Published:Updated:

கோவையில் தாண்டவமாடும் கொரோனா! - முடங்கிக்கிடக்கும் எம்.எல்.ஏ-க்கள்...

தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்ததால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய அவர்கள், தேர்தல் அறிவித்தவுடனேயே தங்கள் செயல்பாடுகளைக் கைவிட்டுவிட்டார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

கடுமையாக மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறது கோவை. தினமும் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறார்கள் நோயாளிகள். சென்னையைப் பின்னுக்குத் தள்ளி, மரணவிகிதம் கோவையில் அதிகரித்தபடி இருக்கிறது. பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக விசிட் அடித்து சிகிச்சை மற்றும் சுகாதாரப் பணிகளை முடுக்கிவிடும் அளவுக்கு, கோவையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகியிருக்கிறது!

கடந்த மே 30-ம் தேதி நிலவரப்படி கொரோனா இரண்டு அலைகளிலும் சேர்த்து கோவை மாவட்டத்தில் 1,235 பேர் இறந்திருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கை கூறுகிறது. கோவையின் இந்த நிலைக்கு அரசியல் மல்லுக்கட்டும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். கோவையின் 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெற்றுள்ளது. இதனால், மக்கள் பிரதிநிதி களால் கோவை புறக்கணிக்கப்படுவதாக ஒரு சாராரும், ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப் படுவதாக மற்றொரு சாராரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

என்னதான் நடக்கிறது கோவையில்? பொதுமக்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் பேசினோம். ‘‘கொரோனா முதல் அலையின்போது கோவையில் ஒன்பது தொகுதிகளில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும், பவர்ஃபுல் அமைச்சரான வேலுமணியும் இருந்தனர். தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்ததால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய அவர்கள், தேர்தல் அறிவித்தவுடனேயே தங்கள் செயல்பாடுகளைக் கைவிட்டுவிட்டார்கள். சென்னை உள்ளிட்ட பகுதிகளை ஒப்பிடுகையில், கோவையில் இரண்டாவது அலை தாமதமாகத் தான் தொடங்கியது. சற்று முன்னரே நடவடிக்கை எடுத்திருந்தால் கோவைக்கு இந்த நிலை வந்திருக்காது.

கோவையில் தற்போது எதிர்க்கட்சி கூட்டணி எம்.எல்.ஏ-க்கள்தாம் இருக்கிறார்கள். ஆனால், நடப்பது தி.மு.க ஆட்சி என்பதால், மனு அளிப்பது, பணிகளை ஆய்வு செய்வது என சம்பிரதாயத்துக்கு அவ்வப்போது தலையைக் காட்டுகிறார்களே தவிர, ஆக்ட்டிவ்வாகச் செயல்படுவது இல்லை. கொரோனா தொற்று அதிகரிக்க அதிகரிக்க, ஆளும்கட்சிக்கு மைனஸ் என எதிர்க்கட்சியினர் அரசியல் கணக்குப் போடுகிறார்கள். தேர்தலில் வெற்றிபெற்றதும் கட்சி பிரச்னைக்காக, மேற்கு வங்கத்துக்குப் பறந்த வானதி சீனிவாசன் கோவைக்கு தடுப்பூசி, ஆக்ஸிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்காக மத்திய அமைச்சர்கள் யாரையும் சந்தித்துப் பேசவில்லை.

கோவை பிரச்னையை முன்னிலைப்படுத்த தி.மு.க-விலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அமைச்சர்கள் இளித்துரை ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோருக்கு கோவை மாவட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. இதில் சக்கரபாணி முதல்வர் நிவாரண நிதிக்கு பங்களிக்க உடன் பிறப்புகளிடம் வசூல் வேட்டை நடத்துவதில்தான் குறியாக உள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷை மாற்றிவிட்டு, ககன்தீப் சிங் பேடியை ஆணையராக நியமித்தார்கள். ஆனால், கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் சிறப்பாகச் செயல்படாத நிலையில் அவரை மாற்றவில்லை. அமைச்சர் சக்கரபாணியின் உறவினர் என்பதாலே ஆணையர் மாற்றப்பட வில்லை என்று காரணம் கூறப்படுகிறது.

கோவையில் தாண்டவமாடும் கொரோனா!  - முடங்கிக்கிடக்கும் எம்.எல்.ஏ-க்கள்...

கடந்த மே 20-ம் தேதி ஸ்டாலின் முதல் முறையாக கோவைக்கு வந்தபோது, காலி படுக்கைகள் குறித்தே ஆய்வு செய்தார். மேலும், அந்த விசிட்டில் முதல்வர் நிவாரணத்துக்குப் பணம் வழங்கும் நிகழ்ச்சிக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அப்போதே அவர் அரசு மருத்துவமனைகளில் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தால், இரண்டாவது முறையாக மே 30-ம் தேதி வர வேண்டிய அவசியம் வந்திருக்காது,

ஸ்டாலினின் இரண்டாவது விசிட்டில், அரசியல் மோதல் உச்சத்துக்குச் சென்றது. பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணியினர் #GoBackStalin ஹேஷ்டேகை டிரெண்ட் ஆக்கினர். அன்று மாலையே #WeStandWithStalin ஹேஷ்டேகை டிரெண்ட் ஆக்கி தி.மு.க-வினர் பதிலடி கொடுத்தனர். அதே தினம் ஸ்டாலின் பி.பி.இ கிட்டுடன் கொரோனா நோயாளிகளைச் சந்தித்தது வரவேற்பைப் பெற்றாலும், ‘நாட்டிலேயே கொரோனா வார்டில் நேரடியாக நலம் விசாரித்த முதல் முதல்வர்’ எனச் செய்திக் குறிப்பு வெளியிட்டனர். ஆனால், ஸ்டாலினுக்கு முன்பே பல முதல்வர்கள் இதைச் செய்துள்ளனர். இவையெல்லாம் தேவையில்லாத லாபிகள். ஸ்டாலின் விசிட்டுக்குப் பிறகும்கூட ஆக்ஸிஜன் படுக்கை கோரிக்கைகள் குறையவில்லை. சுகாதாரத்துறையின் தகவலின்படி, ஸ்டாலின் வந்த தினம் மட்டும் கோவையில் கொரோனாவுக்கு 47 பேர் உயிரிழந்துள்ளனர். உண்மையில், கோவையில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு அதைவிட அதிகம்!’’ என்றார்கள் ஆதங்கத்துடன்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் பேசினோம். ‘‘முதல் அலையில் செய்த பல விஷயங்களை இரண்டாவது அலையில் செய்யவில்லை. அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் குறைவாக இருக் கிறார்கள் என்றதும், நாங்கள் அதைச் சரிசெய்தோம். அனைத்து எம்.எல்.ஏ-க்களும் களத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்ஸிஜன், தடுப்பூசி தொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் பேசியுள்ளேன். தடுப்பூசி செலுத்துவதில் சென்னைக்கு இணையாக கோவைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தடுப்பூசி திட்டத்தில் சுணக்கம் ஏற்பட மாநில அரசுதான் காரணம். தொற்று அதிகம் இருந்தும் கோவைக்கு சிறப்பு கவனம் செலுத்தவில்லை’’ என்றார்.

கோவையில் தாண்டவமாடும் கொரோனா!  - முடங்கிக்கிடக்கும் எம்.எல்.ஏ-க்கள்...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணியோ, ‘‘300 வீடுகளுக்கு ஒரு நபர் என்றிருந்த கொரோனா பரிசோதனை அளவை 100 வீடுகளுக்கு ஒருவர் என மாற்றியுள்ளோம். ‘இதில் அரசியல் வேண்டாம். எல்லோரும் இணைந்து பணியாற்றுவோம்’ என முதல்வர் கூறியுள்ளார். அதன்படி அனைவரும் செயல்பட கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘‘கோவை தொழில் நகரம் என்பதால், எவ்வளவு கட்டுப்பாடுகள் போட்டாலும் நடமாட்டம் இருக்கிறது. பிரச்னையைப் புரிந்துகொண்டு மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சென்னைக்கு அடுத்து கோவைக்குதான் தடுப்பூசிகளைக் கொடுக்கிறோம். கோவைக்கு எந்த பாரபட்சமும் காட்டவில்லை. மேற்கு மண்டலம் முழுதும் தனி கவனம் செலுத்தி தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு, மரணங்களை மறைக்க எந்தத் தேவையும் இல்லை’’ என்றார்.

மீளட்டும் கோவை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு