கொரோனா பரவலில் இருந்து நம்மைக் காப்பதற்கே ஊரடங்கு. ஆனாலும், அன்றாடம் கடுமையாக உழைத்தால் மட்டுமே கூலி என்ற நிலையில் இருக்கும் சாமானியர்களின் வாழ்க்கையை அது புரட்டிபோட்டுவிட்டது. அன்றாடம் உணவுக்கே வழியில்லாமல் அல்லாடுகிறார்கள். நாடோடிகள், பழங்குடிகளின் நிலை இன்னும் மோசம்.

அரசுகள் அறிவித்த எந்த நிவாரணமும், வானமே கூரை என வாழும் இந்த வீடு அற்ற நாடோடிகளைச் சென்றடையவில்லை. குடும்ப அட்டைகளோ ஆதார் அட்டைகளோ எட்டாத இந்த அடையாளமற்ற மனிதர்களை அரசு இயந்திரம் சீண்டக்கூட இல்லை. ஏதோ தன்னார் வலர்கள் சிலரின் உதவியால் மட்டுமே இவர்கள் உயிர் பிழைத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படியான சூழலில்தான் வாசகர்கள் பங்களிப்புடன் களத்தில் இறங்கியது விகடன்.

அறப்பணி
அறப்பணி

கொரோனா பேரிடரில் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக ஆனந்த விகடன் சார்பில், வாசன் சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம். இதற்காக, வாசன் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு ஆனந்த விகடன் பங்காக 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘இந்த அரும்பணியில் எங்களின் பங்கும் இருக்கவேண்டும்‘ என்கிற எண்ணத்திலிருக்கும் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்களையும் மனதில்கொண்டு, ‘இந்த ஏப்ரல் மாதத்தில் விகடன் குழுமத்துக்கு அவர்கள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து (விகடன் குழும இதழ்களின் சந்தா, ஆன்லைன் சந்தா, விளம்பரங்கள், பிரசுர புத்தகங்கள் உள்ளிட்டவை) 10 சதவிகிதத் தொகையை அவர்கள் சார்பில், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு வாசன் சாரிடபிள் டிரஸ்ட் வழியே கூடுதலாக அர்ப்பணிக்கப்படும்’ என்றும் தெரிவித்திருந்தோம்.

இப்போது மட்டுமல்ல... காவிரி டெல்டாவை கடும் வறட்சி தாக்கியபோதும் வாசகர்கள் பங்களிப்புடன் அரிசி விநியோகித்து பஞ்சம் போக்கினோம். தொடர்ந்து சுனாமி, சென்னை பெருவெள்ளம் மற்றும் கேரள பெருவெள்ளம், தானே புயல், இறுதியாக கஜா புயல்... இப்படி ஒவ்வொரு பேரிடரின்போதும் வாசகர்கள் உதவிக்கரம் நீட்ட, பாதிக்கப்பட்ட மக்களிடம் அதைக் கொண்டு சென்று சேர்த்துவருகிறது விகடன். அந்த வரிசையில், தற்போது கொரோனா ஊரடங்கால் தவித்து நிற்கும் மக்களுக்கு விகடன் வாசகர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். அந்தத் தொகையைக்கொண்டு வாழ்வாதாரம் இழந்து தவிப்போரை அடையாளம் கண்டு நேரடியாக உதவ முடிவெடுத்துள்ளோம்.

நிவாரண உதவித் திட்டத்தின் முதல் முன்னெடுப்பாக, ஏப்ரல் 17-ம் தேதி சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயிலில் வாழ்வாதாரம் இழந்து தவித்துவந்த சுமார் 65 நாடோடிக் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப் பட்டன. இவர்களில் 25 குடும்பங்களுக்கு மட்டுமே குடும்ப அட்டைகள் இருக்கின்றன. ஆதார் அட்டை யாருக்குமே கிடையாது. அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் மணிமாலைகள், சவுரி முடி விற்றுப் பிழைப்பவர்கள் இவர்கள்.

அறப்பணி
அறப்பணி

ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி முன்னிலையில் இந்த 65 குடும்பத்தினருக்கும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து அரிசி, பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட 1,20,000 ரூபாய் மதிப்பிலான மளிகைப்பொருள்களை வழங்கினோம். இந்தப் பணிகளை மேற்கொள்ள, தன்னார்வலர் ராஜ்குமார் உதவினார்.

புனிதத்தலமான ராமேஸ்வரத்தில், ‘மனோலயா’ என்கிற காப்பகம் இயங்கிவருகிறது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட 40 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு பாதிப்பு இவர்களையும் கடுமையாக பாதித்திருந்தது. ஏப்ரல் 24-ம் தேதி, 540 கிலோ அரிசி மற்றும் 46,878 ரூபாய் மதிப்பிலான 23 வகையான மளிகைப்பொருள்களை இந்தக் காப்பகத்துக்கு வழங்கினோம். ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகி என்.ரவிச்சந்திரன், இந்தப் பணிகளுக்கு உதவியாக இருந்தார்.

நாம் கொடுத்தது மளிகைப்பொருள்கள் மட்டுமல்ல... ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’ என்கிற நம்பிக்கையையும்தான். வாசகர்களின் பங்களிப்புடன் விகடனின் அறப்பணி தொடரும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்!

பேரிடரால் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.

நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்/ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரிவிலக்கு கிடைக்கும்.

வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ்.சி கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.

நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரை தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களைக் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற, help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.

குறிப்பு: கடந்த காலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், ‘நிலம் நீர் நீதி’ மற்றும் ‘கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை ‘வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்’ இணையப் பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு