Published:Updated:

“லஞ்ச அராஜகத்துக்கு விடியலே இல்லையா?” - ராத்திரி ரவுண்ட்-அப்

காட்பாடி
பிரீமியம் ஸ்டோரி
காட்பாடி

- நைட் ரைடர்

“லஞ்ச அராஜகத்துக்கு விடியலே இல்லையா?” - ராத்திரி ரவுண்ட்-அப்

- நைட் ரைடர்

Published:Updated:
காட்பாடி
பிரீமியம் ஸ்டோரி
காட்பாடி

காட்பாடி ரயில் நிலையம்... இரவு 1:30 மணி. வாடகை டாக்ஸிகள் வரிசைகட்டியிருக்க... நடுத்தர வயதைத் தாண்டிய டிரைவர் ஒருவர் காரில் சாய்ந்துகொண்டு எம்.எஸ்.வி-யை ரசித்துக்கொண்டிருந்தார். ஸ்டேஷனின் உள்ளே மூச்சிரைக்க வந்து நின்ற தன்பாத் - ஆலப்புழா ரயில் குறித்த அறிவிப்பு லவுட் ஸ்பீக்கரில் ஒலித்தது. கொசகொசவென பேசிக்கொண்டு, மூட்டை முடிச்சுகளுடன் இறங்கியது பெருங்கூட்டம். ஆண்களும் பெண்களுமாக சுமார் நூறு பேர் இருப்பார்கள்... அத்தனையும் வடக்கத்தி முகங்கள். இரண்டு நாள்கள் பயணித்திருப்பார்கள்போல... கிழிந்த உடைகளிலும், ஒட்டிப்போன கன்னங்களிலும் வெளிப்பட்டது கொரோனா வேலையிழப்பு. தூக்கக் கலக்கத்துடன் மெதுவாக நடந்தவர்கள், ரயில் நிலைய முகப்பில் சோர்வுடன் அமர்ந்தார்கள். சிலர் உணவுப் பொட்டலங்களைப் பிரித்து சாப்பிடத் தொடங்க, அடிக்கடி யாரையோ தேடின அவர்களின் கண்கள். குழந்தையொன்று வீறிட்டு அழவே... சுடிதாரின் ஷாலால் மறைத்தபடி பால் கொடுக்கத் தொடங்கினார் ஒரு பெண்மணி.

 “லஞ்ச அராஜகத்துக்கு விடியலே இல்லையா?” - ராத்திரி ரவுண்ட்-அப்

சுமார் அரை மணி நேரம் இருக்கும்... சீறிவந்த புல்லட் பைக்கிலிருந்து டிப் டாப்பாக வந்திறங்கினார் அந்த இளம்பெண். முட்டியில் நூல் நூலாகக் கிழிந்த ஃபேஷன் ஜீன்ஸ் பேன்ட், ‘ஐயாம் டேர்’ என்றபடி உடலை இறுக்கிய டி ஷர்ட், லூஸ் ஹேர் என ஹைஃபை லுக் அவருக்கு. இவரும் வடக்கத்தி முகம்தான்... ஆனால், பொலிவு கூடியது. ஐ போனை எடுத்து, ஸ்கிரீனைத் தேய்த்தவர், “நியாம் சந்த்... அருண் கேரே... லாலியா...’’ என்று பெயர்களைச் சத்தமாக வாசிக்கத் தொடங்க, கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக எழுந்து வந்தார்கள்... நான்கைந்து பேராக ஒன்றுகூடி அவர் முன்பாக நிற்க, பேன்ட் பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் கட்டை உடைத்து, பணத்தைப் பிரித்துக்கொடுத்து ஏதோ சொல்லி அனுப்பினார்... சிறுவர்களைப் போலிருந்த மூன்று இளைஞர்கள் வாயில் எதையோ அதக்கிக்கொண்டு தடுமாறியபடி வர... முகத்தைச் சுளித்த அந்தப் பெண், ஒருவனிடம் அதட்டிய அதட்டலில் ஏரியாவே அதிர்ந்தது. “சாரி மேடம்... சாரி மேடம்” என்று நீண்ட நேரம் கெஞ்சிய பிறகு, வெகு நேரம் அட்வைஸ் செய்வதுபோல அவர்களிடம் பேசி அனுப்பினார்.

தொழிலாளர் சிலரிடம் பேசினோம். உடைந்த தமிழில் பேசினார்கள்... “ஆம்பூர்ல இருக்குற லெதர் ஃபேக்டரியில வேலை போட்டுக் கொடுத்திருக்காங்க. போன வருஷம் ஊரடங்குல மூணு மாசம் வேலை இல்லை. இந்த வருஷமும் மூணு மாசத்துக்கு முன்னே வேலையில்லைன்னு அனுப்புனவனுங்க இப்பதான் கூப்பிட்டிருக்காங்க. இந்த வேலையும் லேசுப்பட்ட வேலையில்லை... நிறைய ரிஸ்க் இருக்கு. ஃபேக்டரி ஷூ, மாஸ்க் எல்லாம் போட்டுக்கிட்டு வேலை பார்த்தாலும் தோல் வேகுறப்ப வர்ற நாத்தம் தாங்க முடியாது. கையுறையையும் தாண்டி கெமிக்கல் பட்டு, கையெல்லாம் கொப்புளம் வந்துடும். எங்களுக்கு வேற வழியில்லை... இதைவெச்சுத்தான் எங்க வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கு...” என்றார் சோகமாக!

எம்.எஸ்.வி-யிலிருந்து இளையராஜாவுக்கு மாறியிருந்தார் டாக்ஸி டிரைவர். அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தோம்... “அடிக்கடி அந்தப் பொண்ணு வரும்ப்பா. இங்கிருக்கிற ஃபேக்டரிகளுக்கு வடக்கத்தி ஆளுங்களைக் கூலி வேலைக்குச் சேர்த்துவிடுற ஏஜென்ட் அது. போன வருஷம் வரைக்கும் அவங்க அப்பா இந்த வேலையைச் செஞ்சுக்கிட்டிருந்தார். இப்போ இந்தப் பொண்ணு அந்த வேலையைப் பார்க்குது. எவனும் வாலாட்ட முடியாது... தாட்டியமான பொண்ணு. ஒட்ட நறுக்கிப்புடுவா!” என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்.

சற்றே தூரத்து வானில் வர்ணஜாலம்... பட்டாசுகள் வெடித்துச் சிதறின. சித்தூர் ரோட்டிலுள்ள மெட்டுக்குளம் ஏரியாவுக்குச் சென்றோம். கங்கை அம்மன் கோயில் விசேஷம். நள்ளிரவைத் தாண்டியிருந்தபோதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்துக்கொண்டிருந்தனர். எலுமிச்சை சாதம் பிரசாதம் வாங்கிச் சுவைத்தபடியே, கிறிஸ்டியான்பேட்டையிலுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்குச் சொந்தமான ‘கிங்ஸ்டன்’ பொறியியல் கல்லூரிப் பக்கம் பைக்கை நிறுத்தினோம். கல்லூரிக்கு எதிர்ப்புறம் நீண்ட வரிசையில், ஆந்திராவுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கிருந்து தொடங்குகிறது, தமிழக - ஆந்திர எல்லை.

 “லஞ்ச அராஜகத்துக்கு விடியலே இல்லையா?” - ராத்திரி ரவுண்ட்-அப்

மதுவிலக்குச் சோதனைச்சாவடி, ஆர்.டி.ஓ., காவல்துறை, வனத்துறை என அடுத்தடுத்த சோதனைச்சாவடிகள் அணிவகுத்தன. இந்தச் சாவடிகளில் ஏனோ தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்களை நிறுத்தவில்லை. மாறாக, ஆந்திராவிலிருந்து வந்த அத்தனை வாகனங்களையும் நிறுத்தினர். ஆனால், சோதனை மட்டும் நடக்கவில்லை. ‘‘வண்டியில என்ன இருக்கு?” என்கிற ஒற்றைக் கேள்வியைக் கேட்டார்கள். நொடிகளில் மறைவாகக் கரங்கள் இணைந்தன. அடுத்த நிமிடம் வாகனங்கள் பறந்துவிடுகின்றன. சிலநேரம், சில்லறை இல்லையெனக் கூறும் ஓட்டுநர்களிடம், ‘‘ஏய் இருக்குறதைக் கொடுத்துட்டுப் போ” என்று தர்பூசணி, சிறு தக்காளிக் கூடைகளை வாங்கிக்கொண்டார்கள்.

செக் போஸ்ட் தாண்டி லாரியை ஓரங்கட்டி, உற்சாக சுருதி ஏற்றிக்கொண்டிருந்தார் டிரைவர் ஒருவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “சில்லறைப் பசங்க பிரதர். ரெகுலரா வர்ற வண்டிங்க இவங்களுக்குத் தெரியும். இருபது ரூபா நீட்டிடணும். புது லாரிங்க வந்தா 100, 200 பிடுங்கிடுவாங்க. காய்கறி, பழ வண்டிங்ககிட்ட காசு வாங்குறதில்லை. காய்கறி, பழங்களைக் கொஞ்சம் அள்ளிக் கொடுத்துடணும். இப்பக்கூட ‘என்கிட்ட ஐநூறு ரூபா நோட்டாதான் இருக்கு. கையில அஞ்சு ரூபா சில்லறைதான் இருக்கு சார்’னு சொன்னேன். ‘சரி, அதையாவது கொடு’னு வாங்கிக்கிட்டாங்க. அப்புறம் எப்படி போலீஸ் மேல மரியாதை வரும்?’’ என்றபடி பீடியை வலித்து, கீழே போட்டுவிட்டு வண்டியை எடுத்தார். லேசாகப் பொழுது விடிய ஆரம்பித்தது. லஞ்ச அராஜகத்துக்குத்தான் ஒரு விடியல் வராதுபோல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism