Published:Updated:

கொரோனா கொடூரம்... நிரம்பி வழியும் படுக்கைகள்... எங்கே போவார்கள் பிற நோயாளிகள்?

கொரோனா கொடூரம்
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா கொடூரம்

கர்ப்பகால தாய்மார்கள் இறப்பும் இந்த காலகட்டத்தில் அதிகமாகியிருக்கிறது. தமிழகத்தில் கர்ப்பகால உயிரிழப்புகள் விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 57 என்ற விகிதத்தில்தான் இருந்துவந்தது.

கொரோனா கொடூரம்... நிரம்பி வழியும் படுக்கைகள்... எங்கே போவார்கள் பிற நோயாளிகள்?

கர்ப்பகால தாய்மார்கள் இறப்பும் இந்த காலகட்டத்தில் அதிகமாகியிருக்கிறது. தமிழகத்தில் கர்ப்பகால உயிரிழப்புகள் விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 57 என்ற விகிதத்தில்தான் இருந்துவந்தது.

Published:Updated:
கொரோனா கொடூரம்
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா கொடூரம்

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதாலும், சிறு மருத்துவமனைகள் மூடப்பட்டிருப்பதாலும் இதர நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்குச் சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

சென்னை ஈ.சி.ஆரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக பாதிப்புள்ள தன் தாய்க்கு டயாலிசிஸ் செய்துவந்திருக்கிறார் அந்த இளைஞர். கடந்த வாரம் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதைக் காரணம் காட்டி டயாலிசிஸ் செய்ய மறுத்துவிட்டது மருத்துவமனை நிர்வாகம். இப்படி தனியார் மருத்துவமனைகளில் மட்டு மல்ல... பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காகச் சிகிச்சைகள் மறுக்கப்பட்டு, நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

கர்ப்பகால தாய்மார்கள் இறப்பும் இந்த காலகட்டத்தில் அதிகமாகியிருக்கிறது. தமிழகத்தில் கர்ப்பகால உயிரிழப்புகள் விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 57 என்ற விகிதத்தில்தான் இருந்துவந்தது. ஆனால் கோவிட் தொற்று, ரத்தப்போக்கு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே 64 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். சரியான நேரத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாமலும் பலர் உயிரிழந்திருக்கின்றனர்.

முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் இந்த அபாயங்கள் குறித்து நம்மிடம் பேசினார். “பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுவிட்டதால், பிற நோய்கள் பாதிப்புகளுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு எமெர்ஜென்சி என்று அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால்கூட பெட் கிடைப்பதில்லை. கொரோனா முதல் அலையின்போது ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளை கொரோனா மருத்துவமனைகளாக மாற்றிவிட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையை பொது சிகிச்சைக்காக வைத்திருந்தனர். ஆனால், இந்தமுறை அந்த மருத்துவமனையையும் போஸ்ட் கொரோனா சென்டராக மாற்றி விட்டார்கள். தொடர்ச்சியாக மாத்திரை சாப்பிடுபவர்கள், மருத்துவ மனைகளுக்குச் சென்று மாத்திரை வாங்கி வர முடியவில்லை. மெடிக்கல் ஷாப்பில் வாங்கலாம் என்றால் மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் கேட்கிறார்கள். இதனால், தொடர்ச்சியாக மாத்திரை சாப்பிட வேண்டியவர்கள், அதைக் கைவிடுவதால் பல அபாயங்கள் ஏற்படலாம்.

கொரோனா கொடூரம்... நிரம்பி வழியும் படுக்கைகள்... எங்கே போவார்கள் பிற நோயாளிகள்?

கொரோனா நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்தான்... அதேநேரம், வழக்கமான நோயாளிகளையும் கைவிடக் கூடாது. விபத்து, மாரடைப்பு, பக்கவாதம், கொரோனா அல்லாத கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவ மனைகளுக்கு வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டுமென்றால், அதை மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு ஒரு முறை தள்ளிப் போடலாம்” என்றார்.

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் நம்மிடம், “கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் சில, தொற்று ஏற்பட்டுவிடும் என்று சொல்லி மற்ற நோய்களுக்குச் சிகிச்சையளிக்க மறுப்பது உண்மை தான். இதைத் தவிர்க்க, அனைத்து மருத்துவமனை களையும் கொரோனா சிகிச்சையளிக்கும் மையங்களாக மாற்றாமல், நூறு படுக்கைகள் உள்ள மருத்துவமனைகளை மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்த வேண்டும். அந்த மருத்துவமனைகளையும் அரசே நேரடியாகக் கையகப்படுத்தி நடத்த வேண்டும். பிற நோயாளிகளுக்கு சிசிக்கையளிக்க மற்ற மருத்துவமனைகளைப் பயன்படுத்த வேண்டும்.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தைராய்டு போன்ற வாழ்வியல் நோய்களுக்காக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்துகளை இரண்டு, மூன்று மாதங்களுக்குச் சேர்த்து வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் மற்றும் புற்றுநோய் போன்ற சிகிச்சைகளுக்காகப் படுக்கைகளைத் தனியாக ஒதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும், அனைத்துப் படுக்கைகளையும் கொரோனாவுக்காக ஒதுக்கிவைப்பது மக்களுக்கு பாதிப்பையே உருவாக்கும்’’ என்கிறார்.

நடராஜன், ரவீந்திரநாத்
நடராஜன், ரவீந்திரநாத்

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இந்தப் பிரச்னை தொடர்பாகப் பேசினோம். “கொரோனா காலகட்டத்தில் உடனடியாக செய்யத் தேவையில்லாத அறுவை சிகிச்சைகளை மட்டுமே ஒத்திவைத்துள்ளோம். அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மற்றும் பிரசவத்துக்கு உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற நோய்களுக்குச் சிகிச்சையளிக்க எந்தத் தயக்கமும் காட்டக் கூடாது என்று தனியார் மருத்துவமனைகளிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டயாலிசிஸ் செய்துவந்த தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி நடந்துகொள்ளும் மருத்துவமனைகள் குறித்து பொதுமக்கள், ஊரகம் மற்றும் மருத்துவ சேவை இயக்குநரகத்தில் (டி.எம்.எஸ்) புகார் தெரிவிக்கலாம். மாவட்டங்களைப் பொறுத்தவரை, இணை இயக்குநருக்குத் (சுகாதாரம்) தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.