர்ந்து 2,000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக அது குறைந்துவருகிறது. இதையடுத்து, ‘சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது’ என்று அறிவித்தார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். ஆனால், ‘‘பரிசோதனைகள் குறைந்ததே பாதிப்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்ததற்குக் காரணம் என்பதும், பரிசோதனைகள் குறைய, டெக்னீஷியன்களின் வேலைப்பளு உள்ளிட்ட பலவும் காரணம் என்பதுமே உண்மை’’ என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.

`தொற்று ஏற்பட்ட மருத்துவமனையில் கணிசமான எண்ணிக்கையில் மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனைக்கு அனுப்பப்படும் போது, அரசு பரிசோதனை மையங்களில் அவர்களுக்கு மொத்தமாகப் பரிசோதனை செய்வதில்லை; குழுக்களாகப் பிரித்தே செய்யப்படுகிறது’ என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் எடுக்கப்படாத அந்த நபர்களுக்கு கொரோனா இருக்கும்பட்சத்தில், அடுத்தடுத்த நாள்களில் எத்தனை பேருக்குத் தொற்றைப் பரப்புவார்களோ?

மனிதத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்ட பீதி!

நோயாளியைத் தொட்டு ஆற்றுப்படுத்தி, ஆறுதல் சொல்லிப் பேசியே பாதி நோயை குணப்படுத்திய காலம் இன்றில்லை. நோயாளி வந்ததுமே ‘டேபிள்லருந்து கையை எடுங்க. மாஸ்க் போடுங்க... சீக்கிரம் சொல்லுங்க’ என மருத்துவர்களின் மனநிலையே மாறிவிட்டது. மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 40 முதல் 50 முறை கைகழுவுகிறார்கள். அது அவர்களுக்கோர் உளவியல் பிரச்னையாகவே உருவெடுத்திருக்கிறது. அவர்களும் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். நோயாளிகளுக்கான சிகிச்சை, அது பலனில்லாமல் நிகழும் மரணங்கள், உறவினர்களின் கதறல்... எனத் தொடர்ச்சியான அந்த ஓலம் மருத்துவர்களின் மன உறுதியை இந்த நாள்களில் தகர்த்திருக்கிறது என்பதே உண்மை. இதே நிலை நீடித்தால், மருத்துவத்தை முதல் கனவாகக் கொண்டிருக்கும் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளின் மனநிலையில் மாற்றம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, ‘எனக்கு அழிவே கிடையாது’ என்று கொரோனா கொக்கரிப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தமிழகம் என்னவோ தத்தளிப்பில் இருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளை மூடச் சொல்வது சரியா?

தனியார் மருத்துவமனைகள் மூடப்படுவது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நோய்த் தொற்று ஏற்படும் மருத்துவமனைகளை, கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஓரிரு நாள்களிலேயே திறக்கலாம். சட்ட விதிகளும் இதைத்தான் சொல்கின்றன. அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் மட்டுமே கூடுதலாகச் சில நாள்கள் மூட அறிவுறுத்தப்படுகிறது. ஓரிரு நாள்கள் மூடுவதால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.

ஊரடங்கு தளர்த்தப்படும்பட்சத்தில் தீவிர கண்காணிப்பு, பரிசோதனைகளை அதிகரிப்பது ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். குறிப்பாக, அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பது, அறிகுறிகளற்ற நோயாளிகளை வீட்டிலேயே குவாரன்டைன் செய்வது போன்றவை கூடுதல் கவனத்துடன் செய்யப்படும். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால், ஊரடங்கு இல்லாமலேயே நோயைக் கட்டுப்படுத்த முடியும்’’ என்றார்.

மருத்துவர்களின் மன அழுத்தத்துக்கு என்ன தீர்வு?

கோவிட்-19 வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்க அந்தந்த நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறுகிறார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரான மருத்துவர் வசந்தாமணி. ‘‘மனச்சோர்வு, மன அழுத்தத்துக்கு உள்ளாகும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு, அவர்களின் தலைமை அல்லது மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன. மருத்துவமனை ஊழியர்கள் அங்கம் வகிக்கும் வாட்ஸ்-அப் குரூப்களில் ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்பதைக் கேட்டறிந்து, செயல்படுத்துகிறோம். சுகாதாரத்துறையின் மூலம் ஆலோசனைக் கூட்டங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்களை உற்சாகப்படுத்தவும், மனநலத்தை மேம்படுத்தவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது’’ என்றார்.

கொரோனா தடுப்பூசி... ‘‘அவசரம் காட்டினால் ஆபத்து!’’

`ஹைதராபாத்தில் இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனோ தடுப்பூசியான ‘கோவேக்ஸின்’, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்’ என்று வெளியான தகவல் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரத் பயோடெக் நிறுவனம், மனிதர்களிடம் ஆய்வை மேற்கொள்ளவிருக்கிறது. நாடு முழுவதும் 12 மருத்துவமனைகளில் இரண்டாம்கட்ட ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா ஆய்வுகளில் ஈடுபட்டிருப்போருக்கு எழுதிய கடிதத்தில், ‘தற்போதைய ஆய்வுகளை முடித்து, ஆகஸ்ட் 15-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தடுப்பூசியை வெளியிட முடியும்’ என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்தக் கடிதம்தான் வெளியில் கசிந்து, ‘ஆகஸ்ட் 15-ம் தேதி கொரோனா தடுப்பூசி வெளியீடு’ என்று பரபரப்புச் செய்தியானது. பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல் எழுந்ததை அடுத்து ஐ.சி.எம்.ஆர், அறிக்கை வெளியிட வேண்டிய சூழல் உருவானது. அதில், ‘தேவையில்லாத தடைகளைத் தவிர்த்து ஆய்வுகளை விரைவுபடுத்தும் நோக்கிலேயே அந்த ஆலோசனை வழங்கப்பட்டது. மக்களின் பாதுகாப்புக்குத்தான் உயரிய முக்கியத்துவம் வழங்கப்படும்’ என்று விளக்கமளிக்கப்பட்டது.

ஆனாலும் சர்ச்சைகள் ஓயவில்லை. இந்திய அறிவியல் அகாடமி ஓர் எச்சரிக்கை அறிக்கையையே வெளியிட்டது. ‘ஒரு மாதத்தில் மனிதர்களிடம் ஆய்வுகளை முடிக்க வேண்டும் என்று சொல்வது முன்னெப்போதும் கேட்டிராத நடைமுறை. இது வேறு எதிர்பாராத விளைவுகளைக்கூட ஏற்படுத்தலாம். தடுப்பூசி ஆய்வுத்துறைக்கே அவப்பெயரையும் ஏற்படுத்தக்கூடும்’ என்று அகாடமி தலைவர் பார்த்தா மஜூம்தார் எச்சரித்துள்ளார்.

‘‘பாரத் பயோடெக் நிறுவனம் முதல் இரண்டுகட்ட ஆய்வுகளை நடத்த மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. அப்படியானால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் சோதனை நடத்தி, பாதுகாப்பை உறுதிசெய்யும் மூன்றாம்கட்ட சோதனையைத் தவிர்க்கத் திட்டமா?’’ என்ற கேள்வியை எழுப்பும் தடுப்பூசித்துறை ஆய்வாளர்கள், ‘‘எய்ட்ஸ் நோய்த் தடுப்புக்கான ஹெச்.ஐ.வி தடுப்பூசி முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மூன்றாம்கட்ட சோதனையை இன்னும் கடக்கவில்லை. எனவே, இதில் அவசரம் காட்டினால் ஆபத்தில் முடியும்’’ என்றும் எச்சரிக்கின்றனர்.

- டெல்லிபாலா