Published:Updated:

மாஞ்சோலை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! - அடைக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்கள்!

மாஞ்சோலை
மாஞ்சோலை

அகத்தியர் மலையிலுள்ள மாஞ்சோலை உள்ளிட்ட தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் பலருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகள் இருப்பதால் கொரோனா அச்சம் நிலவுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் மான், புலி, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் அரிய மூலிகைகளைக்கொண்டிருக்கும் மலையின் ஒரு பகுதியிluள்ள 8,374 ஏக்கர் நிலம் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்தின் வசம் இருக்கிறது.

அடர்ந்த வனப்பகுதியில் தேயிலைத் தோட்டம்
அடர்ந்த வனப்பகுதியில் தேயிலைத் தோட்டம்

அடர்ந்த வனப்பகுதிகளைக்கொண்ட இந்த மலையிலிருந்து உற்பத்தியாகும் நீரே தாமிரபரணி ஆறாக ஓடுகிறது. இந்த மலையில் 225 அரிய வகை தாவரங்களும், ஆயிரக்கணக்கான உயிரினங்களும் வாழ்கின்றன. இங்குள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பி.பி.டி.சி சார்பாகத் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.

மாஞ்சோலை மலைப்பகுதியிலுள்ள வனங்களில் பயிரிடப்படும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக சுமார் 1,000 குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைகளாக அங்கேயே குடியிருந்துவருகிறார்கள்.

தேயிலைத் தோட்டம்
தேயிலைத் தோட்டம்

நகரப் பகுதிகளில் பரவிவந்த கொரோனா பெருந்தொற்று மலைப் பகுதியையும் விட்டுவைக்கவில்லை. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் இருக்கின்றன. அவர்களில் சிலருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முதற்கட்டமாக 13 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மலையின் உச்சியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 50 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 44 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மேலும் பலர் கொரோனா அறிகுறியுடன் இருக்கிறார்கள்.

காக்காச்சியில் உள்ள கோல்ப் கிரவுண்ட்
காக்காச்சியில் உள்ள கோல்ப் கிரவுண்ட்

அதனால் மாஞ்சோலைப் பணியாளர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து அதிகரித்ததால், மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மூடப்படுவதாக பி.பி.டி.சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளபோதிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு