Published:Updated:

வசூல் தொகை மொத்தமா வேணும்! - கட்டளையிட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி

சரவணக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
சரவணக்குமார்

மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக சரவணக்குமார் பதவியேற்றார். இங்கு வருவதற்கு முன்பு சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.

வசூல் தொகை மொத்தமா வேணும்! - கட்டளையிட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி

மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக சரவணக்குமார் பதவியேற்றார். இங்கு வருவதற்கு முன்பு சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.

Published:Updated:
சரவணக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
சரவணக்குமார்

‘திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணக்குமார், லஞ்சமாகப் பெற்ற பல லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, கார் மூலமாக சென்னை செல்கிறார்.’ - இப்படியொரு ரகசியத் தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு மார்ச் 30-ம் தேதி கிடைத்தது. உடனே, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி தேவநாதன் தலைமையிலான டீம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் இறங்கியிருக்கிறது. மதியம் 2:30 மணியளவில் விழுப்புரம் அரசூர் அருகே வந்த சரவணக்குமாரின் காரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து சோதனை செய்ய, கார் டிக்கியிலிருந்த 38.75 லட்ச ரூபாய் சிக்கியிருக்கிறது. அதையடுத்து சரவணக்குமார், அவரின் கார் டிரைவர் மணி இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இரவு வரை துருவித் துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சரவணக்குமார் சொன்ன தகவல்கள், போலீஸாரைக் கிறுகிறுக்க வைத்திருக்கின்றன.

வசூல் தொகை மொத்தமா வேணும்! - கட்டளையிட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி

விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி தேவநாதனிடம் பேசினோம். ‘‘விசாரணை நடந்துவருகிறது. இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது’’ என்று மட்டும் சொன்னார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ‘‘திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழுள்ள விடுதிகளில், 12 சமையலர் காலிப்பணியிடங்கள் இருந்துள்ளன. இதற்காக 12 பேரிடமும் தலா 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, சரவணக்குமார் பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறார். இதற்கு சரவணக்குமாரின் கார் டிரைவர் மணியும், ஹாஸ்டல் வார்டன் செந்திலும் மீடியேட்டராகச் செயல்பட்டிருக்கிறார்கள். ‘மேல்மட்டம் வரை கமிஷன் வந்து சேர வேண்டும்’ என்று சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநகரத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் கலைமோகன் சொல்லித்தான், சரவணக்குமார் இந்த வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறார். ஆனால், வசூல் செய்த லஞ்சப் பணத்தை யாருக்கும் கொடுக்காமல் சரவணக்குமாரே பாக்கெட்டில் போட்டிருக்கிறார்.

கயல்விழி செல்வராஜ்
கயல்விழி செல்வராஜ்

கமிஷன் வராததை அடுத்து, ‘பணியை சரிவரச் செய்யவில்லை’ என்று காரணம் கூறி மார்ச் 25-ம் தேதி சரவணக்குமாரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். டிரைவர் மணியை விழுப்புரத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார்கள். உடனே, டிரைவர் மணி சென்னைக்குச் சென்று கலைமோகனைப் பார்த்திருக்கிறார். ‘வசூல் செய்த முழுத் தொகையையும் அப்படியே எங்களிடம் கொடுத்துவிட்டால், பழையபடியே நீங்கள் இருவரும் வேலை பார்க்கலாம்’ என்று அவர் கறாராகக் கட்டளையிட்டிருக்கிறார்.அதையடுத்து லஞ்சப் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்குச் செல்லும்போதுதான், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கியிருக்கிறார்கள். விசாரணையில் நடந்ததையெல்லாம் ஒப்புக்கொண்டதால் சரவணக்குமார், டிரைவர் மணி இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். உதவி செயற்பொறியாளர் கலைமோகனிடம் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்’’ என்றார்கள்.

மணி
மணி

சரவணக்குமாரின் பின்புலம் குறித்து திருச்சி கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். “மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக சரவணக்குமார் பதவியேற்றார். இங்கு வருவதற்கு முன்பு சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார். சேலத்தில் பணியாற்றியபோதே லஞ்ச விவகாரம் ஒன்றில் சிக்கி, சரவணக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். திருச்சிக்கு வந்த பிறகும், கரன்சிக்கு பழக்கப்பட்ட அவரின் கை சும்மா இருக்கவில்லை.

12 சமையலர் போஸ்ட்டிங்குகளைப் பணம் வாங்கிக்கொண்டு, வேலை போட்டுக் கொடுத்தது மட்டுமல்ல... இன்னும் சில புகார்களும் அவர் மேல் இருக்கின்றன. தேர்தலுக்கு முன்பு 2021, பிப்ரவரி மாதம் திருச்சியில் 135 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பணி நியமன ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு 2,000 பேர் வரை விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் வேலை கிடைக்காதவர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு, ‘அடுத்த நியமனங்களில் உங்களுக்கு வேலை கொடுக்கிறோம்’ என்று சொல்லி சரவணக்குமார் தரப்பிலிருந்து லட்சக்கணக்கில் டீல் பேசப்பட்டிருக்கிறது. சிலரிடம் பணமும் பெற்றிருக்கிறார். இந்த விவகாரத்தை சரவணக்குமாரோடு மட்டும் முடித்துவிடாமல், இத்தனை நாள்களாக அவருக்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆரம்பித்து, சென்னை ஆதிதிராவிடர் நல அலுவலகம் வரை தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்கள்.

சரவணக்குமார், கலைமோகன் இருவரிடமும் பேச முயன்றோம். இருவரும் நமது அழைப்புகளை ஏற்கவே இல்லை. வாட்ஸ்அப் செய்திகளுக்கும் பதில் இல்லை.

சரவணக்குமார்
சரவணக்குமார்

இந்த விவகாரம் குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் பேசினோம். ‘‘சம்பந்தப்பட்ட அதிகாரி தன்னிச்சையாக சிலரை வேலைக்கு நியமிச்சதா எங்களுக்கு போன்ல சில புகார்கள் வந்தன. உடனே, நாங்க அவரை நேர்ல கூப்பிட்டு விசாரிச்சப்போ, தன்னோட தவறுகளை ஒத்துக்கிட்டார். அதோட, எழுத்துபூர்வமாக தான் செஞ்ச தவறுகளை எழுதியும் கொடுத்தார். அதையடுத்து, அன்னைக்கே அவரை சஸ்பெண்ட் செஞ்சுட்டோம். இது மாதிரி வேற எங்கேயாவது தவறுகள் நடந்துருக்கான்னு ஒரு டீம் போட்டு, எல்லா மாவட்டத்துலயும் ஆய்வுசெய்யச் சொல்லியிருக்கோம். சம்பந்தப்பட்ட அதிகாரிமீதும், இதில் வேறு யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள்மீதும், விசாரணைக்குப் பிறகு துறைரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழுள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு சமையலர் பணி மட்டுமல்லாமல் பராமரிப்புப் பணி, கட்டுமானப் பணி எனப் பலவற்றுக்கும் தமிழகம் முழுவதும் இப்படியான வசூல் வேட்டை நடந்துவருவதாகத் தகவல். லஞ்ச ஒழிப்புத்துறையினர் முழுமையாக இறங்கி விசாரித்து சாட்டையைச் சுழற்றினால், இன்னும் பல உண்மைகள் வெளிவரும்!