Published:Updated:

பயிர்க்கடன் மோசடி! - ஏமாந்த விவசாயிகள்... ஏப்பம்விட்ட அதிகாரி?

ஏமாந்த விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஏமாந்த விவசாயிகள்

விவசாயிகள் மட்டுமல்ல, ஏழை விவசாயக் கூலிகளும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்

பயிர்க்கடன் மோசடி! - ஏமாந்த விவசாயிகள்... ஏப்பம்விட்ட அதிகாரி?

விவசாயிகள் மட்டுமல்ல, ஏழை விவசாயக் கூலிகளும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்

Published:Updated:
ஏமாந்த விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஏமாந்த விவசாயிகள்

‘அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி லட்சக்கணக்கில் கொள்ளையடித்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோபத்தில் கொந்தளிக்கின்றனர் ராமநாதபுரம் பகுதி விவசாயிகள்!

ராமநாதபுரம் மாவட்டம், புளியங்குளம் அருகேயுள்ள ஆனையூர் கிராமத்தில், ‘தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்’ செயல்பட்டுவருகிறது. சங்கச் செயலாளராக இருக்கும் ராமமூர்த்தி, உள்ளூர் விவசாயிகள் பெயரில் வங்கியில் கடன்பெற்று மோசடி செய்துவிட்டார் என்பதுதான் விவசாயிகளின் புகார்.

இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயி இருளன், “கடந்த 2018-ம் ஆண்டு ‘விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், உர மூட்டையும் அரசாங்கம் கொடுக்கிறது’ என்று சொல்லி எங்களது ஆதார் கார்டு, பட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களின் நகலை வாங்கிக்கொண்டார் ராமமூர்த்தி. பின்னர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, 10 ஆயிரம் ரூபாயையும், உர மூட்டையையும் கொடுத்தார். இந்த நிலையில் ‘பயிர்க்கடனாக வாங்கிய 50 ஆயிரம் ரூபாயை உடனே திருப்பிக் கட்டுங்கள்’ என கடந்த ஆண்டு அதிகாரிகள் எங்களிடம் சொன்னபோதுதான், எங்கள் பெயரில் ராமமூர்த்தி செய்த மோசடியே தெரியவந்தது’’ என்றார் அழாத குறையாக.

பயிர்க்கடன் மோசடி! - ஏமாந்த விவசாயிகள்... ஏப்பம்விட்ட அதிகாரி?

விவசாயிகள் மட்டுமல்ல, ஏழை விவசாயக் கூலிகளும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். முருகஜோதி என்ற பெண் விவசாய கூலித் தொழிலாளி, “என் பெயரில் 65,400 ரூபாய் கடன் இருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள். அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்?” என்றார் குரல் நடுங்க.

சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் தியாகராஜன் நம்மிடம், ‘‘சங்க விதிகளின்படி ரத்த சொந்தங்களுக்கு, அதிகாரிகள் கடன் கொடுக்கக் கூடாது. ஆனால், ராமமூர்த்தி அவரின் மனைவி உள்ளிட்ட உறவினர்களுக்கு முறைகேடாகக் கடன் கொடுத்திருக்கிறார். போலியான உள்ளூர் முகவரியில் ஆவணங்கள் தயார் செய்தும் பலருக்கு பயிர்க்கடன் கொடுத்திருக்கிறார். வேலைக்கும் சரிவர வருவதில்லை... தான் நடத்திவரும் மினரல் வாட்டர் கம்பெனியிலேயேதான் எப்போதும் இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்று புரியவில்லை” என்றார்.

இருளன், முருகஜோதி, தியாகராஜன், ராஜேந்திர பிரசாத், ராமமூர்த்தி
இருளன், முருகஜோதி, தியாகராஜன், ராஜேந்திர பிரசாத், ராமமூர்த்தி

புகார் பற்றி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத்திடம் கேட்டபோது, “ராமமூர்த்தி மீதான மோசடிப் புகார் குறித்து கூடுதல் சார்பதிவாளர் பாலு மற்றும் குழுவினர் விசாரணை செய்துவருகிறார்கள். தவறு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு ராமமூர்த்தியிடமே பேசினோம். “நான் சரிவர வேலைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டைத் தவிர, என் மீதான மற்ற எந்தப் புகாரிலும் உண்மையில்லை. சங்கத் தலைவரும், துணைத் தலைவரும் என்னிடம் பணம் கேட்டார்கள். நான் கொடுக்க மறுத்ததால், என்மீது அவதூறு பரப்புகிறார்கள். விசாரணைக்குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” என்றார் சுருக்கமாக.