Published:Updated:

மூன்றாவது அலை... குழந்தைகளுக்கு பாதிப்பா?

மூன்றாவது அலை... குழந்தைகளுக்கு பாதிப்பா?
பிரீமியம் ஸ்டோரி
மூன்றாவது அலை... குழந்தைகளுக்கு பாதிப்பா?

மூன்றாவது அலை வருமா, வராதா என்று யாருக்கும் தெரியாது. வெளிவரும் செய்திகள் எல்லாமே கணிப்புகள்தான்.

மூன்றாவது அலை... குழந்தைகளுக்கு பாதிப்பா?

மூன்றாவது அலை வருமா, வராதா என்று யாருக்கும் தெரியாது. வெளிவரும் செய்திகள் எல்லாமே கணிப்புகள்தான்.

Published:Updated:
மூன்றாவது அலை... குழந்தைகளுக்கு பாதிப்பா?
பிரீமியம் ஸ்டோரி
மூன்றாவது அலை... குழந்தைகளுக்கு பாதிப்பா?

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் குறைந்துவருகிறது. படிப்படியாக ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. சென்னை போன்ற நகரங்களில் மீண்டும் மக்கள் இயல்பாக நடமாடத் தொடங்கியிருக்கிறார்கள். மருத்துவமனைகளில் பதற்றம் தணிந்திருக்கிறது. இந்தச் சூழலில் கொரோனா மூன்றாம் அலையின் வருகை பற்றிச் செய்திகள் பரவுகின்றன. ‘முதல் அலை முதியவர்களையும் இரண்டாம் அலை இளைஞர்களையும் பாதித்ததுபோல மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம்’ என்றும் சில செய்திகள் கிளம்பியிருக்கின்றன. இது பதைபதைப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

முதல் அலையைத் தடுமாறிக் கடந்தோம். எந்த முன்னேற்பாடுகளும் செய்யாத நிலையில், இரண்டாம் அலை பேரழிவை ஏற்படுத்தியது. மூன்றாவது அலை வருமா? வந்தால், அதன் தாக்கம் எப்படியிருக்கும்? அதற்கான முன்னேற்பாடுகள் நம்மிடம் உள்ளதா?

‘‘மூன்றாவது அலை வருமா, வராதா என்று யாருக்கும் தெரியாது. வெளிவரும் செய்திகள் எல்லாமே கணிப்புகள்தான். அடுத்த தாக்கம் பற்றிக் கணிக்கும்போது, நாம் எவ்வளவு பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளோம், தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதையெல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டும்’’ என்கிறார், மதுரை மருத்துவக் கல்லூரி நுரையீரல் சிகிச்சைப் பிரிவு துணைப் பேராசிரியர் டாக்டர் இளம்பரிதி.

மூன்றாவது அலை... குழந்தைகளுக்கு பாதிப்பா?

‘‘கொரோனா தாக்கி மீண்டவர்களுக்கு அந்த எதிர்ப்பாற்றல் எவ்வளவு காலம் இருக்கும் என்பது தீர்மானமாகத் தெரியவில்லை. தடுப்பூசி தரும் எதிர்ப்பாற்றல் காலத்தையும்கூட உறுதியாகச் சொல்ல முடியவில்லை. முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் நோயின் தீவிரத்தில் வித்தியாசம் இல்லை. ஒரே மாதிரிதான் இருந்தது. ஆனால் முதல் அலை தீவிரமாகும் நேரத்தில் நாம் ஊரடங்கில் இருந்தோம். அதனால் நிதானமாக ஏறி இறங்கியது. இரண்டாம் அலைக்கு நாமே தேடிப்போய் இலக்கானோம். நம் மக்கள் கொரோனாவே முடிந்துபோனது என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். அதனால் பாதிப்பு அதிகம்.

முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடையில் மூன்று, நான்கு மாதங்கள் இருந்தும் நாம் வீணடித்துவிட்டோம். இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. கடைசி ஒரு மாதத்தில் நம் மருத்துவ உள்கட்டமைப்பைக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக்கியிருக்கிறது அரசு. ஆக்சிஜனும்கூட போதிய அளவுக்கு இருக்கிறது. மூன்றாவது அலை வீரியமாக வந்தால்கூட அதை நம்மால் எதிர்கொள்ள முடியும். மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் இரண்டு அலைகளிலும் மிகுந்த அனுபவங்களைச் சேகரித்தி ருக்கிறார்கள். மருந்துகள், தடுப்பூசிகள் இரண்டையும் மத்திய அரசு போதிய அளவுக்குக் கொள்முதல் செய்து முன்கூட்டியே மாநிலங் களுக்குத் தந்துவிட்டால் பிரச்னை இருக்காது’’ என்கிறார் மருத்துவர் இளம்பரிதி.

மருத்துவ உலகம் நம்பும் இயற்கை நியதி ஒன்று உண்டு. ஒரு வைரஸ் அதிக இறப்பை ஏற்படுத்துகிறது என்றால் அதன் பரவும் தன்மை குறைவாக இருக்கும். பரவும் தன்மை அதிகம் இருந்தால் உயிரிழப்பு அதிகமிருக்காது. கொரோனா வைரஸின் இறப்பு விகிதம் என்பது இப்போதுவரை 1.5 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் மட்டுமே. 100 பேர் தொற்றுக்குள்ளானால் 2 பேர் இறக்கிறார்கள். வைரஸின் பரவும் தன்மை மாறுகிறதே தவிர, பாதிப்பின் தீவிரம் மாறவில்லை என்பது ஆறுதல்.

ஆனாலும் கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவதென்பது, நம் சமூக எதிர்ப்பாற்றலைப் பொறுத்தது. எந்த வைரஸாக இருந்தாலும், மொத்த மக்கள்தொகையில் 70 சதவிகிதம் பேர் எதிர்ப்பாற்றலோடு இருந்தால்தான் தாக்கம் குறையும். இதுதான் இதுவரையிலான நமது படிப்பினை. இந்தச் சமூக எதிப்பாற்றலைக் கண்டறிய ‘சீரோ சர்வெலன்ஸ்’ என்ற ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மூன்றாவது அலை... குழந்தைகளுக்கு பாதிப்பா?

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபரிலும் இவ்வாண்டு ஏப்ரலிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பரவலாக 765 பகுதிகளைச் சேர்ந்த 22,904 பேரிடம் ரத்த மாதிரி பெறப்பட்டு அதில், ‘ஆன்ட்டிபாடி’ எனப்படும் கொரோனா எதிர்ப்பாற்றல் இருக்கிறதா என்று சோதிக்கப்பட்டது. 2020 அக்டோபரில் செய்யப்பட்ட ஆய்வில், தமிழ்நாட்டின் சராசரி கொரோனா எதிர்ப்பாற்றல் 31 சதவிகிதமாக இருந்தது. 2021 ஏப்ரலில் செய்யப்பட்ட ஆய்வில் எதிர்ப்பாற்றல் 23 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மட்டும் எதிர்ப்பாற்றல் அளவு அதிகரித்திருந்தது. பிற மாவட்டங்களில் கணிசமாகக் குறைந்திருந்தது.

‘‘தற்போது சமூக எதிர்ப்பாற்றல் நிலையை அறிய அரசு ‘சீரோ சர்வெலன்ஸ்’ ஆய்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது’’ என்கிறார், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணி ராஜன்.

‘‘நோய்த்தொற்றின் மூலம் உருவான இயற்கையான எதிர்ப்பாற்றல், தடுப்பூசி மூலம் கிடைக்கும் எதிர்ப்பாற்றல் எல்லாம் சேர்த்து, சமூக எதிர்ப்பாற்றலின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் மூன்றாவது அலை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆகஸ்ட் மாதத்துக்குள் சீரோ சர்வெலன்ஸ் ஆய்வு முடிவு வந்துவிடும்.

பிற நாடுகளின் நிலவரத்தையும் கூர்ந்து கவனித்துவருகிறோம். ஜப்பானில் ஒரு மாத இடைவெளியில் மூன்றாவது அலை தாக்கி யிருக்கிறது. சில நாடுகளில் 120 நாள்கள் கழித்து மூன்றாவது அலையின் தாக்கம் தொடங்கி யிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, சமூக எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும்பட்சத்தில் இரண்டாம் அலை தொடங்கியதிலிருந்து 70 முதல் 120 நாள்களுக்குள் மூன்றாவது அலை தாக்கம் இருக்கலாம். அதன்படி செப்டம்பரில் தொடங்கலாம்.

எதிர்ப்பாற்றலை அதிகரிக்க நம்முன் இருக்கும் ஒரே வழி தடுப்பூசிதான். அடுத்த மூன்று மாதங்களுக்குள் தடுப்பூசி போட்டு முடித்து விட்டோம் என்றால் மூன்றாவது அலை தாக்கும் காலம் தள்ளிப் போகலாம். ஆனாலும் மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

அமெரிக்காவில் முதல் அலையில் 3 சதவிகிதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். மூன்றாவது அலையில் 22 சதவிகிதக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் காய்ச்சல், இருமல், சளி, சோர்வு, வயிற்றுப்போக்கு போன்றவை குழந்தைகளுக்கான அறிகுறிகளாக இருந்தன. மூன்றாம் அலையில் உருமாறிய கொரோனா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது.

மூன்றாவது அலை... குழந்தைகளுக்கு பாதிப்பா?

மத்திய அரசு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. ‘ரெம்டெசிவிர் மருந்தை குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. மிக அவசியம் என்றால் மட்டுமே சி.டி ஸ்கேன் எடுக்கவேண்டும். ஸ்டீராய்டு, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை மிகவும் அவசியமுள்ள நேரத்தில் மட்டும் பயன்படுத்தவேண்டும்’ என்றெல்லாம் மருத்துவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேரணி ராஜன், இளம்பரிதி, பரூக் அப்துல்லா, சித்ரா
தேரணி ராஜன், இளம்பரிதி, பரூக் அப்துல்லா, சித்ரா

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை குடும்பங்களை மொத்தமாக பாதித்ததால் குழந்தைகளும் எளிதில் இலக்கானார்கள். ‘‘ஆனாலும் மரணங்கள் மிகமிகக் குறைவு. மூன்றாவது அலை தாக்கி ஓய்ந்திருக்கிற அமெரிக்கா போன்ற நாடுகளில்கூட குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கிறது. இங்கும் மொத்த மரணங்களில் குழந்தைகளின் இறப்பு என்பது ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதுவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 53 சதவிகிதம். முதல் அலையோடு ஒப்பிடும்போது இரண்டாம் அலைக் காலத்தில் நாம் குழந்தைகள்மீது அதிக கவனம் செலுத்தியிருக்கிறோம். அதேநேரம், எல்லாப் பகுதிகளிலும் குழந்தைகளுக்கான படுக்கைகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கான மருந்துகளை அதிகமாகக் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்களை அதிகப்படுத்திக்கொள்வதும் நல்லது’’ என்கிறார், கொரோனா குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் மருத்துவர் பரூக் அப்துல்லா.

‘‘இதுவரை உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் அச்சமூட்டும் வகையில் இல்லை. இந்தியாவில் கண்டறியப்பட்ட Delta (B.1617.2) Kappa (B.1.617.1) வேரியன்ட்களும் சரி, அண்மையில் பிரேசிலில் கண்டறியப்பட்ட பெயரிடப்படாத வேரியன்ட்டும் சரி... முன்னைவிட அதிக வேகமாகப் பரவுவது, தாக்குதலில் சற்றுத் தீவிரம் என சிறு சிறு மாற்றங்கள்தான் ஏற்பட்டுள்ளன. ஆனாலும், மூன்றாவது அலையை நாம் கவனமாக எதிர்நோக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

இரண்டாம் அலைத் தாக்குதலின் மத்தியில் பொறுப்பேற்ற தி.மு.க அரசு, வெகுதீவிரமாகக் களத்திலிறங்கிப் பணியாற்றியது. உள்கட்டமைப்பையும் வலுப்படுத்தியுள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலும் குழந்தைகளுக்கான ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், சென்னை தவிர பிற பகுதிகளில் பரிசோதனை முடிவுகள் மிகவும் காலதாமதமாக வருகின்றன. இரண்டாம் அலை உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக இதையே குறிப்பிடுகிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள். அதனால் சோதனை முடிவுகள் விரைவாக வருவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக நோயியல் பிரிவு பேராசிரியர் சித்ரா, பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ‘‘மூன்றாம் அலை கண்டிப்பாக வரும். ஆனால், அதை நம்மால் எதிர்கொள்ள முடியும்’’ என்கிறார்.

‘‘முதல் அலை பாதிப்பின்போது நாம் அந்த வைரஸ் பற்றி குறைவாகவே அறிந்திருந்தோம். வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் வெளியில் சுற்றியவர்கள், இணை நோய் இருந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலை நமக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. இப்போது எல்லோருக்கும் பாதிப்பின் தன்மை புரிந்திருக்கிறது; விழிப்புணர்வும் வந்துவிட்டது. கூடவே தடுப்பூசியும் போடுகிறோம்.

மூன்றாவது அலை நிச்சயம் வரும். யாரெல்லாம் தடுப்பூசி போடாமல் இருக்கிறார்களோ, முகக்கவசம் அணியாமல் இருக்கிறார்களோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்கிறார்களோ அவர்கள்தான் அதிலும் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார்.

‘மூன்றாம் அலை வரும். ஆனால் அதை நம்மால் எதிர்கொள்ள முடியும்’ என்பதுதான் இப்போதைய நிலை. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்போம். குழந்தைகள்மீது கூடுதல் கவனம் வைப்போம்.

எப்போது வரும் குழந்தைகளுக்கான தடுப்பூசி?

கனடா அரசு 12 - 15 வயதுக் குழந்தைகளுக்கான தடுப்பூசியைப் போடத் தொடங்கிவிட்டது. அமெரிக்கா, இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்னும் சோதனை அளவில்தான் இருக்கிறது. 2 முதல் 18 வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனை நடந்துவருகிறது. அடுத்த ஆண்டு குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரலாம் என்கிறார்கள்.

எதிர்ப்பாற்றலால் எழும் இன்னொரு பிரச்னை!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் குழந்தைகள். அந்த மன அழுத்தம் ஒரு பக்கம். கொரோனாத் தொற்றின் தாக்கம் இன்னொரு பக்கம். இந்தச் சூழலில் தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு உருவாகும் கோவிட் எதிர்ப்பாற்றல் வேறு சில பிரச்னைகளை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார் மருத்துவர் தேரணி ராஜன்.

‘`தொற்று ஏற்பட்டு குணமடைந்த குழந்தைகளுக்கு இயற்கையான எதிர்ப்பாற்றல் உருவாகும். அதனால் சில பிரச்னைகள் ஏற்படுவதை வகைப்படுத்தியிருக்கிறோம். இதை Multisystem inflammatory syndrome in children என்று அழைக்கிறார்கள். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இந்த பாதிப்புகளோடு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சையில் இருக்கிறார்கள். கொரோனா வந்து குணமடைந்த பிறகு, தொடர்ந்து மூன்று நாள்கள் காய்ச்சல், தோலில் சில மாற்றங்கள், நாக்கு ஸ்ட்ராபெர்ரி நிறத்திற்கு மாறுவது, நெறி கட்டுவது, இதயம் வீக்கமடைவது, மூச்சு விடுவதில் சிரமம், எரிச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. சரியான நேரத்தில் பாதிப்பின் நிலையைக் கண்டுபிடித்து சிகிச்சையளிக்க வேண்டும். மத்திய அரசு இதற்கான வழிகாட்டுதல்களை அனுப்பியிருக்கிறது’’ என்கிறார் அவர்.