‘தலைமைச் செயலகப் பணியாளர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிட்டனர்’ என்று செய்தி வந்ததும், தமிழகம் கிடுகிடுத்தது. ‘கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பிலுள்ள முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்ள இடத்திலேயே கொரோனா ஊடுருவியது எப்படி?’ என்பது குறித்துப் பல்வேறு விவாதங்கள் கிளம்பின.
இந்தநிலையில், ‘தலைமைச் செயலகம் எப்படி இருக்கிறது?’ என்று தெரிந்துகொள்ள திடீர் விசிட் அடித்தோம்...
தலைமைச் செயலகத்தின் பழைய பில்டிங்கில் சட்டமன்றம், சட்டமன்றச் செயலகம், உள்துறை, மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. `நாமக்கல் கவிராயர் மாளிகை’ எனப்படும் பத்து மாடிக் கட்டடத்தில் பிற முக்கிய அரசுத்துறைச் செயலாளர்களின் அலுவலகங்கள் இயங்குகின்றன. இரண்டிலும் சேர்த்து சுமார் 6,400 பணியாளர்கள் பல்வேறு லெவலில் பணியில் இருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கோட்டைக்கு எதிரே இருக்கும் வாகன நிறுத்துமிடம், இப்போது தற்காலிக பஸ் ஸ்டாண்டாகவே மாறியிருக்கிறது. ஆம்! காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் மற்றும் சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வரும் தலைமைச் செயலகப் பணியாளர்களுக்காக விடப்பட்ட சிறப்புப் பேருந்துகள் அங்கே நிறுத்தப்பட்டிருந்தன.
தலைமைச் செயலகத்தின் உள்ளே சென்றோம். சென்ட்ரலைஸ்டு ஏ.சி-யை நிறுத்திவிட்டிருப்பதால், அதிகாரிகள் புழுக்கத்தில் தவிக்கின்றனர், குறிப்பாக நாமக்கல் கவிராயர் மாளிகையில். ‘‘இங்கே இடவசதி குறைவு. நெருக்கமான இருக்கைகளில்தான் பணியாளர்கள் அமர வேண்டிய சூழ்நிலை. ஃபைல்கள் குவியல் வேறு! ஃபேன்கள் ஓடினாலும் வெக்கை தாங்கவில்லை. அதனால், ஒவ்வொரு தளத்திலும் நிரந்தரமாக மூடப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னல்களைப் பெயர்த்து திறந்துவிட்டனர். அதன் பிறகுதான் ஓரளவுக்குக் காற்றோட்டம் இருக்கிறது’’ என்கிறார்கள் பணியாளர்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதிகாரிகள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம். ‘‘ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டமன்றச் செயலகத்தில் ஒரு டைப்பிஸ்ட், இன்னோர் அதிகாரி என இருவருக்கு முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். பிறகு, நாமக்கல் கவிராயர் மாளிகையின் கீழ்த்தளங்களில் பணியாற்றும் சாதாரண ஊழியர்களில் ஓரிருவருக்கு பாதிப்பு வந்தது. அடுத்ததாக, பழைய பில்டிங்கின் கீழ்த்தளத்திலுள்ள செய்தித்துறை அலுவலகத்தில் பி.ஆர்.ஓ-க்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இன்னும் இருவருக்கும் கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்துள்ளன.

தொழில்துறையின் சிறப்புச் செயலாளர் அருண் ராயின் அலுவலக உதவியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொழில்துறையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூவர், தினமும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான டைனிங் ஹாலில் சாப்பிடுவது வழக்கம். அந்த மூவரில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தெரிய வரவே, மற்றவர்கள் பின்வாங்கிவிட்டனராம். இப்போதெல்லாம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யாரும் அந்த டைனிங் ஹால் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை’’ என்றனர்.
ஜூன் 12-ம் தேதி கணக்குபடி, தலைமைச் செயலக ஊழியர்களில் 100 பேருக்கு மேல் கொரோனா தொற்று உள்ளதாக தகவல். மேலும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கும் 257 ஊழியர்களில் 100 பேருக்கு ‘பாசிட்டிவ்’ என ரிசல்ட் வர வாய்ப்பிருக்கிறதாம்.
முதல்வர் அலுவலகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர், ‘‘முதல்வர் அலுவலக வளாகத்தைச் சுத்தப்படுத்தும் பணியிலிருந்த தற்காலிகப் பணியாளரான பெண்மணி ஒருவருக்குத் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நடமாடும் டெஸ்ட்டிங் வேன் ஒன்றைக் கொண்டு வந்து அடிக்கடி முதல்வர் அலுவலகத்துக்கு வந்துபோகும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்கிறோம். யாருக்காவது சின்ன அறிகுறி தெரிந்தாலே, `பணிக்கு வர வேண்டாம்’ என்று அவர்களை அனுப்பிவிடுகிறோம்’’ என்றார்.
தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று பரவியது குறித்து உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘இவ்வளவு பணியாளர்கள் வர வேண்டிய அவசியமே இல்லை. இந்த ஆட்சி கடைசி வருடத்தில் இருக்கிறது. 2020-21-ம் ஆண்டுக்குப் போடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகள்படி, ஒவ்வொரு துறையிலும் திட்டப் பணிகளுக்காகச் செலவிடப்பட வேண்டிய பணத்தை எடுத்தாக வேண்டும். திட்ட அறிக்கை மற்றும் அரசு ஆணைகளை முறைப்படி போட்டால்தான் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். இதற்காகத்தான் இவ்வளவு பணியாளர்களை வரவழைத்து அவசர அவசரமாக வேலை வாங்குகின்றனர். தலைமைச் செயலகத் துக்குள் கொரோனா புகுந்ததற்கு பணியாளர்களை அதிகப்படுத்தியதுதான் காரணம்’’ என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமியிடம் கேட்ட போது, “33 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு இயங்கியபோது நிலைமை இவ்வளவு மோசமாக இல்லை. 50 சதவிகிதப் பணியாளர்கள் வர ஆரம்பித்த பிறகுதான் கொரோனா தொற்று இங்கே அதிகமானது. சிவப்பு மண்டலங்கள், தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து சிலர் இங்கு பணிக்கு வருகின்றனர். இது கொரோனா பரவலுக்கு முக்கியமான காரணம்.

வெளிநாட்டுக்குச் செல்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் அலுவலகம் பொதுத்துறை வளாகத்தில் இருக்கிறது. அங்கே மக்கள் புழக்கம் அதிகம் இருக்கிறது. அதைத் தற்காலிகமாக வேறு எங்காவது மாற்ற வேண்டும். கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக, தலைமைச் செயலக பணியாளர்களுக்கென்று பிரத்யேகமாக மருத்துவமனையை ஒதுக்கித் தர வேண்டும். அப்போதுதான் இங்கு பணியாற்றும் பணியாளர்கள், அவர் களின் குடும்பத்தினர் பாதுகாப்புடன் சென்றுவர முடியும். ‘உடல் பாதிப்பு உள்ளவர்கள் பணிக்கு வர வேண்டாம்’ என்று அரசுத் தரப்பில் அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளபடி, ஒரு துறைக்கு 20 பேர்; ஒரு பிரிவுக்கு இரண்டு பேர் வீதம் பணியாளர்களை வரச் சொன்னால் நல்லது’’ என்றார்.
அவரிடம் விடைபெற்று, தலைமைச் செயலகத்தின் பழைய பில்டிங்கின் சில தளங்களில் வலம் வந்தோம். முதல் தளத்தில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. சட்டசபை நடக்கும் நேரத்தில், மாநகராட்சியின் நாய் பிடிக்கும் வண்டி வந்து நாய்களை அள்ளிப்போகும். இப்போது நாய் பிடிக்கும் வண்டிகள் வருவதில்லையென்பதால் நாய்கள் கம்பீரமாக வலம் வருகின்றன. மாடியிலிருந்து பார்த்தபோது, தலைமைச் செயலகத்தின் பின்புறம் பல்வேறு பொருள்கள் குப்பைகளாகக் கிடப்பது தெரிந்தது. அவற்றைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு, நேராக தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்தோம்.... நமது செல்போனில் பதிவுசெய்திருந்த நாய் நடமாட்டம், குப்பைக் குவியல் படங்களை அவரிடம் காட்டினோம். ‘‘உடனே நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘அரசுச் செயலாளர் பதவியிலுள்ள நான்கைந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வீட்டி லிருந்தே பணிசெய்யச் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், அவர்களின் அலுவலகத்தில் சிலருக்கு கொரோனா பாதிப்பு தெரிந்தது. முதல்வரை அடிக்கடி சந்திக்கும் அதிகாரிகள் அனைவரும் கொரோனா டெஸ்ட் செய்துவருகிறோம். வாரம் ஒரு முறையாவது டெஸ்ட் செய்யப்படுகிறது’’ என்றவர், தலைமைச் செயலகத்தில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தார். இறுதியாக, ‘‘எங்களால் இயன்றதை தீவிரமாகச் செய்கிறோம. மக்கள் முழு ஒத்துழைப்பு தந்தால்தான், கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்’’ என்றபடி விடைகொடுத்தார்.