என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

அவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 4 - பரிசு ரூ. 5,000

புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

- லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... இன்னொரு போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். கூடவே, அவள் விகடன் பற்றிய தங்கள் கருத்தை ஒரே வரியில் ஸ்லோகனாக எழுதி அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்துக்குள் எழுதவும். சரியான தீர்வுடன், சிறந்த ஸ்லோகன் எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

ராதா என்ன செய்ய வேண்டும்?

பெரிய நிறுவனத்தில் ஜூனியர் அக்கவுன்டன்ட் ஆக ராதா வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தன. சென்னை அவளுக்கு இன்னும் பழக வில்லை. அலுவலகம் முடிந்ததும் நேராக ஹாஸ்டலுக்கு வந்துவிடுவாள்.

அன்று அலுவலகத்தில் கணக்குகளுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தபோது, அவளுக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாகக் கொடுத்துவிட்டுப் போனார் சோமு.

அதை வாங்கிப் பார்த்தாள் ராதா. ஏதேனும் ஒரு நிறுவனத்தில் இருந்து வந்தால் முகவரி இருக்கும். எல்லோரிடமும் மொபைல்போன் வந்துவிட்ட இந்தக் காலத்தில், யாரும் கடிதம் எழுதுவதில்லை. இது என்னவாக இருக்கும்... ஹாஸ்டலுக்குப் போய் பிரிக்கலாம் என்று ஹேண்ட்பேக்கில் வைத்துவிட்டு, வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் ராதா.

மறுநாள் காலை லஞ்ச் பாக்ஸ் எடுத்து வைக்கும்போது அந்த கவர் கண்ணில்பட்டது. எடுத்தாள். வெயிட்டாக இருந்தது. கவரைக் கிழித்து, வெள்ளைத்தாளைப் பிரித்தாள். `ராதா' என்று ஸ்டிக்கர் பொட்டுகளால் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதைத் தவிர, வேறு ஒன்றும் இல்லை. அறைத் தோழி காமினியிடம் காட்டினாள் ராதா. “பொட்டு வாங்கற செலவு மிச்சம்” என்று சிரித்தாள் காமினி.

10 நாள்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு கவர் அதே போலவே முகவரி இல்லாமல் வந்தது. தபால் முத்திரையும் இல்லாமல் இருந்ததைக் கவனித்தாள். அப்படியென்றால் இங்கே வேலை செய்பவன் எவனோதான் அனுப்புகிறான் என்று புரிந்துகொண்டாள். இவ்வளவு பெரிய நிறுவனத்தில் யார் என்று எப்படித் தேடுவது?

கடிதத்தை அன்று இரவு படித்தாள். அவளைப் பற்றி உருகி உருகி எழுதப்பட்டிருந்தது. ராதாவுக்கு எரிச்சலாக இருந்தது.

மறுநாள் அலுவலகத்தில் யாரைப் பார்த்தாலும் `இவனா இருப்பானோ, அவனா இருப்பானோ' என்கிற எண்ணம் வந்து இம்சை செய்தது. தன்னை யாரோ கவனித்துக்கொண்டே இருப்பதுபோல தோன்றியது. அவளின் இயல்பு தொலைந்துபோனது.

அடுத்த முறை கடிதம் வந்தபோது, யூனியனில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கணேஷிடம் கொடுத்தாள். “சார், இது எனக்கு வரும் மூணாவது கடிதம். முகவரி இல்லாத இந்தக் கடிதத்தைப் பிரிச்சுப் பார்க்கப் போறதில்லை. இங்கே வேலை செய்றவன் எவனோதான் இப்படிப் பண்றான். என்னிக்காவது அவன் யார்னு தெரிஞ்சால், அவன் மேல நடவடிக்கை எடுக்கத்தான் உங்ககிட்ட கொடுக்கிறேன்” என்றாள் ராதா.

“எவன் இப்படிப் பண்றான்னு தெரியலையே… பிரிச்சுப் பார்த்துட்டுக் கொடும்மா.”

அவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 4 - பரிசு ரூ. 5,000
Deepak Sethi

“யார்னு தெரியாமல் லவ் பண்ணிடுவானா? எனக்கு அவனைத் தெரியவேண்டாமா, பிடிக்க வேண்டாமா, இந்த அடிப்படைக் கூடத் தெரியாதவன் எல்லாம் ஒரு மனுஷனா?”

மறு வாரம் ராதா ஊருக்குச் சென்றாள். நான்கு நாள்களுக்குப் பிறகு, திரும்பி வந்தாள். பஸ் ஸ்டாப் பில் ரேஷ்மா நின்று கொண்டிருந்தாள்.

”என்ன ராதா, உன் ஆள்கிட்ட சொல்லிட்டுப் போகலையா? எங்கே போனே? எப்ப வருவேன்னு என்னைக் கேட்டுட்டே இருந்தான். என்ன ஊடலா?” என்று ரேஷ்மா கேட்டவுடன் ராதாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

“அப்படி எனக்கு யாரும் இல்லை. அவன் யாருன்னு மட்டும் காட்டு” என்றாள் ராதா.

“உனக்குத் தெரியாதா? உன் ஹாஸ்டல் ஸ்டாப்பில்தான் நிற்பான். உன்னோடதான் பஸ்ஸில் வருவான். ஆபீஸ் ஸ்டாப்பில் இறங்கி, உனக்குப் பின்னாலதான் நடந்து வருவான். நம்ம ஆபீஸ்லதான் வேலை செய்யறான். எந்த டிபார்ட் மென்ட்னு தெரியல” என்றாள் ரேஷ்மா.

அப்போது ஒருவன் வேகமாக பஸ் ஸ்டாப்பை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“அதோ அவன்தான்” என்று ரேஷ்மா சொல்ல, ராதா திரும்பிப் பார்த்தாள்.

இவனை ராதாவும் பல முறை பார்த்திருக்கிறாள். இதுவரை யாரென்று தெரியாத டென்ஷன். இப்போது தெரிந்த பிறகு, வேறு ஒரு டென்ஷன்.

கணேஷிடம் அவனைப் பற்றிச் சொன்னாள். அன்று மாலையே அவன் கேஷுவல் லேபராக வேலை பார்ப்பதைச் சொல்லிவிட்டு, இனி இப்படி நடந்துகொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்ததாகச் சொன்னார்.

ஆனாலும், அவன் பின்தொடர்வதையோ, கடிதம் எழுதுவதையோ நிறுத்தவே இல்லை. அவளிடம் பேசவும் முயற்சி செய்யவில்லை. அடுத்த கடிதம் வந்தபோது, கணேஷ் அவன் வீட்டுக்கே சென்று சொல்லிவிட்டு வந்தார். அதற்குப் பிறகும் அவன் ராதாவைத் தொடர்ந்துகொண்டுதான் இருந்தான்.

அடுத்து...

இந்த தொடர் பிரச்னைக்கு ராதா என்ன செய்திருப்பாள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சில தீர்வுகள்...

1. ஒரு நாள் பெருங்கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு தன் செருப்பைக் கழற்றி அவனை அடித்து அவமானப் படுத்தினாள்.

2. அலுவலக மனிதவளத் துறையில் புகார் செய்தாள். எப்படி நடவடிக்கை எடுப்பதென அங்கு விவாதிக்கப்பட்டது.

3. ரேஷ்மாவோடு சென்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தாள். அடுத்த நாள் காலை அலுவலகத்துக்கு காவல்துறை வாகனம் வந்து சேர்ந்தது.

4. ஊரிலிருந்து தன் அண்ணன் மற்றும் அவன் நண்பர்களை வரச் சொன்னாள். அப்புறமென்ன ஒரே அடிதடிதான்!

5. அவன் தன்னிடம் வந்து பேச முயற்சி செய்யாததால், அவனிடமிருந்து ஆபத்து இல்லை. கேஷுவல் லேபர் என்பதால் விரைவிலேயே அவன் பணி முடியப்போகிறது. அவன் குடும்பம் வசதி இல்லை என்பதால், அடுத்த வேலைக்கு அவன் போக வேண்டியது அவசியம். இந்த விஷயங்களை அறிந்த ராதா, அவனை ‘ஜஸ்ட் லைக் தட்’ புறக்கணித்தாள். அவள் நினைத்தது போலவே சில நாள்கள் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தவன் ஒருநாள் வருவதை நிறுத்திக் கொண்டான்.

6. இவை எதுவுமே சரியில்லை. என்னிடம் இன்னும் சிறப்பாக ஒரு தீர்வு இருக்கிறது. அது...

அவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 4 - பரிசு ரூ. 5,000

புதிர்ப்போட்டி - 2 முடிவுகள்

விடைகள்

அவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 4 - பரிசு ரூ. 5,000

ரூ. 500 பரிசு பெறும் 10 வாசகிகள்

1. ஆர்.அபிராமி, ஈரோடு-12

‘நமக்குள்ளே’ தொடங்கி ‘நாப்கின்’ உபயோகம் வரை விழிப்புணர்வு இதழாக வியக்க வைத்தது!

2. ஆதிரை வேணுகோபால், சென்னை-94

அன்பின் மிகுதி + நெருக்கத்தைச் சொல்லித் தர... ‘ஆண்களைப் புரிந்துகொள்வோம்’, அனைத்தும் அறிய... ‘கேட்ஜெட் கிளாஸ் ரூம்'... மொத்தத்தில் வீட்டுக்கு வெளிச்சம் சாளரத்தின் ஊடே... அறிவுக்கு வெளிச்சம் அவளின் ஊடே!

3. எஸ்.சரஸ்வதி, திருச்சி-2

வளரிளம் பருவத்தினருக்கும், பெரியவர்கள் இல்லாமல் வளரும் குழந்தைகளுக்கும் தாயாக, தோழியாக நிற்கிறாள் அவள்.

4. சுடர்க்கொடி சுகுமார், காட்பாடி

வங்கி, இன்ஷூரன்ஸ், நகைக்கடன் என்று சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் பயனுள்ள தகவல்களால் பிரமிக்க வைக்கிறது 32 பக்க இணைப்பு. அவள் கைக்கு வந்ததும் முதலில் படிப்பது இணைப்பிதழைத்தான்.

5. எஸ்.மணியம்மாள், காடையாம்பட்டி

ஆலமரம், பாரம்பர்யம், அறிவியல் என அனைத்துக்கும் பாலம்போடும் ஆன்மிகப் பக்கங்கள்... அற்புதம்!

6. ராதா மணிமாறன், திருவண்ணாமலை

உழைப்பால் உயர்ந்தவர்களை இனம்கண்டு அடையாளப்படுத்துவதன் மூலமாக, எங்களை யும் தொழில்முனைவோராக்கத் தூண்டும் நல்லதொரு வழிகாட்டியாக நிற்கிறாள் அவள்!

7. மு.மர்யமுல் தாஹிரா, களக்காடு, நெல்லை.

புதிய வாசகியான எனக்கு, புரட்டியதுமே கிடைத்த நம்பிக்கை... `வாழ்வில் சாதிக்க வயது தடையில்லை’ என்பதே!

8. பானு பெரியதம்பி, சேலம்-30

‘நமக்குள்ளே’ பகுதியில் தற்கொலை பற்றிய பகிர்வு மனதைத் தொட்டது. அருமைத் தோழி அருகிலிருப்பதாகவே உணர்கிறேன் அவளால்!

9. க.மதுமிதா, நாச்சியார்கோவில்

#Utility #Motivation #Lifestyle #Health #Entertainment... #அவள் விகடன் வேற லெவல்..! #Super.

10. கிரிஜா நரசிம்மன், சென்னை-4

புரட்டப் புரட்ட அறிந்துகொள்ள வேண்டிய அற்புதக் குறிப்புகள் குவிந்து கிடக்கின்றன. அவள்களுக்கு மட்டுமல்ல; ‘அவன்’களுக்கும் உற்றத்தோழி `அவள்’!