Published:Updated:

சி.எஸ்.ஆர்... தொழில் நிறுவனங்கள் நினைத்தால் சமூகத்தை மாற்ற முடியும்!

நிகழ்வு
பிரீமியம் ஸ்டோரி
News
நிகழ்வு

வாசு கார்த்தி

நிகழ்வு

நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான முறைகேடுகள், கிரிமினல் குற்றமாகக் கருதப்படாது என்று சில நாள்களுக்குமுன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த நிலையில், சி.எஸ்.ஆர் தொடர்பான கருத்தரங்கை, ஐ.சி.டி அகாடமி சென்னையில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நிறுவனங்களும் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான திட்டங்களை எப்படிச் செயல்படுத்தலாம், பெரிய நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுத்துகின்றன மற்றும் தொழில் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த முடியும் என விரிவாகப் பேசப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க உரையை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் டி.என்.சோமநாதன் நிகழ்த்தினார். ‘‘நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு என்பது சமீபத்தில் தொடங்கியதல்ல. அனைத்துக் காலகட்டத்திலும் பொறுப்புணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது. 2011-ம் ஆண்டு லாபத்தில் 2% என்னும் அளவைக் கொண்டுவர அரசு முடிவெடுத்தது. அப்போது நான் மத்திய அரசின் வர்த்தகத் துறையில் இருந்தேன். அப்போது இந்த மசோதாவுக்கு ஆளும்கட்சி, எதிர்கட்சி என கட்சி வித்தியாசம் இல்லாமல் ஆதரவு தெரிவித்தனர்.

சி.எஸ்.ஆர்... தொழில் நிறுவனங்கள் நினைத்தால் சமூகத்தை மாற்ற  முடியும்!

சமூகப் பொறுப்புக்குமுன், சில விஷயங்களில் நிறுவனங்கள் கவனமாக இருக்கவேண்டும். முதலாவது, இந்தியாவின் சட்டத்தை மதித்து நடப்பது. அதாவது, நிறுவனம் எந்தத் துறையில் செயல் படுகிறதோ, அந்தத் துறையின் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும். இரண்டாவதாக, தெரிந்தே தவறு செய்யக்கூடாது. உதாரணத்துக்கு, நிறுவனத்துக்கென வாங்கிய கடனைக் கட்டாமல் இருப்பது. இது போன்ற செயல்களைச் செய்யாமல் இருந்தாலே அந்த நிறுவனங் களுக்கு பாஸ்மார்க் வழங்கலாம். இதைத் தாண்டி அடுத்தக்கட்டமாக சமூக விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

அரசாங்கம் பெரிய விஷயங்களில் கவனம் செலுத்தமுடியும். உதாரணத்துக்கு, அணைகள், மெட்ரோ ரயில் போன்ற பெரிய அளவிலான திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆனால், சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது. இதுபோன்ற விஷயங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட முடியும். தொழில் நிறுவனங்கள் மாவட்ட, நகர அமைப்புகளுடன் இணைந்தால், மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’’ எனக் குறிப்பிட்டார்.

ஐ.சி.டி அகாடமியின் தலைவர் லஷ்மி நாராயணன், ‘‘சமூகப் பொறுப்புணர்வு என்பது நல்ல விஷயமாக இருந்தாலும், மிகப் பெரிய அளவில் திட்டமிட வேண்டாம். பெரிய அளவில் யோசிக்கும்போது அவை வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு. சிறிதாக யோசித்து அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தலாம். தவிர, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் குறிப்பிட்ட விஷயம் அல்லது பிராந்தியத்தின்மீது ஆர்வம் இருக்கும். அதிலிருந்து தொடங்கலாம்.

ஓர் உதாரணத்துக்காக, ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் பரேக் அறக்கட்டளை இணைந்து மருத்துவத் துறையில் சி.எஸ்.ஆர் அடிப்படையில் செயல்பட முடிவெடுத்தது. நோய் என்று வரும்போது, பரவும் நோய்கள், பரவா நோய்கள் என இரு பிரிவுகள் உள்ளன. பரவும் நோய்களில் ஒரே சமயத்தில் அதிக நபர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை மற்றும் தீர்வு நடவடிக்கைகளில் அரசே ஈடுபடும். ஆனால், கேன்சர் உள்ளிட்ட பரவா நோய்களுக்கு அதிக கவனம் தேவை என முடிவெடுத்து, இந்தப் பிரிவில் மட்டும் கவனம் செலுத்துகிறது. பிரத்யேகமாக கேன்சர் ஃபண்ட் என ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் செலவு செய்கிறது’’ எனக் கூறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஏ.வி. தர்மகிருஷ்ணன், ‘‘லாபத்தில் 2% சி.எஸ்.ஆருக்கு என்பது அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசாணையாகும். ஆனால் 1994-ம் ஆண்டு ராம்கோ நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தில் லாபத்தில் 3% சமூக மேம்பாடு தொடர்பான விஷயங் களுக்குச் செலவு செய்ய வேண்டும் என விதிமுறையைக் கொண்டுவந்தோம். இதன் மூலம் கல்வி, சுகாதாரம் எனப் பல பிரிவுகளில் ராம்கோ குழுமம் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தவிர, குழுமத்தின் சார்பாக, பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இதில் கிடைக்கும் அனைத்து லாபமும் சமூக மேம்பாட்டுப் பணிக்கு மட்டுமே செலவு செய்கிறோம்’’ எனக் குறிப்பிட்டார்.

சி.எஸ்.ஆர்... தொழில் நிறுவனங்கள் நினைத்தால் சமூகத்தை மாற்ற  முடியும்!

டெல் நிறுவனத்தின் சந்திரசேகர் கிருஷ்ண மூர்த்தி, ‘‘எங்கள் பணியாளர்கள்மூலமே சமூக மேம்பாடு தொடர்பான பணிகளைச் செய்துவருகிறோம். இந்தியாவில் 25,000 பணியாளர்கள் உள்ளனர். இதில் 70% பணியாளர்கள் தன்னார்வலர்களாக இருக்கிறார்கள். பணியாளர்கள்மூலமே ஒவ்வொரு காலாண்டிலும் சி.எஸ்.ஆர் தொகையைச் செலவு செய்கிறோம். இதனால் பணியாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் பிணைப்பு அதிகரிக்கிறது’’ என்றார்.

இந்தக் கருத்தரங்கில் சில முக்கிய நிறுவனங் களின் உயரதிகாரிகள் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளில் தங்கள் நிறுவனம் கவனம் செலுத்திவருவது பற்றி விளக்கமாகப் பேசினாலும், கனரா வங்கியின் தலைவர் டி.என்.மனோகரன் பேசியதைப் பலரும் சுவாரஸ்யமாகக் கேட்டனர்.

‘‘பில்கேட்ஸ் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கியவர் என்பதைவிட பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவியவராகவே வரலாற்றில் நினைவுகூரப்படுவார். அதேபோல, அசீம் பிரேம்ஜியும் அவருடைய அறக்கட்டளைக்காகவே நினைவுகூரப்படுவார்.

சி.எஸ்.ஆர் என்றால் கல்வி, மருத்துவம், சுற்றுச்சுழல் என்றே நினைக்கிறார்கள். ஆனால், விளையாட்டில் கவனம் செலுத்துவதும்கூட சி.எஸ்.ஆர்தான். இதுவரை இந்தியா வாங்கியுள்ள ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள் 28. ஆனால், தனிநபரான மைக்கேல் பெல்ப்ஸ் வாங்கிய பதக்கமும் 28-தான். நம் நாட்டைவிட தனியொரு மனிதன் அதிக அளவில் தங்கப்பதக்கம் வாங்கி யிருக்கிறார்.

அமெரிக்காவில் மக்கள்தொகை மந்தமாகி இருக்கிறது. ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்திருக்கிறது. ஜப்பான் போன்ற நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதை டெமோகிராபிக் டிவிடெண்ட் (Demographic Dividend) என்கிறோம். இது ஓர் அழிவுசக்தியாக (Disaster) மாறாமல் இருக்க அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். ஹட்சன் நிறுவனம் பேட்மிட்டன் மையத்தை அமைத்து இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. இதைப்போல, மற்ற நிறுவனங்களும் விளையாட்டுத் துறையில் உள்ள வாய்ப்புகளில் கவனம் செலுத்தலாம். தொழில் நிறுவனங்கள் நினைத்தால் சமூகத்தை மாற்ற முடியும்’’ எனக் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தரங்கின் இறுதி உரையை சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் வழங்கினார். ‘‘கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அங்கு ஒரு ஸ்டேடியம் அமைக்கத் தொடங்கினோம். இது அந்த ஊர் நிறுவனங்கள் உதவி செய்ததால்தான் சாத்தியம் ஆயிற்று. இப்போதும் அந்த ஸ்டேடியம் சர்வதேச தரத்தில் இருக்கிறது. அரசும் தனியார் நிறுவனங்களும் இணையும்போது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்’’ எனக் குறிப்பிட்டார்.

நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு தொடர்பாக புதிய தெளிவை உருவாக்குவதாக இருந்தது இந்தக் கருத்தரங்கம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சி.எஸ்.ஆர்... தொழில் நிறுவனங்கள் நினைத்தால் சமூகத்தை மாற்ற  முடியும்!

ஆளுமைகளின் நேர்காணல்!

இந்த நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக ‘A few good men’ என்கிற ஆங்கிலப் புத்தகம் வெளியிடப்பட்டது. டி.வி.எஸ் லாஜிஸ்ட்டிக்ஸ் ஆர்.தினேஷ், இன்டெலக்ட் டிசைன் எரீனாவின் அருண் ஜெய்ன், முருகப்பா குழுமத்தின் அருண் அழகப்பன், சினிமா இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளின் நேர்காணல் அடங்கிய புத்தகத் தொகுப்பு இது. இந்தப் புத்தகத்தை ஆடிட்டர் பட்டாபிராமன் எழுதியிருக்கிறார்.

சி.எஸ்.ஆர்... தொழில் நிறுவனங்கள் நினைத்தால் சமூகத்தை மாற்ற  முடியும்!

எதிர்காலத் தொழில்முனைவோர்களுக்கான சவால்!

டை சென்னை நிறுவனம், குளோபல் அலையன்ஸ் ஆஃப் மாஸ் ஆந்த்ரப்ரனார் (GAME), ஐ.சி.டி அகாடமி மற்றும் பூர்ணிதா அமைப்புகளுடன் இணைந்து ‘ஃப்யூச்சர்பிரினர் - கிராண்ட் சேலஞ்ச்’ என்கிற போட்டியைக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தவிருக்கிறது. சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் பற்றி ஒரு வீடியோ எடுத்தோ அல்லது ஒரு கட்டுரையை எழுதியோ அனுப்பலாம். தொழில் செய்பவர்கள் என்ன மாதிரியான உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள், பிரச்னை களுக்கு எப்படித் தீர்வு காண்கிறார்கள் என்பது குறித்த விஷயங்கள் இந்த வீடியோ அல்லது கட்டுரையில் இருக்கவேண்டும்.

‘‘சிறிய அளவில் சிறப்பாகத் தொழில் செய்து வரும் பலரையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இந்தப் போட்டியை நடத்துகிறோம்’’ என்றார் ‘கேம்’ அமைப்பின் துணை நிறுவனர் மதன் படாகி. ‘‘படித்துமுடித்தபின் தொழில்முனைதலில் மாணவர்கள் ஈடுபட இந்தப் போட்டி மிகவும் உதவும்’’ என்றார் டை சென்னை அமைப்பின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வர். ‘‘தமிழகத்தில் உள்ள 950-க்கும் கல்லூரி மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம்’’ என்றார் ஐ.சி.டி அகாடமியின் சி.இ.ஓ சிவக்குமார். கல்லூரி மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு ஜெயிக்கலாமே!

-ஆகாஷ்