அரசியல்
அலசல்
Published:Updated:

அமோக அறுவடையில் பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள்... அதிர்ச்சியில் தஞ்சை விவசாயிகள்!

தஞ்சை விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
தஞ்சை விவசாயிகள்

சம்பா பயிர் நடவு செய்த தொடக்கத்திலேயே பருவமழை பெருமழையாகப் பெய்ததில் பயிர்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் விவசாயிகள் மறு நடவு செய்ததில் சாகுபடிக்கான செலவு இரண்டு மடங்கானது

‘தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏழு கிராமங்களில் மட்டுமே மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இழப்பீடுத் தொகையாக ரூ.36 லட்சம் வழங்கப்படும்’ என்கிற தமிழக அரசின் அறிவிப்பு தஞ்சை மாவட்ட விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அமோக அறுவடையில் பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள்... அதிர்ச்சியில் தஞ்சை விவசாயிகள்!

பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன், இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார். “இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து விவசாயிகளைக் காப்பதற்காகத் தொடங்கப்பட்டதுதான் பயிர்க் காப்பீட்டுத் திட்டம். பன்னாட்டு தனியார் பெரு நிறுவனங்கள் மூலமாகவே இந்தத் திட்டம் செயல்பட்டுவருகிறது. விவசாயிகள் ஒன்றரை சதவிகிதம், ஒன்றிய அரசு, தமிழக அரசு தலா ஒன்றே முக்கால் சதவிகிதம் என இந்த நிறுவனங் களுக்கு பிரீமியமாகச் செலுத்தப்படுகிறது.குறிப்பிட்ட ஒரு வருவாய் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து சோதனை அறுவடை நடத்தியதன் அடிப்படையிலேயே அந்தப் பகுதியில் மகசூல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிவார்கள். அதன்படியே இழப்பீட்டு தொகையும் வழங்கப்படும்.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ராபி பருவத்தில் மூன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். இதில் 856 கிராமங்களைச் சேர்ந்த 1,33,884 விவசாயிகள் பயிர்க் காப்பீடு பிரீமியமாக சுமார் ரூ.17 கோடி செலுத்தினர். ஒன்றிய அரசு, தமிழக அரசு செலுத்திய தலா 17 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.51 கோடி காப்பீட்டு நிறுவனங்கள் பெற்றிருக்கின்றன. இப்படி, தமிழகம் முழுவதும் ரூ.2,432 கோடி பிரீமியம் செலுத்தப்பட்டிருக்கிறது.

அமோக அறுவடையில் பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள்... அதிர்ச்சியில் தஞ்சை விவசாயிகள்!

குறைந்த இழப்பீடு!

சம்பா பயிர் நடவு செய்த தொடக்கத்திலேயே பருவமழை பெருமழையாகப் பெய்ததில் பயிர்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் விவசாயிகள் மறு நடவு செய்ததில் சாகுபடிக்கான செலவு இரண்டு மடங்கானது. அதேபோல் அறுவடை செய்கிற சமயத்திலும், பெய்த கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. இதனால் பெருமளவு மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்படைந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் சம்பா பயிருக்குத் தமிழகம் முழுவதற்கும் ரூ.480.59 கோடி பயிர் காப்பீடுக்கான இழப்பீட்டுத் தொகையாக அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதில் பெருமளவில் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத் துக்கு வெறும் 36 லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடாக அறிவித்திருக்கிறது. அதிலும், இனத்துக்கான்பட்டி, இன்னம்பூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை கிடைக்கவிருக்கிறது. இது பெரும் அதிர்ச்சி எங்களுக்கு.

ரகசியத் தொடர்பு!

விதிப்படி, பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள், சோதனை அறுவடையை முடித்த ஒரு வாரத்துக்குள், மகசூல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். அடுத்த நான்கு வார காலத்துக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டு பணத்தை வரவுவைக்க வேண்டும். தவறினால் அபராதத்துடன் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனங்கள் அரசின் விதிகளைக் கடைப்பிடிப்பதே இல்லை. மேலும், ஒவ்வொரு முறையும் விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகே இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்படுகிறது. இந்த முறையும் நிலைமை மாறவில்லை. அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. அவர்கள் காப்பீட்டு நிறுவனங்களுடன் ரகசியத் தொடர்பு வைத்துக்கொண்டு ஆதாயம் அடைகிறார்களோ என்றும் எங்களுக்குச் சந்தேகம் எழுகிறது.

பல கோடி ரூபாய் பிரீமியமாக வசூல்செய்யும் பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மாவட்ட அளவில் அலுவலகம் கிடையாது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தில்கூட இவர்களுக்கு அலுவலகம் இல்லை. மேலும், தாமதமாக இழப்பீட்டை அறிவிப்பதன் மூலம் இந்த நிறுவனங்கள் பெரும் பலனை அறுவடை செய்கின்றன. பாடுபட்ட விவசாயிக்குத் துளியும் பலன் கிடைக்கவில்லை. தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் வேதனையுடன்.

விமல்நாதன்
விமல்நாதன்

திருவாரூருக்கு 94 கோடி... தஞ்சைக்கு 36 லட்சம்!

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ‘‘அறுவடை நேரத்தில் பெய்த கனமழையில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். முதலமைச்சரே சில கிராமங்களில் அழுகிய பயிரை நேரில் பார்வையிட்டார். ஆனால், அந்த ஊர்கள்கூட இழப்பீடு வழங்குவதில் விடுபட்டிருப்பதன் காரணம் புரியவில்லை. திருவாரூருக்கு 94 கோடி, தஞ்சாவூருக்கு வெறும் 36 லட்சம் என இழப்பீடு அறிவிக்கப்பட்டிருப்பது கணக்கீட்டில் நடைபெற்ற பிழையாகவே கருதுகிறோம். எனவே, தஞ்சைப் பகுதிகளில் மறு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

வீரசேனன்
வீரசேனன்

வேளாண்துறை அதிகாரிகளிடம் இது குறித்துக் கேட்டபோது, “பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளின் படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர் அறுவடை பரிசோதனைகள் நடைபெற்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகையை கணக்கிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏழு கிராமங்களில் மட்டுமே உத்தரவாத மகசூலைவிட சோதனை அறுவடையில் கிடைக்கப்பெற்ற சராசரி மகசூல் குறைவாக இருந்தது” என்றனர்.

இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டினிடம் பேசினோம். “பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களிடம் கணக்கீட்டுக்கான விவரங்களைக் கேட்டிருக்கிறோம். அதனுடன் எங்களிடம் இருக்கும் அறுவடை விவரங்களை ஒப்பிட்டு, சரி பார்த்து, தவறு ஏதும் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வுசெய்யவிருக்கிறோம்” என்றார்.

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்டபோது அவர் நம் அழைப்பை எடுக்கவில்லை. விசாரித்ததில், ‘என்ன குளறுபடி...’ என்று மாவட்ட வேளாண் அதிகாரிகளிடம் அமைச்சர் தரப்பு ‘டோஸ்’ கொடுத்திருப்பதாகத் தெரியவந்தது.

கண்டிப்பு மட்டும் போதாது, விவசாயிகளுக்கான இழப்பீடு முக்கியம்!