மத்தியபிரதேச மாநிலம் ஷிவ்புரியைச்சேரந்த தினக்கூலித் தொழிலாளி சிவா கேவட். அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு பிரச்னையில் சிக்கித்தவித்து வருகிறார். அந்தப் பிரச்னை பணத்தாலோ மற்ற விவகாரங்களாலோ வந்ததில்லை. மாறாக அது காக்கைகளினால் அவருக்கு ஏற்பட்ட துன்பம். காக்கைகள் அவரை ஒரு எதிரியைப்போல் கருதி, விடாதுகருப்பாக துரத்தி வருகின்றன. சுமேலா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நாள்தோறும் வெளியேறும்போது, கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டுதான் வெளியே வருகிறார்.

தன் மீது தாக்குதல் நடத்தும் காக்கைகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் வகையில், அந்தக் குச்சியைக் கேடயமாகப் பயன்படுத்திவருகிறார். வெளியில் செல்லும்போதும் கூட, குச்சியை தன்னுடன் வைத்துக்கொண்டுதான் நடந்து செல்கிறார். இதற்கு காரணம், 3 ஆண்டுகளுக்கு முன்பு, சிவா வலை ஒன்றில் சிக்கிக்கொண்ட காக்கை குஞ்சு ஒன்றை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தக் காக்கை குஞ்சு அவர் கையிலிருக்கும்போது இறந்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதைக்காப்பாற்ற நினைத்தவருக்கு, அது முடியாமல் போனது. காக்கை குஞ்சின் இறப்புக்கு சிவாதான் காரணம் என்று கருதி, சிவாவை அடையாளம் கண்டு காக்கைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், ``அது என் கைகளில் இறந்துவிட்டது. நான் அதைக் காப்பாற்றத்தான் நினைத்தேன்; கொன்றுவிட அல்ல. காக்கைகள் நான் அதைக் கொன்றுவிட்டதாக நினைக்கின்றன” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார் சிவா.

3 ஆண்டுகளாக சிவா எப்போது வீட்டைவிட்டு வெளியே வந்தாலும், அவரைக் கொத்தியும், அவர் உடலைக் கடித்தும் துன்புறுத்துகின்றன. அவரது தலை மற்றும் கைகளில் காயங்கள் இருக்கின்றன. அவரது அன்றாட இந்த வேதனை அருகிலிருக்கும் வீட்டாருக்குப் பொழுதுபோக்காக மாறிவிட்டது. சிவா மீதான காக்கைகளின் இந்தத் தாக்குதலை அவர்கள் கண்டுகளிக்கின்றனர். தொடக்கத்தில் காகங்களின் இந்தத் தாக்குதலை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல, அதன் வீரியம் அவருக்கு புரியத்தொடங்கியது. அவரை எதிரியாகவே காகங்கள் முடிவு செய்துவிட்டன. தன்னை காகங்கள் அடையாளம் கண்டுகொண்டு தாக்குவது குறித்து அவர் வியப்புடன் பேசிவருகிறார்.