Published:Updated:

டிராக்டர் எனும் பேராயுதம்!

டிராக்டர் எனும் பேராயுதம்!
பிரீமியம் ஸ்டோரி
டிராக்டர் எனும் பேராயுதம்!

சி.மகேந்திரன், மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

டிராக்டர் எனும் பேராயுதம்!

சி.மகேந்திரன், மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Published:Updated:
டிராக்டர் எனும் பேராயுதம்!
பிரீமியம் ஸ்டோரி
டிராக்டர் எனும் பேராயுதம்!

இந்தக் குடியரசு தினம் டெல்லிக்குப் புதிது. போர் விமானங்கள் வானில் வட்டமிட, தரையில் டாங்கிகள் அணிவகுக்க... இன்னொரு பக்கம் கடனாளியாகிப்போன விவசாயப் பூர்வகுடிகளின் துயரங்களை டிராக்டர்களில் சுமந்துவந்தது அந்த பிரமாண்டமான பேரணி. ஒருபக்கம் இது விவசாயிகளின் ஒற்றுமையையும், போராட்டத்தின் வீரியத்தையும் வெளிப்படுத்தினாலும், இன்னொரு பக்கம் இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகையே திரும்பிப் பார்க்கவைத்த அமைதிப் போராட்டத்தில் விரும்பத்தகாத சில வன்முறைகள், சர்ச்சைக்குரிய கொடியேற்றம் இவையெல்லாம் நடைபெற்றிருப்பது நெருடலை ஏற்படுத்துகிறது. கடந்த 15 நாள்களுக்கு மேலாக போராட்டக் களத்திலிருக்கும் என்னிடம், இதை அங்கிருந்த சீக்கிய இளைஞர்களே சொல்லி வேதனைப்பட்டார்கள். ஆனாலும், இதையெல்லாம் கடந்து, டிராக்டர் என்பதைப் பேராயுதம் என்று நிரூபித்திருக்கிறார்கள் இந்திய விவசாயிகள்!

சி.மகேந்திரன்
சி.மகேந்திரன்

தொன்மை காலம் முதல் தமிழர் வாழ்வில் ஏற்றத்துக்கு வழிவகுத்தது ஏர். ஏர் அல்லது கலப்பையின் இன்றைய நவீன வடிவமே டிராக்டர். வலிமை மிகுந்த மாபெரும் ஜனநாயக சக்தியாக விவசாயிகளின் இந்த டிராக்டர்கள் இன்று வடிவமெடுத்துவிட்டன. அந்தவகையில் பஞ்சாப் மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கம்தான் டிராக்டர். விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு சட்டங்களை இயற்றத் தொடங்கியதும், 32 விவசாயச் சங்கங்கள் ஒருங்கிணைந்து ‘விவசாயிகளின் அந்தோலன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கினார்கள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் தீவிரமாகக் களமிறங்கினார்கள். போராட்டங்களில் அம்பானி, அதானி எதிர்ப்பு மையப்படுத்தப்பட்டது. பெட்ரோல் பங்க், மளிகை வியாபாரம் உள்ளிட்ட எந்த ரிலையன்ஸ் நிறுவனங்களையும் அவர்கள் பஞ்சாப்பில் இயங்க அனுமதிக்கவில்லை. அதைப்போலவே, அதானியின் நிறுவனச் செயல்பாடுகளும் தடுக்கப்பட்டன. எங்கு அடித்தால், எங்கு வலிக்கும் என்பதை விவசாயிகள் நன்கறிந்து போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

இதன் பின்னர்தான், ‘டெல்லி சலோ’ போராட்டம் தொடங்கியது. பஞ்சாப் நிலம் அதிர, அந்த மாநிலத்தின் மூலை முடுக்கிலுள்ள கிராமங்களிலிருந்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட டிராக்டர்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டன. ஹரியானா மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தாண்டி டெல்லிக்கு அருகிலுள்ள சிங்கூர் எல்லையில் இந்த விவசாயிகள் வந்து தங்கிவிட்டார்கள். பின்னர் இதை முன்மாதிரியாகக்கொண்டு ஏழு இடங்களில் சாலைகளை மறித்து விவசாயிகள் குடியேறினார்கள். அரசாங்கம் கொடுத்திருக்கும் புள்ளிவிவரப்படி, பஞ்சாப், ஹரியானா இரண்டு மாநிலங்களிலும் மொத்தம் 12 லட்சம் டிராக்டர்கள் இருக்கின்றன. அவறில் இரண்டு லட்சம் டிராக்டர்களின் டிராலிகள் தற்காலிக வீடுகளாக மாற்றப்பட்டுள்ளன. கடும் குளிரைத் தாக்குப்பிடிக்கும் வகையில் ஏற்பாடுகளையும் அதில் செய்திருக்கிறார்கள். காஷ்மீர் படகு வீடுகள்போல, டிராக்டர் வீடுகள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரின் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றால் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன என்பது உண்மைதான். இவை எதையும் பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினார். ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை அவரால் புறக்கணிக்க முடியவில்லை. ஓர் இடத்தில் விழுந்த துளி நெருப்பில் காடு முழுவதும் பற்றிக்கொள்ளும் தீயைப் போன்றதுதான் மக்கள் போராட்டங்களும். இதில், விவசாயிகளின் கோபமும் சேர்ந்துகொண்டது. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியதைப்போல அது அமைந்துவிட்டது.

கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டம் உண்மையாகவும் நேர்மையாகவும் கடும் குளிரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை எழுத வேண்டியதும், காட்சியாகக் காட்ட வேண்டியதும் இன்றைய ஊடகங்களின் கடமை. ஆட்சியாளர்கள் இதை இரும்புத்திரை போட்டு முற்றாக மறைத்துவிட்டார்கள். மேலும், விவசாயிகளை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என்றும் பிரசாரம் செய்கிறது மத்திய அரசு.

விவசாயிகளின் போராட்டம் வீறுகொண்ட நேரத்தில், டெல்லிக்கு அருகே சிங்கூர் எல்லைக்கு போகிப் பண்டிகையன்று வந்து சேர்ந்து 15 நாள்களாகத் தங்கியிருக்கிறேன். ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாத பனிப்பொழிவுக்கு மத்தியில், முடமானவர்கள் பலரைச் சந்தித்தேன். இவர்கள் போர்க்களத்தில் கை, கால்களை இழந்த முன்னாள் ராணுவ வீரர்கள். இவர்களைப்போலவே, ராணுவத்தில் ஓய்வுபெற்றவர்கள் ஏராளமானோர் இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து போராட்டக் களத்தில் இருப்பதையும் பார்க்கிறேன். பஞ்சாப், தேசபக்தர்களைக்கொண்ட மாநிலம். இவர்களைப் பிரிவினைவாதிகள் என்றால், எவ்வாறான கோபம் வரும் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

டிராக்டர் எனும் பேராயுதம்!

‘இது பஞ்சாப், ஹரியானா பிரச்னை மட்டுமே’ என்று மத்திய அரசு திசைதிருப்புவதாகப் போராட்டக்காரர்கள் குறைகூறுகிறார்கள். ‘உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், தமிழ்நாடு என்று பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெறவில்லையா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். டெல்லி குடியரசுதினப் பேரணிக்கு ஆறு மாநிலங்களிலிருந்து வந்த எல்லா டிராக்டர்களையும் உத்தரப்பிரதேச அரசு தடுத்து நிறுத்தி, அனைவரையும் கைதுசெய்துள்ளது. ‘இது பஞ்சாப், ஹரியானா போராட்டம் என்றால் அம்மாநில விவசாயிகள் ஏன் வந்தார்கள்... உத்தரப்பிரதேச அரசு அவர்களை ஏன் கைதுசெய்ய வேண்டும்?’ என்றும் விவசாயிகள் கேட்கிறார்கள்.

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் குடியரசு தினப் பேரணி, பிரமாண்டமானது. காலை 9 மணிக்குப் புறப்பட்ட பேரணி, மாலை 5 மணி வரை சென்றுகொண்டே இருந்தது. நானும் ஒரு டிராக்டரில் சென்றதால், எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. பெரும் மக்கள் வெள்ளம். சுமார் நான்கு லட்சம் டிராக்டர்கள் பேரணியில் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. இரண்டு மாதங்களாக தங்களை கவனிக்காத அரசாங்கத்தின் அனைத்துத் தடைகளையும் எதிர்த்து, பேரணி நடத்தியதை விவசாயிகள் வெற்றியாகக் கருதுகிறார்கள்.

ஆனால், உண்மையான வெற்றி விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்தான் இருக்கிறது. குறிப்பாக, புதிய வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் விவசாயிகளின் உணர்வுகளை, உளப்பூர்வமாக புரிந்துகொண்டு அவற்றைத் திரும்ப பெற வேண்டும். பேச்சுவார்த்தையைக் கண்துடைப்பு நாடகங்களாக அல்லாமல், விவசாயிகளின்மீதான உண்மையான அக்கறையுடன் அணுக வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு நடக்கும் விவசாயிகளின் மிக முக்கியமான போராட்டத்தை உலகமே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மத்திய அரசு ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

அதேசமயம் செங்கோட்டையில் மதக்கொடியேற்றியதைப் போன்ற நிகழ்வுகள் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிகழ்வு உள்ளிட்ட சில வன்முறைக்குக் காரணம் பஞ்சாப்பைச் சேர்ந்த திரைப்பட நடிகர் தீப் சித்துதான் என்று விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனாலும், ஆங்காங்கே உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடந்த சில வன்முறைகள் தேவையற்றது என்ற உணர்வு பஞ்சாப் இளைஞர்கள் மத்தியிலேயே கூடுதலாக இருக்கிறது. ‘போராட்டக் களத்தில் அந்நியர்கள் ஊடுருவிவிட்டார்கள், அரசின் திட்டமிட்ட சதி’ என்கிற வாதங்கள் வைக்கப்பட்டாலும், வன்முறை என்பது இருபக்கமும் கூரான ஆயுதம்; அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. இவையெல்லாவற்றையும் தாண்டி இந்திய வரலாற்றில் டிராக்டர்களும், இந்த விவசாயிகளின் போராட்டமும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டன.