அலசல்
சமூகம்
Published:Updated:

கொரோ‘நோ’ கொடைக்கானல்!

கொடைக்கானல்
பிரீமியம் ஸ்டோரி
News
கொடைக்கானல்

மலைகளின் இளவரசி சாதித்தது எப்படி?

கிட்டத்தட்ட உலகமே கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியிருக்கிறது. அதேசமயம் அரிதாக சிலபல இடங்களை மட்டும் கொரோனா தீண்ட முடியவில்லை.

அப்படியான பகுதிகளில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல். இவ்வளவுக்கும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் 4-ம் இடத்தில் இருக்கிறது திண்டுக்கல் என்பதுதான் ஆச்சர்யம்! எப்படிச் சாத்தியமானது இது?

கொரோனா அறிகுறி தெரிய ஆரம்பித்தவுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய இடங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது கொடைக்கானல். காரணம், சர்வதேச சுற்றுலாத்தலம் அது. வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர் சர்வ சாதாரணமாக உலவும் பகுதி. தரைப் பகுதியைவிட குளுமையான பகுதி. அதனால் மாவட்டத்திலேயே கொரோனா தாக்குதலுக்கு முதலில் கொடைக்கானல்தான் இலக்காகும் என அனைவரும் அச்சப் பட்டனர்.

 சந்தோஷ் - விஜயலட்சுமி
சந்தோஷ் - விஜயலட்சுமி

பரபரவென பணிகள் தொடங்கின. மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மார்ச் 13-ம் தேதியே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளில் இறங்கினார். கொடைக்கானல் நகராட்சி, காவல்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை, தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் நகரைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

மார்ச் 14-ம் தேதி கொடைக்கானல் நகர நுழைவாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகில் உள்ள சோதனைச்சாவடியில் சோதனை பலப்படுத்தப்பட்டது. வெளி நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். கடும் சோதனைக்குப் பிறகே உள்ளூர் நபர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த கொடைக்கானல் குடிமக்கள் 1,200 பேர் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டது. கொடைக்கானலுக்கு வரும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டன. ஒட்டுமொத்த கொடைக் கானலும் ‘சீல்’ வைக்கப்பட்டது. சொல்லப்போனால், மலைகளின் இளவரசியான கொடைக்கானலை நோய்த்தொற்று இல்லாமல் பாதுகாப்பாகப் பூட்டி வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

கொடைக்கானல்
கொடைக்கானல்

கொடைக்கானல் மக்களின் உணவுப்பழக்கமும் கொரோனா தொற்று ஏற்படாததற்கு ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய கொடைக்கானலைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், “கீழ்மலைப் பகுதிகளில் இஞ்சியும் மேல்மலைப் பகுதிகளில் பூண்டும் விளைகின்றன. அவை எங்கள் உணவில் தவிர்க்க முடியாத பொருள்கள். இன்றைக்கு அரசு மருத்துவ மனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இஞ்சிசாறு தினமும் கொடுக்கிறார்கள். சீனாவும் கேரளாவும் கொரோனா நோயாளி களுக்கு இஞ்சியைத்தான் கொடுக்கின்றன.

அத்துடன் கொடைக்கானல் மலைப்பகுதியில் 266 வகையான மூலிகைகள் வளர்வதை பல்வேறு ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இங்கு விளையும் கடுக்காய், தான்றிக்காய் ஆகியவை சிறந்த மருந்துப் பொருள்கள். எல்லாவற்றுக்கும்மேலாக மேல்மலை கிராம மக்கள் தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். முடிந்தவரை அவர்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப்பொருள்கள் அனைத்தையும் அவர்களே விளைவித்துக்கொள்கிறார்கள். இதனால் இன்றைக்கு கொரோனா அச்சம் இல்லாமல் இருக்கிறோம்’’ என்றார்.

கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணனிடம் பேசினோம். “மார்ச் 14-ம் தேதி முதலே எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள்தான் இன்று கொடைக்கானலை காப்பாற்றியிருக்கிறது. சுங்கச்சாவடிகளில் 24 மணி நேரக் கண்காணிப்புக் குழுவை அமைத்தோம். வெளிமாவட்டங்களிலிருந்து வந்த 26 நபர்கள், வெளிநாட்டிலிருந்து வந்த ஐந்து நபர்கள், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 243 நபர்கள் என அனைவரையும் தனிமைப் படுத்தினோம். சோதனையின் முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல்
கொடைக்கானல்

19 நடமாடும் அங்காடி மூலம் காய்கறி, மளிகைப்பொருள்கள் டோர் டெலிவரி செய்யப்படுகின்றன. ஆதரவற்ற 300 நபர்களுக்கு அம்மா உணவகம்மூலம் தினசரி உணவு வழங்குகிறோம். மக்களும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். சமூக இடைவெளியை சரியாகப் பின்பற்று கிறார்கள்’’ என்றார்.

மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, “தரைப்பகுதியைவிட வெப்பம் குறைந்த பகுதி என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி னோம். கொடைக்கானலுக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்தாலும், கேரளாவிலிருந்து சிலர் வனப்பகுதி வழியாக நடந்து கொடைக்கான லுக்கு வந்தார்கள். கடும் சிரமத்துக்கு இடையே அவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி னோம். இதனாலே கொரோனா முற்றிலுமாக இல்லாத பகுதியாக கொடைக்கானல் இருக்கிறது. அனைத்து துறையினரும் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். எல்லாவற்றுக்கும்மேலாக, மக்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது’’ என்றார்.

மக்களும் அரசும் கைகோத்து செயல் பட்டால் எதுவும் சாத்தியம் என்பதற்கு உதாரணம், கொடைக்கானல்!