Published:Updated:

நெல்லை: `முதல்வர் அறிவித்த ரூ.1 லட்சம் நிவாரணம்!’ - அதிருப்தியில் ஒப்பந்தப் பணியாளர்கள்

கூடுதல் நிவாரணம் கோரி போராடும் அமைப்பினர்
கூடுதல் நிவாரணம் கோரி போராடும் அமைப்பினர்

நெல்லை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றிய பெண் தொழிலாளரின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. அவருக்கு முதல்வர் அறிவித்துள்ள நிவாரணம் மிகக் குறைவாக இருப்பதாக அதிருப்தி எழுந்துள்ளது.

நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். மாநகராட்சி சார்பாக நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இயந்திரத்தில் அவரது கை சிக்கியதில் வலது கை சிதைந்து துண்டானது.

ஒப்பந்தப் பணியாளர் பாக்கியலட்சுமி
ஒப்பந்தப் பணியாளர் பாக்கியலட்சுமி

நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மாநகராட்சி சார்பாக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எந்தப் பயிற்சியும் அளிக்காமல் இயந்திரத்தை இயக்கச் சொல்வதால் இத்தகைய விபத்துகளில் சிக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பெண் ஊழியரின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்! - சர்ச்சையில் நெல்லை மாநகராட்சி

சில மாதங்களுக்கு முன்பு, பார்வதி என்பவர் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுக்கையில் இருப்பதாகப் புகார் தெரிவிக்கும் ஒப்பந்தப் பணியாளர்கள், கையை இழந்த பாக்கியலட்சுமியின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

முதல்வரின் நிவாரண உதவிக்கான அறிவிப்பு
முதல்வரின் நிவாரண உதவிக்கான அறிவிப்பு

இந்த நிலையில், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் கையை இழந்த பாக்கியலட்சுமியின் குடும்பச் சூழலைக் கவனத்தில் கொண்டு அவரது குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் அறிவித்துள்ள தொகை மிகக் குறைவானது எனத் தெரிவித்து ஆதித்தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், துப்புரவுப் பணியாளர் கூட்டமைப்பினரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

”பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி மற்றும் பார்வதிக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இருவரையும் நிரந்தரப் பணியாளராக்க வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால், வரும் 7-ம் தேதி நெல்லைக்கு வருகைதரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம்” என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அறிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு