அரசியல்
அலசல்
Published:Updated:

கல்லாகட்டிய டாஸ்மாக்... கரைபுரண்ட மதுபோதை... கட்டுக்கடங்காத குற்றங்கள்!

கரைபுரண்ட மதுபோதை
பிரீமியம் ஸ்டோரி
News
கரைபுரண்ட மதுபோதை

ஒருபுறம் போதை விழிப்புணர்வுப் பிரசாரங்களைக் கையிலெடுக்கும் அரசு, மறுபுறம் குடியை வாழ வைத்துக்கொண்டிருப்பது எப்பேர்ப்பட்ட அவலம்?!

தீபாவளிப் பண்டிகையையொட்டி, ‘சென்னையில் 400 கோடி, மதுரையில் அதிகபட்சம்’ என்றெல்லாம் டாஸ்மாக் மது விற்பனை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டபோது, அவற்றை உடனே மறுத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. “டாஸ்மாக் நிர்வாகத்துக்கே முழு விற்பனை விவரங்கள் வந்து சேராத சூழலில், உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புகிறவர்கள்மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கையே விடுத்தார். ஆனால் அதே நாளில், கரைபுரண்ட மதுபோதையால் ஏற்பட்ட அடிதடி, தகராறு, கொலை, குற்றங்கள் குறித்த செய்திகள் நாம் சாதாரணமாகக் கடந்துபோகக் கூடியவையல்ல. மதுபோதை சராசரி மனிதர்களைக்கூட, மிருகமாக்கி அதில் சிலரை குற்றவாளியாகவும் ஆக்கியிருக்கிறது.

தீபாவளியையொட்டி மது போதையால் நடைபெற்ற குற்றச் சம்பவங்களில் சில மட்டும் இங்கே...

தலைக்கேறிய போதையில் மகன்... கத்தியால் குத்திய தந்தை!

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜின் மகன் கங்காதரன். இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தீபாவளியன்று ஏற்கெனவே தலைக்கேறிய போதையுடன் வீட்டுக்கு வந்த கங்காதரன், இன்னும் மது குடிக்கப் பணம் கேட்டுத் தன் வீட்டிலிருப்பவர்களைத் தொல்லை செய்திருக்கிறார். தந்தை செல்வராஜ் உட்பட பணம் தர மறுத்த அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் கங்காதரன். இதனால் வாக்குவாதம் முற்றி, ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. அந்த ஆத்திரத்தில் தந்தை செல்வராஜ், தான் பெற்ற மகனையே கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்திருக்கிறார். தற்போது செல்வராஜ் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

போதை ஆசாமிகள் இடையூறு... காவலரைத் தாக்கியதால் சிறை!

சென்னை புதுப்பேட்டைப் பகுதியில் சிலர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்திருக்கிறார்கள். இதை எழும்பூர் காவலர்கள் விசாரித்தபோது, அவர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால், பிரச்னைக்குரியவர்களை மட்டும் போலீஸார் தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்படத் தயாரானார்கள். இந்தச் சமயத்தில், அதீத போதையிலிருந்த அவர்கள், பணியிலிருந்த காவலர் பாலாஜியைத் தாக்கியிருக்கிறார்கள். தற்போது காவலர் பாலாஜி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார். அவரைத் தாக்கி, கைதானவர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கல்லாகட்டிய டாஸ்மாக்... கரைபுரண்ட மதுபோதை... கட்டுக்கடங்காத குற்றங்கள்!

டாஸ்மாக்கில் பார்க்கிங் தகராறு... கொல்லப்பட்ட கல்லூரி மாணவன்!

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் டாஸ்மாக் கடை முன்பு டூ வீலரை நிறுத்துவது தொடர்பாக பாண்டியராஜன் என்பவருக்கும், கண்ணன் என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. சுற்றியிருந்த குடிமகன்கள் சிலர் அவர்களைப் பிரித்துவிட்டபோதும் குடிபோதை அவர்களைச் சமாதானமாகவிடவில்லை. குச்சம்பட்டி முட்புதர் அருகே பாண்டியராஜன் தன் நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே தன்னுடைய நண்பர்களை அழைத்துவந்த கண்ணன், பாண்டியராஜனையும் அவர் கூட இருந்தவர்களையும் கட்டையால் தாக்கியிருக்கிறார். இதில் பாண்டியராஜனின் உடனிருந்த அருண்குமார் என்ற கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். இந்த வழக்கு வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் பதிவாகி, தற்போது கண்ணன் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

சும்மா நின்றவர்களுக்குக் கத்திக் குத்து... தூத்துக்குடி, கடலூர் துயரங்கள்!

தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்கள் கபிஸும் சரவணனும். இருவரும், தீபாவளி அன்று சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ், பாலசிங் ஆகியோர் மதுபோதையில் சரவணன், கபிஸ் இருவரிடமும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். போதைவெறியில் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு, இருவரையும் தாக்கியிருக்கிறார்கள் ஜெகதீஷும் பாலசிங்கும். ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த இருவரும் இப்போது இந்த வழக்குக்காகக் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியிலும் தீபாவளி அன்று வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வீரன், அண்ணாமலை ஆகிய சகோதரர்களை போதை ஆசாமிகள் சிலர் இரும்புக்கம்பி கொண்டு தாக்கியதில் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண்... மண்ணெண்ணெய் ஊற்றிய சித்தப்பா!

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பவித்ரா வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாலாஜி வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் தலை தீபாவளிக்காக பாலாஜியின் வீட்டுக்கு வந்த பவித்ரா, அங்கு பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார். அப்போது, கடும் போதையில் அங்கே வந்த பவித்ராவின் சித்தப்பா கார்த்திக் தான் கையோடு கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெயை பவித்ராவின் மீது ஊற்றியிருக்கிறார். இதனால் பட்டாசிலிருந்து வெளிப்பட்ட நெருப்பு பவித்ரா மீது பற்றிக்கொள்ள அவரது முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. பவித்ரா தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவரின் சித்தப்பா கார்த்திக் கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

மேற்கண்ட சம்பவங்கள் வெகுசில உதாரணங்கள்தான். போதையால் நிகழும் குற்றங்கள் நாளுக்கு நாள் பல்கிப் பெருகிவரும் நிலையில், பண்டிகைக் காலங்களில் மறைமுகமாக ‘விற்பனை இலக்கு’ வைத்து, மது இருப்பை அதிகரித்து, அரசே டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. சமீபத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ``போதை என்பது சமூகத்தையே அழித்துவிடும். போதைதான் பல குற்றங்களுக்குத் தூண்டுதலாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். ஒருபுறம் போதை விழிப்புணர்வுப் பிரசாரங்களைக் கையிலெடுக்கும் அரசு, மறுபுறம் குடியை வாழ வைத்துக்கொண்டிருப்பது எப்பேர்ப்பட்ட அவலம்?!