கடலூர்: கொரோனா தடுப்பூசி என்று கூறி மயக்க ஊசி போட்டு நகைகள் கொள்ளை! - இளம்பெண் கைது

கொரோனா தடுப்பூசி என்று கூறி உறவினர்களுக்கு மயக்க ஊசி செலுத்தி நகைகளை திருடிச் சென்ற இளம்பெண்ணை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கடலூர் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்திருக்கும் லக்கூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மனைவி ராசாத்தி. பெரம்பலூர் மாவட்டம், கீழக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியப்பிரியா. பெரம்பலூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்துவரும் சத்தியப்பிரியா ராசாத்தியின் சொந்த அத்தை மகள். கடந்த 11-ம் தேதி மாலை 3 மணியளவில் லக்கூரிலுள்ள ராசாத்தி வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சத்தியப்பிரியா.

அப்போது அவர்களிடம், ‘கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலிருந்து உங்களைக் காப்பாற்றவே கொரோனா தடுப்பூசி எடுத்து வந்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் சத்தியப்பிரியா. அவர்களும் சந்தோஷத்துடன் சம்மதம் தெரிவிக்க, அன்று இரவு ராசாத்தி, அவர் கணவர் கிருஷ்ணமூர்த்தி, மகள்கள் கீர்த்திகா, மோனிகா ஆகிய நான்கு பேருக்கும் ஊசியை போட்டிருக்கிறார்.
அதையடுத்து நான்கு பேரும் அன்றிரவு அயர்ந்து தூங்கிவிட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது சத்தியப்பிரியா இல்லாததுடன், ராசாத்தியின் கழுத்தில் இருந்த ஆறு பவுன் தாலிச் செயின், மகள் கிருத்திகா அணிந்திருந்த 10 பவுன் தாலிச் செயின், ஒரு பவுன் செயின், மோனிகா அணிந்திருந்த இரண்டு பவுன் செயின் உள்ளிட்ட 19 பவுன் நகைகளும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதையடுத்து ராமநத்தம் காவல் நிலையத்தில் ராசாத்தி அளித்த புகாரின் அடிப்படையில் சத்தியப்பிரியாவை வளைத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டது காவல்துறை. அப்போதுதான் கொரோனா தடுப்பூசி என்று கூறி அவர்கள் அனைவருக்கும் மயக்க ஊசி போட்டு நகைகளை அவர் திருடியிருப்பது தெரியவந்தது. மருத்துவர்களும் அது மயக்க ஊசிதான் என்பதை உறுதிப்படுத்தினர். அதையடுத்து சத்தியப்பிரியா மீது வழக்கு பதிவு செய்ததுடன், அவரைக் கைதுசெய்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.