Published:Updated:

ஃபேஸ்புக் நட்பு, ஒரு வருடம் காதல்!- கடலூர் திருநங்கையை மணந்த விழுப்புரம் வாலிபர்

ஜி.சதாசிவம்

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் திருநங்கை அமிர்தா, மும்பையைச் சேர்ந்த லட்சுமண் என்பவரை ஃபேஸ்புக் மூலம் நட்பாகி, பின்னர் காதலித்து இன்று காலை திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்டார்.

திருநங்கை அமிர்தா -லட்சுமண் திருமணம்
திருநங்கை அமிர்தா -லட்சுமண் திருமணம்

கடலூர் மாவட்டம், திருவந்திபுரம் சாலைக்கரையைச் சேர்ந்த சேகர்-அமுதா தம்பதியின் மகள் அமிர்தா. இவர் திருநங்கை, பி.எஸ்ஸி வரை படித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் லட்சுமண். இவர் மும்பையில் சினிமா ஷூட்டிங்களுக்கு செட் அமைக்கும் பணியில் தொழிலாளராகப் பணிபுரிந்துவருகிறார். ஃபேஸ்புக் மூலம் அமிர்தாவும் லட்சுமணனும் நட்பாகப் பழகிவந்துள்ளனர். பின்னர் இருவரும் காதலித்து, இவர்களின் காதலை தங்களின் பெற்றோருக்குத் தெரிவித்தனர். அவர்கள் சம்மதத்தின் பேரில் இவர்கள் இன்று காலை திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமண கோலத்தில் திருநங்கை அமிர்தாவுடன் லட்சுமண்
திருமண கோலத்தில் திருநங்கை அமிர்தாவுடன் லட்சுமண்
Vikatan

இது குறித்து அமிர்தா கூறுகையில், ``நான் பி.எஸ்ஸி வரை படித்துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குப் படித்து வருகிறேன். போலீஸ் வேலைக்கும் முயற்சி செய்துவருகிறேன். நான் கடந்த இரண்டு வருடமாக மும்பையில் இருந்தேன். அப்பொழுது ஃபேஸ்புக் மூலம் எனக்கும், மும்பையைச் சேர்ந்த லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாகப் பழகினோம். எங்கள் நட்பு காதலாக மாறியது.

கடந்த ஒரு வருடமாக காதலித்துவந்தோம். இது குறித்து திருவந்திபுரத்தில் உள்ள என் பெற்றோருக்குத் தெரிவித்தேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயிலில் நடத்த முடிவுசெய்தோம். ஆனால், அதற்கு எதிர்ப்பு இருந்தது. கோயில் அலுவலர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கொடுத்து அனுமதி வாங்கி இன்று கோயிலில் திருமணம் செய்துகொண்டோம்" என்றார்.

திருநங்கை அமிர்தா -லட்சுமண்
திருநங்கை அமிர்தா -லட்சுமண்

இது குறித்து மணமகன் லட்சுமண் கூறுகையில், ``நாங்க ஒரு வருடமாக காதலித்துவந்தோம். என் பெற்றோரிடம் கூறியபோது ஆரம்பத்தில் எதிர்த்தனர். பின்னர் அவர்களைச் சமாதானப்படுத்தி, அவர்கள் சம்மதத்துடன் இன்று நாங்க சந்தோஷமாக திருமணம் செய்துகொண்டோம். இனி நான் மும்பை செல்லப் போவதில்லை. திருவந்திபுரத்தில் அமிர்தாவுடன் வசிக்கப் போகிறேன்" என்றார்.