Published:Updated:

நாட்டு மாடுகளைக் காக்க நகரத்தில் ஒரு பண்ணை!

பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
பண்ணை

நகரத்துக்குள்ளயும் வெற்றிகரமா ஒரு மாட்டுப்பண்ணையை உருவாக்க முடியும்னு உணர்த்தியிருக்கோம்.

நாட்டு மாடுகளைக் காக்க நகரத்தில் ஒரு பண்ணை!

நகரத்துக்குள்ளயும் வெற்றிகரமா ஒரு மாட்டுப்பண்ணையை உருவாக்க முடியும்னு உணர்த்தியிருக்கோம்.

Published:Updated:
பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
பண்ணை

சென்னையின் தொழில்முகமாக வளர்ந்துவரும் ஆதம்பாக்கத்தில் காங்கிரீட் கட்டுமானங்களுக்கு மத்தியில் இருக்கிறது, பிரீதா - மணிகண்டன் தம்பதியின் மாட்டுப்பண்ணை. அழகிய புல்வெளியும் 53 மாடுகளும் அந்தச் சூழலையே கிராமிய வாசனைக்குள்ளாக்குகின்றன. ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் முக்கியப் பதவியிலிருந்த மணிகண்டனும் பிரீதாவும் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பசுவும் கன்றும் வாங்கி வளர்க்க, வளர்ந்து அது இன்று ஒரு பண்ணையாக உருவெடுத்திருக்கிறது. வட இந்தியா, தென்னிந்தியாவென 14 நாட்டினங்களைச் சேர்ந்த மாடுகள் இருக்கின்றன இந்தப் பண்ணையில்.

நாட்டு மாடுகளைக் காக்க நகரத்தில் ஒரு பண்ணை!

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாலவரைக்கும் இப்படியொரு பண்ணையை நாங்க கற்பனைகூட பண்ணிப் பாத்ததில்லை. ஆனாலும் பரபரப்பான சாப்ட்வேர் வாழ்க்கையில எங்களுக்குப் பெரிய மனச்சோர்வு இருந்துச்சு. மனசுக்குப் பிடிச்சமாதிரி ஏதாவது செய்யணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தோம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகுதான் மாடுகள்மேல எங்க கவனம் திரும்புச்சு. முதல்ல ஒரு பசுவும் கன்றும் வாங்கி வளர்த்துப்பாக்கலாமேன்னு ஆரம்பிச்சோம். இப்போ அதுவே வாழ்க்கையை நிறைச்சிருக்கு...” - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகப் பேசுகிறார் ப்ரீதா.

மணிகண்டனின் பூர்வீகம் காங்கேயம். ஆனாலும் கொள்ளுத்தாத்தா காலத்தோடு மாட்டுடனான பந்தம் போய்விட்டது. ப்ரீதா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 2017 வரைக்கும் மாடுகள் குறித்து எதுவும் அறியாதிருந்த இருவரும் இன்று மாட்டுப்பண்ணை வைக்க விரும்புபவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு மாறியிருக்கிறார்கள்.

“உண்மைதான். நகரத்துக்குள்ளயும் வெற்றிகரமா ஒரு மாட்டுப்பண்ணையை உருவாக்க முடியும்னு உணர்த்தியிருக்கோம். ஜல்லிக்கட்டுக்குப் பிறகு மாடுகளுக்குப் பின்னாலிருக்கிற அரசியல் பத்தி நிறைய வாசிக்க ஆரம்பிச்சோம். மாடுகளுக்கும் நமக்குமான உறவுங்கிறது மூதாதை உறவுன்னு புரிய ஆரம்பிச்சபிறகு, மாட்டுப்பண்ணை உருவாக்கிற திட்டம் வந்துச்சு. ஆனா அது அவ்வளவு எளிதில்லைன்னு தெரிஞ்சுச்சு. முதல்ல அதுக்கான சூழல் கொண்ட இடம் வேணும். பராமரிக்கத் தெரியணும். ரெண்டு பேருமே வேலைக்குப் போறோம். வேலையை விடணும்... செயல்திட்டம் பெரிசா இருந்துச்சு. முதல்ல ஒரு பசு வாங்கி வளர்த்துப் பார்க்கலாம்னு ஆரம்பிச்சோம். பசு வீட்டுக்கு வந்தவுடனே மனசு குளிர்ந்துபோச்சு. பசுவும் கன்றும் குழந்தைகள் போல மாறிட்டாங்க. ஆனாலும் பண்ணைங்கிறது பெரிய விஷயம்... செய்யமுடியுமான்னு யோசிச்சப்ப அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் `நம்பிக்கையா பண்ணுங்க’ன்னு தைரியம் கொடுத்தார். அவர் கொடுத்த தைரியத்துலதான் பண்ணை உருவாச்சு” என்கிறார் மணிகண்டன்.

நாட்டு மாடுகளைக் காக்க நகரத்தில் ஒரு பண்ணை!
நாட்டு மாடுகளைக் காக்க நகரத்தில் ஒரு பண்ணை!

பண்ணையில் நாட்டுமாடுகளை மட்டுமே வளர்ப்பதென்று தொடக்கத்திலேயே தீர்மானித்திருக்கிறார்கள். முதலில் வடஇந்திய நாட்டினமான ஹரியானியை வாங்கியிருக்கிறார்கள். பிறகு படிப்படியாக உள்ளூர் நாட்டினங்களையும் வாங்கிச் சேர்த்திருக்கிறார்கள். இப்போது காங்கேயம், சிவகங்கைக் குட்டை, புங்கனூர் குட்டை, தஞ்சாவூர் குட்டை, சக்கரக்குட்டான், சித்தூர் குட்டை, தென்பாண்டி சிங்கவளை, காங்ரேஜ், கிர், சாகிவால், ரதி, தார்பார்க்கர், ரெட் சிந்தி போன்ற நாட்டின மாடுகள் இவர்களின் பண்ணையில் வளர்கின்றன.

“பண்ணை ஆரம்பிக்கும்போதே லாபத்தையும் வணிகத்தையும் பிரதானமா கருத வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். எந்த இனம் அழிவின் விளிம்பிலே இருக்கோ அதைத்தேடி வாங்கினோம். அதுல பெரிசா லாபம் இருக்காது. ஆனா, அந்த இனத்தைக் காப்பாத்தணும்”- அக்கறையாகப் பேசுகிறார் மணிகண்டன்.

மாட்டுப்பண்ணையின் பிரதான வணிகப் பொருள் பால். ஆனால் இவர்கள் கோமியத்தையும் சாணத்தையுமே முக்கிய வணிகமாக வைத்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து உரம், பூஜைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் என 35க்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரிக்கின்றார்கள். தவிர, இந்தப் பொருள்களைத் தயாரிக்கும்விதம் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளிக்கிறார்கள். பண்ணையில் முதல் பசு கன்று ஈனும்போது குடும்பமே பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிறது. இப்போது பசுவுக்குப் பிரசவம் பார்க்கும் அளவுக்கு மணிகண்டன் தேர்ந்திருக்கிறார். மாடுகளோடு அவ்வளவு இணக்கம் இருக்கிறது. திமிரும் மாடுகள் மணிகண்டனையும் ப்ரீதாவையும் கண்டால் குழைகின்றன.

நாட்டு மாடுகளைக் காக்க நகரத்தில் ஒரு பண்ணை!
நாட்டு மாடுகளைக் காக்க நகரத்தில் ஒரு பண்ணை!

“எவ்வளவு மன அழுத்தத்தோட பண்ணைக்குள்ள வந்தாலும் அடுத்த பத்து நிமிஷத்துல காணாமப் போயிடும். சனி, ஞாயிறு வெளிய பேகணும்னாகூட மாடுகளைப் பத்தித் தெரிஞ்சுக்கிற இடமாதான் தேடிப்போறோம். காலைல சீக்கிரம் எழுந்திரிக்கிறது, பண்ணையைச் சுத்தம் செஞ்சுட்டு லேட்டா தூங்கப்போறதுன்னு வாழ்க்கையை இவங்களுக்குத் தக்கபடி மாத்திக்கிட்டோம். இதே பண்ணையை கிராமத்துல அமைச்சா செலவு குறைவாதான் இருக்கும். ஆனா, மாடுகள் கிராமத்துக்கானவை மட்டுமல்ல. நகரத்துல இருக்குற மக்களும் மாடுகள் பத்தித் தெரிஞ்சுக்கணும். எதிர்காலத்துல இது மிகப்பெரிய தொழிலா வளரும்...” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் ப்ரீதாவும் மணிகண்டனும்.

ப்ரீதா-மணிகண்டனோடு மகள் நேத்ராவும் ஈடுபாட்டோடு பண்ணையில் உலா வருகிறார். நேசத்தோடு கன்றுகளுக்கு உணவூட்டுகிறார். குழந்தைகளுக்கு மாடுகளின் இயல்பு குறித்துக் கற்றுத்தருவதற்காக `கண்ணுக்குட்டீஸ்’ என்ற நிகழ்வைப் பண்ணையில் நடத்துகிறார் ப்ரீதா. பண்ணையாக மட்டுமன்றி மாடுகள் குறித்த கல்விக்கூடமாகவும் இதை மாற்றியிருக்கிறார்கள் ப்ரீதாவும் மணிகண்டனும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism