Published:Updated:

அதிகரிக்கிறது கொரோனா... அலட்சியம் அறவே வேண்டாம்!

 கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

கொரோனா வைரஸ், ‘டெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான்’ என உருமாறிக்கொண்டேதான் இருக்கிறது

அதிகரிக்கிறது கொரோனா... அலட்சியம் அறவே வேண்டாம்!

கொரோனா வைரஸ், ‘டெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான்’ என உருமாறிக்கொண்டேதான் இருக்கிறது

Published:Updated:
 கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவது மக்களை பீதியடையவைத்திருக்கிறது. உண்மையில், கொரோனா பரவல் நிலவரம் என்ன, அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது குறித்து விசாரித்தோம்.

அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்குப் பிறகு நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாகப் பதிவானது. ஆனால், திடீரென ஜூன் மாத தொடக்கத்தில் அதிகரிக்கத் தொடங்கிய தொற்று பாதிப்பு, தற்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமாகியிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2021-ம் ஆண்டு, மே மாதத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பல நூறு பேர் கொரோனா சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சூழல் நிலவியது. ஆனால், 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், அதே மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஒருவர்கூட இல்லாத நிம்மதியான நிலை ஏற்பட்டது. ஆனால், கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு தற்போது தொற்று எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 50 சதவிகிதத்துக்கும் மேல் இருப்பது கவலைக்குரிய செய்தி!

அதிகரிக்கிறது கொரோனா... அலட்சியம் அறவே வேண்டாம்!

கொரோனா விவகாரத்தில் கவனம் தேவை!

திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்தி ருப்பதன் காரணம் என்ன என்பது குறித்து டெல்லியிலுள்ள சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா இல்லாத சூழல் ஏற்படவே இல்லை. கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததுமே, அரசு கொரோனா விவகாரத்தில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்பது கசப்பான உண்மை. மாநில அரசு மற்ற விவகாரங்களுக்கு எந்த அளவுக்கு முன்னுரிமை வழங்கியதோ... அதே அளவுக்கு கொரோனா கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தற்போது பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இல்லை என்றாலும், பரவும் வேகம் மிக அதிகமாக இருக்கிறது. அரசு உடனடியாக போதிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியம். இல்லையென்றால் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது” என்றார் எச்சரிக்கும்விதமாக.

கட்டமைப்புகள் தயாராக இருக்கின்றன!

அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் செந்தில்குமாரிடம் பேசியபோது, ``கொரோனா வைரஸ், ‘டெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான்’ என உருமாறிக்கொண்டேதான் இருக்கிறது. இப்போதுகூட ஒமைக்ரானின் உருமாறிய பி.ஏ-4, பி.ஏ-5 வகை கொரோனா வைரஸ்கள்தான் பரவிவருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை களுக்காகப் படுக்கை வசதி முதல் ஆக்சிஜன் வசதி வரை அனைத்து வகையான கட்டமைப்புகளும் தயார்நிலையில் இருக்கின்றன. பொது மக்களின் ஒத்துழைப்பும் தேவை. பொதுஇடங்களுக்குச் செல்லும்போது, முகக்கவசம் அணியவேண்டியதும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. பொதுமக்கள் கொரோனா தொடர்பான தங்களின் சந்தேகங்களை 104 என்ற அரசின் உதவி எண்ணில் கேட்கலாம். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும்” என்றார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

அலட்சியம் அறவே கூடாது!

கொரோனா பரலைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துவருகிறது என்பது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை படிப்படி யாகத்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரித்து, ஜூலை மாத இறுதியில் மீண்டும் குறையும் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். தற்போது தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவிகிதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 8 சதவிகிதம் பேர் மட்டுமே லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 94.49 சதவிகிதம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 85.13 பேரும் செலுத்தியிருக் கிறார்கள். தடுப்பூசி செலுத்தாதவர்களின் இல்லங்களுக்கே சென்று செலுத்தும் நடவடிக்கையையும் அரசு செய்துவருகிறது. பூஸ்டர் தடுப்பூசியை தொழில் நிறுவனங் களின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் இலவசமாக மக்களுக்குச் செலுத்த ஏற்பாடுகள் நடகின்றன. எனவே, மக்கள் அச்சமடையத் தேவையில்லை. அதே சமயத்தில் அலட்சியம் அறவே கூடாது” என்றார்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

‘முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்’ என்ற அறிவிப்பு வந்திருக்கிறதே ஒழிய, அது தீவிரமாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. அரசு இயந்திரத்திலுள்ள பலரும்கூட முகக்கவசம் அணிவது இல்லை.

வெறுமனே அறிவிப்பாக மட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தி, தொற்று பரவுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதேசமயத்தில், பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதே மருத்துவ ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

இன்னொரு அடியை நம்மால் தாங்க முடியாது!