Published:Updated:

“எப்போதும் தோழர்கள் இருப்பார்கள்... இல்லாத நேரத்தில் இந்த ஸ்டிக் இருக்கும்!”

பாரதி அண்ணா
பிரீமியம் ஸ்டோரி
பாரதி அண்ணா

பார்வையிழப்பு எப்பவுமே எனக்குப் பிரச்னையா இருந்ததில்லை. எட்டு வயதில் தொடங்கி 30 வயதுவரை குறைபார்வையோடு இருந்தேன்.

“எப்போதும் தோழர்கள் இருப்பார்கள்... இல்லாத நேரத்தில் இந்த ஸ்டிக் இருக்கும்!”

பார்வையிழப்பு எப்பவுமே எனக்குப் பிரச்னையா இருந்ததில்லை. எட்டு வயதில் தொடங்கி 30 வயதுவரை குறைபார்வையோடு இருந்தேன்.

Published:Updated:
பாரதி அண்ணா
பிரீமியம் ஸ்டோரி
பாரதி அண்ணா

அதிகாரத்திலும் நிர்வாகத்திலும் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக, அரசியல் செயல்பாடுகளில் அவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவு. அப்படியே இருந்தாலும் பொறுப்பில் அமர்ந்து வழிநடத்தும் இடத்தை எட்டிப்பிடிப்பதெல்லாம் சாத்தியமேயில்லை. முதன்முறையாக, ஒரு பார்வைத்திறன் சவால் கொண்டவரை மாவட்டச் செயலாளராகத் தேர்வுசெய்து இந்திய அரசியலில் புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பாரதி அண்ணா, 100 சதவிகிதம் பார்வைத்திறன் சவால் கொண்டவர். மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே இவருக்குப் பார்வைக்குறைபாடு ஏற்பட்டது. குறைந்த பார்வையோடு சட்டப்படிப்பை எட்டிப் பிடித்து முடித்தவர், கல்லூரிக் காலத்திலேயே இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். 30 வயதில் அறுவை சிகிச்சை செய்து பார்வையை மீட்ட பாரதி அண்ணாவுக்கு 44 வயதில் முழுமையாகப் பார்வை பறிபோனது. ஆயினும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீவிரமாகக் களத்தில் நின்றவருக்குப் பொறுப்பு கொடுத்து முன்னுதாரணமாகியிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

சைதாப்பேட்டையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க அலுவலகத்தில் பாரதி அண்ணாவைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாடினேன்.

“பார்வையிழப்பு எப்பவுமே எனக்குப் பிரச்னையா இருந்ததில்லை. எட்டு வயதில் தொடங்கி 30 வயதுவரை குறைபார்வையோடு இருந்தேன். ஒருநாள் திடீரெனப் பார்வை போய்விட்டது. எல்லாச் சூழல்களையும் எதிர்கொள்ளப் பழகுவதற்கான அவகாசத்தை எனக்குக் காலம் கொடுத்திருக்கிறது.

அப்பா பலராமன் ஆசிரியர், திராவிட இயக்கப் பற்றாளர். கல்லூரிக் காலத்தில் எனக்கு இடதுசாரி இயக்கத்தில் ஆர்வம் வந்தது. மாவட்டப் பொறுப்பிலும் மாநில நிர்வாகக் குழுவிலும் இருந்தேன். அதன்பிறகு ஜனநாயக வாலிபர் சங்கம். அதிலும் பொறுப்புகள் ஏற்றுச் செயல்பட்டேன். சட்டம் படித்தேன். 22 வயதிலேயே கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளராகி விட்டேன்.

எப்போதும் உடன் தோழர்கள் இருப்பார்கள். இல்லாத நேரத்தில் இதோ இந்த ஸ்டிக் இருக்கும். பார்வையில்லை என்ற சிந்தனை எதையேனும் வாசிக்கநேரும்போதுதான் ஏற்படும். மற்றபடி நானும் இயல்பான மனிதன்தான். ஒரு நிமிடத்தைக்கூட எனக்கானதாக வைத்துக்கொள்வதில்லை. கட்சி சார்ந்த அமைப்புகள் பலவற்றிலும் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அகில இந்திய வழக்கறிஞர் சங்கம், ஊனமுற்றோர் உரிமைக்கான தேசிய மேடை, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் ஆகியவற்றில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பொறுப்புகள் ஏற்றுள்ளேன். என் களச் செயல்பாடுகளுக்கு பார்வையின்மை தடையாகவே இருந்ததில்லை.

“எப்போதும் தோழர்கள் இருப்பார்கள்... இல்லாத நேரத்தில் இந்த ஸ்டிக் இருக்கும்!”

ஆரம்பத்தில் வாசிப்பு சிரமமாக இருந்தது. பார்க்க வேண்டிய விஷயங்களைப் பார்க்க முடியாதபோது சற்று மன அழுத்தம் ஏற்படும். இப்போது நிறைய வாசிப்பு செயலிகள் வந்துவிட்டன. அதனால் வாசிப்பு பிரச்னையாக இல்லை. ப்ரன்ட்லைன், தீக்கதிர், பீப்பிள் டெமாக்ரஸி, மத்திய கமிட்டி தீர்மானங்கள், ஆங்கில மார்க்சிஸ்ட் அனைத்தையும் வாசித்துவிடுவேன். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் இருக்கின்றன. தொழிற்சாலைகளும் நிறைய உண்டு. மீனவர்கள், பழங்குடிகளும் இருக்கிறார்கள். முழுமையாக ஒரு களஆய்வு செய்து, பிரச்னைகளை உள்வாங்கி செயல்திட்டங்களை வகுக்க முடிவு செய்திருக்கிறோம். இடதுசாரி அமைப்பில் மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பின் கனம் எனக்குத் தெரியும். இந்தப் பணியைப் பொறுப்போடு செய்வேன்” என்கிறார் பாரதி அண்ணா.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளராக பாரதி அண்ணா முன்னெடுத்த போராட்டங்கள் முக்கியமானவை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் நிபந்தனைப் பட்டா நிலங்களை மீட்டது, புதிரை வண்ணார் சமூகத்தின் பிரச்னைகளை வெளிக்கொண்டுவந்து நல வாரியம் உருவாக்கக் காரணமாக இருந்ததென்று பட்டியல் பெரிது.

பாரதி அண்ணாவின் மனைவி குணவதி, ஆசிரியை. மாமனார் கோ.பாரதிமோகன் சுதந்திரப் போராட்ட வீரர். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் குத்தாலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இகுந்தவர். மாமியார் குஞ்சிதம் பாரதிமோகன் மாதர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். பாரதி அண்ணாவின் கட்சிச் செயல்பாடுகளைக் கவனித்துத் தன் மகளை மணமுடித்து வைத்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சதன் குப்தா எம்.பி-யாகவும் எம்.எல்.ஏ-வாகவும் பணியாற்றியிருக்கிறார். கோவா சுதந்திரப் போராட்டக் களத்தில் தாக்குதலால் பார்வையிழந்த யமுனா பிரசாத் சாஸ்திரி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்துள்ளார். இரண்டுமே இடதுசாரி கட்சிகளில் நடந்தவை. இப்போது பாரதி அண்ணா பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகளின் நலன் குறித்துப் பேசுகிற பிற அரசியல் கட்சிகள் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism