பிரீமியம் ஸ்டோரி

நைட் ரைடர்

நெல்லையப்பர் கோயில் வாசல். கடைவீதியில் கடைகளை மூடத் தொடங்கியிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக பைக்கை விட்டோம். மழை பெய்து ஓய்ந்த அந்த இரவில், சுருண்டு படுத்துக்கிடந்த நான்கைந்து தெரு நாய்கள் நம்மைக் கண்டதும் தலைதூக்கிப் பார்த்துவிட்டு, அசுவாரஸ்யமாக மீண்டும் உறங்கத் தொடங்கின. அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்தது ஆட்டோ ஒன்று. உள்ளே ஜீன்ஸ் பேன்ட், டாப்ஸுடன் ஓர் இளம் பெண்ணும், வெள்ளை வேட்டி, சட்டையில் வயதான ஆணும் இருந்தார்கள். டிரைவர் சீட்டில் டிரைவருக்கு அருகே வயதான ஒருவர் பிச்சைக்காரர் தோற்றத்தில், தோளில் அழுக்கு மூட்டையுடன் அமர்ந்திருந்தார். வித்தியாசமாகப் படவே, ஆட்டோவைப் பின்தொடர்ந்தோம்.

ஈரடுக்கு மேம்பாலத்தைக் கடந்து, ஜங்ஷன் ரயில் நிலையத்தை அடைந்தது ஆட்டோ. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் படுத்துக் கிடந்தார்கள். முதலில் ஆட்டோவிலிருந்து இறங்கிய வயதான பிச்சைக்காரர் மெதுவாக நடந்து சென்று பிளாட்பாரத்தில் படுத்துக் கொண்டார். அடுத்து, ஆட்டோவின் பின்னிருக்கை யிலிருந்து இறங்கிய வெள்ளை வேட்டி, சட்டைக்காரர் கையிலிருந்த தடியால் தரையில் பலமாகத் தட்டியபடி, “ஏலே ராமையா...” என்று அதட்டலாகச் சத்தமிட்டார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள்!

சற்றுத் தொலைவில் தாடியும் கிழிந்த சட்டையுமாகப் படுத்திருந்த பெரியவர் ஒருவர், வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து வந்தார். வரும்போதே அவசர அவசரமாக அங்கு படுத்திருந்த பலரையும் காலால் தட்டி எழுப்பினார். தூக்கம் கலைந்து எழுந்தவர்கள், வரிசையாக ஆட்டோவை நோக்கி வந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போதே அனைவரும் பிச்சையெடுப்பவர்கள் என்பது தெரிந்தது.

“என்னங்கடே இந்நேரத்துக்கே தூக்கம்... உண்டி பெருத்துடுச்சா... இந்தா பிடி” என்றபடி சாப்பாடுப் பொட்டலங்களை தூக்கிப் பிடித்தபடி அவர்களின் கைகளில் போட்டார் வெள்ளை வேட்டி, சட்டைக்காரர். அதைப் பெற்றுக்கொண்டவர்கள், தங்கள் கிழிந்த உடைகளில் ஆங்காங்கே முடிச்சுப் போட்டு வைத்திருந்த சில்லறைகளையும், கொஞ்சம் நோட்டுகளையும் அவிழ்த்துக் கொடுத்தார்கள்.

“ஏலே... கலெக்‌ஷன் ரொம்ப கம்மியாயிருக்கு. தூக்கிப்போட்டு சமிட்டிப்புடுவேன் பார்த்துக்கோ. சோலியை முடிச்சிப்புடுவேன்...” என்று அவர் அரட்ட... ஆட்டோவுக்குள் இருந்த இளம்பெண், “நீ சமிட்டிக் கிழிச்சது போதும், வந்து ஏறுய்யா வண்டியில...” என்று குரல் உயர்த்தினார். பம்மிக்கொண்டு ஓடி ஆட்டோவில் ஏறினார் வேட்டி சட்டைக்காரர். விர்ரெனப் பறந்தது ஆட்டோ.

இரவுக்கு ஆயிரம் கண்கள்!

அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவரிடம், “இப்போ வந்துட்டுப் போறது யாருங்க?” என்று கேட்டதும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் பேசினார்...

“நாங்க அவர்கிட்ட பிச்சையெடுக்குற(!) வேலை பாக்குறோம். இங்க யாரு பிச்சையெடுத்தாலும் அவர்கிட்ட பர்மிஷன் வாங்கணும். புதுசா வந்து யாரும் பிச்சையெடுக்க முடியாது. எடுத்தா அவரோட ஆளுக அடிச்சு மூஞ்சைக் கிழிச்சிடுவானுவ. பகலெல்லாம் பிச்சை எடுக்குற காசை ராத்திரியில வந்து வாங்கிட்டுப் போயிடுவாரு. கலெக்‌ஷன்லாம் பைசா விடாம கரெக்டா மனசுலயே கணக்கு போட்டு வெச்சிருப்பாரு. பத்து இருபது குறைஞ்சாலும் கண்டுபிடிச்சிடுவாரு. சும்மாவா... அம்பது வருஷமா இங்கேயே பிச்சையெடுத்தவராச்சே... இப்போ நல்லா செட்டிலாயிட்டாரு. நாலைஞ்சு வீடுங்க இருக்குதுன்னும் சொல்றாங்க” என்றவர், நாம் கேட்காமலேயே அடுத்து சொன்னதுதான் ஆச்சர்யம்!

“ஆட்டோவுல அவர்கூட வந்திருந்தது, அவரோட மூணாவது சம்சாரம். ஆறு மாசம் முன்னே அதுவும் இங்க பிச்சை எடுத்துக்கிட்டிருந்தது தான். நாகர்கோவிலு பக்கமிருந்து வந்துச்சு... நல்லா வாட்டசாட்டமா இருக்கும். அதை கொண்டப்பன் வெச்சிருந்தான், அவனை அடிச்சி விரட்டிட்டு இந்தாளு கூட்டிட்டுப் போயிட்டாரு. அதுவும் வசமா செட்டிலாகிடுச்சு... எல்லாம் நெல்லையப்பன் வகுக்குற விதி. அதை யாரால மாத்த முடியும்...” என்று சொல்லிவிட்டு மெதுவாக நகர்ந்தார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள்!

மெதுவாக பைக்கைப் பேருந்து நிலையம் அருகில் விட்டோம். நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. ஸ்மார்ட் சிட்டிக்காக ‘சிதைத்து’ப் போடப்பட்டிருக்கிறது பேருந்து நிலையம். பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே உலா வந்தோம். இடிபாடுகளில் நீட்டிக்கொண்டிருந்த கட்டை ஒன்றில் தொட்டில் கட்டப்பட்டிருக்க... அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை. பக்கத்திலேயே ஜோடி சிணுங்கல் கேட்க... அவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பாமல், மெதுவாக வெளியேறினோம்.

அங்கிருந்து சற்றுத் தள்ளியிருந்தது அந்தக் கட்டடம். ஒருகாலத்தில் ஓஹோவென்று பெயர்பெற்ற தனியார் மருத்துவமனை அது. ஏனோ மூடிவிட்டார்கள். அந்தக் கட்டடத்தின் அருகிலிருந்து சிறுவன் ஒருவன் தள்ளாடியபடியே வந்தான். பின்னாலேயே அதே கோலத்தில் மூன்று இளைஞர்கள் வந்தார்கள். நெருங்கிச் சென்று பார்த்தோம். அடர்ந்த மரங்களுக்கு அடியில் சிலர் அமர்ந்து, ஒரே சிகரெட்டை மாறி மாறி இழுத்துக்கொண்டிருந்தார்கள். நொடியில் காட்டிக்கொடுத்தது நெடி. இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் சாலையில் சைரன் எழுப்பியபடியே சென்றுகொண்டிருந்தது போலீஸ் ரோந்து வாகனம். சலனமில்லாமல் காற்றில் கரைந்துகொண்டிருந்தது கஞ்சா புகை!

அங்கிருந்து செல்லப்பாண்டியன் சிலை ஏரியாவுக்குச் சென்றோம். நள்ளிரவிலும் சுடச்சுட டீ கிடைக்கும் இடம் அது. டீக்கு ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம். பகலில் பஸ்களும் கார்களும் ஆட்டோக்களும் பரபரக்க... சாலையைக் கடக்கக்கூட முடியாமல் தடுமாறும் இந்த இடத்தை எப்போதுமே கவனிக்கத் தோன்றியதில்லை... இப்போது கவனிக்கத் தோன்றியது. ஆம், பகலில் பளிச்சென்று கண்களைக் கூசச் செய்யும் நகரின் முகத்தை நாம் கவனிப்பதே இல்லை. இரவில் வேறொரு முகம் காட்டும் கரிய முகத்துக்குத்தான் அவ்வளவு சுவாரஸ்யம்... இரவுக்கு ஆயிரம் கண்கள் அல்லவா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு