Published:Updated:

கொரோனா 3-ம் அலை... பயப்படத் தேவையில்லை... நம்பிக்கை தரும் ஆய்வுகள்!

கொரோனா 3-ம் அலை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா 3-ம் அலை

முதல் அலையில், நமக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஓரிருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இரண்டாவது அலையில் பலரும் பாதிக்கப்பட்டார்கள்.

கொரோனா 3-ம் அலை... பயப்படத் தேவையில்லை... நம்பிக்கை தரும் ஆய்வுகள்!

முதல் அலையில், நமக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஓரிருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இரண்டாவது அலையில் பலரும் பாதிக்கப்பட்டார்கள்.

Published:Updated:
கொரோனா 3-ம் அலை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா 3-ம் அலை

“கொரோனா இரண்டாவது அலையைப்போல மூன்றாவது அலையில் பாதிப்புகள், உயிரிழப்புகள் அதிகம் இருக்காது’’ என்கிற ஐ.ஐ.டி-யின் சமீபத்திய ஆய்வு முடிவு மிகப்பெரிய ஆசுவாசத்தை அளித்திருக்கிறது. அதேபோல, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்திய பரிசோதனையில், நம் நாட்டில் மூன்றில் இரண்டு பேரின் உடல்களில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பான்கள் (ஆன்டிபாடி) உருவாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக மெதுவாக அதிகரித்துவரும் நிலையில், ஹைதராபாத் ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மதுக்குமல்லி வித்யாசாகர் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மணீந்திரா அகர்வால் ஆகியோர் கணித முறையின் அடிப்படையில் ஆய்வு செய்து, கொரோனா மூன்றாவது அலையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்துச் சில முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

“கொரோனா இரண்டாவது அலையைப்போல மூன்றாவது அலை இருக்காது. ஆகஸ்ட் இறுதியில் பாதிப்புகள் சிறிது அதிகரித்து, செப்டம்பர் முழுவதும் இருக்கும். அதுவும் ஊரடங்கைத் தளர்வு செய்ததால் ஏற்படும் பாதிப்பே தவிர, உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸால் உருவாவது அல்ல. மேலும், இதுவரை கொரோனா வைரஸ் புதிதாக உருமாற்றம் அடைந்ததாகவும் தெரியவில்லை. ஒருவேளை மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. அதனால் யாரும் பயப்படத் தேவையில்லை” என்று மணீந்திரா அகர்வால் கூறியிருப்பது மருத்துவ உலகில் நம்பிக்கையை விதைத்துள்ளது. காரணம், இவர்கள்தான் கொரோனா இரண்டாவது அலை குறித்தும் மிகத் துல்லியமாக கணித்திருந்தனர்.

கொரோனா 3-ம் அலை... பயப்படத் தேவையில்லை... நம்பிக்கை தரும் ஆய்வுகள்!

கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் சொல்கிறார் தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்... “முதல் அலையில், நமக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஓரிருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இரண்டாவது அலையில் பலரும் பாதிக்கப்பட்டார்கள். முதல் இரண்டு அலைகளிலேயே பெரும்பாலானவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுவிட்டதால், மூன்றாவது அலையின் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்தியாவிலுள்ள 21 மாநிலங்களில் நடத்திய சீரோ ஆய்விலும், மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு (67%) கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பான்கள் உடலில் உருவாகியிருப்பது தெரியவந்திருக்கிறது.

அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் மட்டுமல்லாமல், அறிகுறிகள் இல்லாமலும் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் உடலில் ஆன்டிபாடி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாலும் பல கோடி மக்களுக்கு ஆன்டிபாடி உருவாகியுள்ளது. அதனால் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட தற்காப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தாலே மூன்றாவது அலை பெரிதாக வருவதற்கு வாய்ப்பில்லை’’ என்றார் நம்பிக்கையுடன்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தும் தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி, “அடுத்தடுத்து வெளியாகும் ஆய்வு முடிவுகள், ஐ.சி.எம்.ஆர் நடத்திய சீரோ சர்வேயின் முடிவுகள் ஆகியவை நமக்குச் சாதகமாகவே இருக்கின்றன. தடுப்பூசியும் நமக்கான தற்காப்பு ஆயுதமாக இருக்கிறது. ஆனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்களிடம் தடுப்பூசியின் அவசியம் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். அதேபோல, மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மக்களின் உடலிலும் ஆன்டிபாடி உருவாகும்வரை பெரும் திரளாகக் கூடும் விழாக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. தியேட்டர்கள், ஷாப்பிங் மால் போன்ற இடங்கள்தான் தொற்றைப் பரப்பும் இடங்களாக இருக்கின்றன. அதனால், அவற்றைத் திறப்பதிலும் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். திறந்தவெளிக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கலாம். தமிழகத்தில் எட்டு கோடி டோஸ் தடுப்பூசி போடும்வரை நாம் கவனமாகத்தான் இருந்தாக வேண்டும்’’ என்றார்.

அஷ்வின் கருப்பன், குழந்தைசாமி, ராதாகிருஷ்ணன்
அஷ்வின் கருப்பன், குழந்தைசாமி, ராதாகிருஷ்ணன்

“மூன்றாம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன?” என்று தமிழக மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். “மூன்றாவது அலை ஏற்படாமலிருக்க அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. சமீபத்தில் தமிழக முதல்வர் நோய்ப் பரவலின் தன்மைக்கு ஏற்ப அந்தந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கினார். நோய்ப் பரவலின் தன்மையைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். தமிழகம் முழுவதும், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

அதேவேளையில், தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாகச் சரியாகவில்லை என்பதையும் மக்கள் உணர வேண்டும். பல்வேறு இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருக்கிறார்கள். அந்த இடத்தில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் அடுத்தடுத்த நபர்களுக்குப் பரவிவிடும். அப்படிப் பரவும் சங்கிலியை உடைப்பது மக்கள் கையில் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism