Published:Updated:

சாகுற வயசுல எங்களுக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது!

கடலூர் முதியோர் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
கடலூர் முதியோர் தம்பதி

கலங்கும் கடலூர் முதியோர் தம்பதி!

சாகுற வயசுல எங்களுக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது!

கலங்கும் கடலூர் முதியோர் தம்பதி!

Published:Updated:
கடலூர் முதியோர் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
கடலூர் முதியோர் தம்பதி

இந்திய அரசியலமைப்புச் சட்டம், `ஒரு மனிதனுக்கு மருத்துவம், உணவு, இருப்பிடம், கல்வி ஆகியவை கட்டாயம் கிடைக்கும்படி உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கப்பெறும் நிலையில், அவை அனைவராலும் பெறப்பட்டனவா என உறுதி செய்யப்பட வேண்டும்’ என்கிறது. ஆனால், இன்றளவிலும் எந்தவித அடிப்படை வசதியுமின்றி தனித்துவிடப்பட்ட லட்சக்கணக்கான முதியோர் வறுமையில் வாடும் அவலமும் நம் நாட்டில் நடக்கத்தான் செய்கின்றன!

தங்குவதற்கு இடமின்றி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள மேம்பாலத்துக்கு அடியில் தஞ்சமடைந்திருக்கும் 75 வயது முதியவரையும், அவரின் மனைவியையும் சந்தித்தோம். ``என் பேரு ராதாகிருஷ்ணன். நானும், என் மனைவியும் இதே ஊர்ல, இதே இடத்துல 50 வருஷமா இருக்கோம். 15 வருஷத் துக்கு முந்தி இங்க மேம்பாலம் கட்டணும்னு நாங்க தங்கியிருந்த வீட்டை இடிச்சுட்டாங்க. `வேற இடத்துல உங்களுக்கெல்லாம் வீடுகட்டித் தருவாங்க’ன்னு சொன்னாங்க. ஆனா தரலை. கூட இருந்தவங்கள்லாம் வேற வேற இடங் களுக்குப் போயிட்டாங்க. போக்கிடம் இல்லாம 15 வருஷமா இந்தக் கழிவுநீர் கால்வாய்க்குப் பக்கத்துலயேதான் இருக்கோம்” என்று உடைந்த குரலில் கணவர் சொல்வதை வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்த அவர் மனைவி தில்லைக்கரசி, நம்மிடம் பேசத் தொடங்கினார்.

சாகுற வயசுல எங்களுக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது!
சாகுற வயசுல எங்களுக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது!

``என்னால சரியா நடக்க முடியாது, அவர்தான் எல்லா வேலையும் செய்வார். விறகடுப்புலதான் சமைக்கிறோம். கழிவுநீர் கலந்து வர்ற தண்ணிலதான் எல்லாம் பண்ணியாகணும். குடிக்கறத்துக்கு மட்டும் கொஞ்சம் தூரமா போய் தண்ணி பிடிச்சுட்டு வருவோம்” என்று தன் கஷ்டங்களைச் சொன்னார்.

தொடர்ந்து பேசிய முதியவர் ராதாகிருஷ்ணன், ``பானைகளை வாங்கி, வித்துப் பொழப்பு நடத்துறோம். அதுலயும் பெரிய வருமானமில்லை. முதியோர் உதவித்தொகைக்கு எட்டு வருஷத்துக்கு முன்னாடியே விண்ணப்பிச்சோம். தாலுகா ஆபீஸ்லருந்து யார் யாரோ வந்துல்லாம் பார்த்தாங்க. ஆனா, இன்னும் கிடைச்சபாடில்லை. நடுவுல சாப்பிடக்கூட காசில்லாம, வெளியூர் கந்துவட்டிக்காரர்கிட்ட பத்தாயிரம் ரூபா கடன் வாங்கினோம். தினமும் 350 ரூபாய் கட்டணும். கொஞ்ச நாள் கட்டுனோம். அப்புறம் கட்ட முடியலை. இப்போ அவங்க வந்து கட்டச் சொல்லி வற்புறுத்துறாங்க. சோத்துக்கும் இடத்துக்குமே கஷ்டப்படுற எங்களால எப்படி தினமும் 350 ரூபாய் கட்ட முடியும்?” என்றார் வேதனையாக.

``அதிகாரிகள், பொதுமக்கள்னு பலரும் இந்த வழியா போறாங்க. ஆனா, ஒருத்தர்கூட எங்களுக்கு உதவ முன்வரலை. பத்தாததுக்குக் குடிபோதையில வர்றவங்களால பிரச்னை, வண்டிச்சத்தம், கொசுக்கடினு நிம்மதியா தூங்கக்கூட முடியாது. இதோ இந்த நாய்தான் எங்களுக்குத் துணையா, ராத்திரியில பாதுகாப்பா இருக்கு. சுகர், பிரஷர்னு உடம்புல பல வியாதிகள். மாசா மாசம் ஆஸ்பத்திரியில மாத்திரை வாங்குறோம். இடையில ஏதாவது ஆனாக்கூட எங்களைப் பாத்துக்குறதுக்கு யாருமே இல்லை. ரெண்டு மகன், ஒரு மகள் வெளியூர்ல எங்கேயோ இருக்காங்க. அவங்களும் ரொம்பக் கஷ்டத்துல இருக்காங்கன்னு கேள்விப்பட்டு அவங்ககிட்டயும் நாங்க போகலை. சாகுற வயசுல எங்களுக்கு வந்திருக்கும் நிலைமை யாருக்கும் வரக் கூடாது” என்றார் தில்லைக்கரசி.

சாகுற வயசுல எங்களுக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது!

“கவலைப்படாதீங்க..!”

இந்த விவகாரத்தைக் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திடம் கொண்டு சென்றோம். அவர் சிதம்பரம் வட்டாட்சியரிடம் நேரில் பார்வையிட்டுத் தீர்வு அளிக்குமாறு உத்தரவிட்டார். மறுநாளே வட்டாட்சியர் ஹரிதாஸ், கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜுதீன் இருவரும் நேரில் வந்து அவர்களைப் பார்வையிட்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர்.

“அடுத்த மாதத்திலிருந்து உங்களுக்கு உதவித் தொகை வங்கிக் கணக்கில் தவறாமல் செலுத்தப்படும். தேவையான நகல்களையும் மனுவையும் மட்டும் எடுத்துவையுங்கள். கிராம நிர்வாக அலுவலரே நேரில் வந்து வாங்கிக்கொள் வார். அதுமட்டுமல்லாமல், வறுமையில் வாடுபவர்களுக்குத் தொழில் தொடங்க பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரை நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கான மனுவையும் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்துவிடுங்கள். நகர்ப்பகுதியாக இருப்பதால் பட்டா வழங்க இயலாது. வறுமையில் உள்ளோருக்கு அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம் நடைபெற்றுவருகிறது. மேலும் தனியாரிடமும் இடவசதி கேட்டிருக்கிறோம். உங்களுக்கு அதில் முன்னுரிமை அளிக்கிறோம். கண்டிப்பாக உங்களுக்கு வீடு ஒதுக்கித் தரப்படும்” என உறுதியளித்திருந்தார் வட்டாட்சியர் ஹரிதாஸ். அதன்படியே அடுத்தநாள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் ஆவணங்கள் பெறப்பட்டு, ஆன்லைனில் முதியோர் உதவித் திட்டத்துக்குப் பதிவும் செய்யப்பட்டுவிட்டது.

தங்களிள் ‘வசிப்பிடத்துக்கே’ வந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்குக் கைகூப்பி நன்றி சொன்ன இருவரின் கண்களிலும், ‘நிச்சயம் தங்கள் வாழ்க்கை மாறும்’ என்ற நம்பிக்கை ஒளி தெரிந்தது!