Published:Updated:

கத்தித் துண்டை எடுக்காமல் தையல் போட்ட டாக்டர்கள்! - வாலிபரைப் பதறவைத்த கடலூர் அரசு மருத்துவமனை

வாலிபரின் முதுகில் கத்தித் துண்டை வைத்து அரசு மருத்துவர்கள் தையல் போட்டுள்ள சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தித் துண்டு
கத்தித் துண்டு

கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாரதி. இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை (14-ம் தேதி) அன்று இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் பாரதியை, ஜானகிராமன் கத்தியால் குத்தினார். இதில் பாரதிக்கு முதுகில் கத்திக்குத்து விழுந்தது. இதனால், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளார் பாரதி.

Vikatan
பாரதி
பாரதி

அப்போது, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கத்தி குத்துபட்ட இடத்தில் தையலும் போடப்பட்டுள்ளது. ஆனால், அதன்பின்பு வலி பொறுக்க முடியாமல் கதறிய நிலையில், பாரதியின் முதுகுப் பகுதியை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துள்ளனர். அப்போது, கத்தியின் உடைந்த பகுதி முதுகுப் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்து இளைஞரும் உறவினர்களும் பதறியுள்ளனர்.

உடைந்த கத்தி
உடைந்த கத்தி

இதையடுத்து, `இங்கு ஆபரேசன் செய்ய முடியாது. உடனடியாக புதுச்சேரிக்குக் கொண்டு செல்லுங்கள்' என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதன்பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் பாரதி. அங்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் முதுகில் இருந்த உடைந்த கத்தித் துண்டு அகற்றப்பட்டது. ஆனால், கவனக்குறைவாக இருந்த அரசு மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து கடலூர் மக்கள் நல பணிகள் இணை இயக்குநர் ரரமேஷ்பாபுவிடம் கேட்டதற்கு, "பாரதி முதுகில் கத்தி இருப்பது எங்களுக்கு தெரியும். அவருக்கு அதிகம் ரத்தம் வெளியேறியதாலும் இங்கு அந்த கத்தியை எடுக்க வசதி இல்லாததாலும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். தவிர உள்ளே கத்தி இருப்பது தெரியாமல் தையல் போடவில்லை. இவை அனைத்தும் அவரிடம் கூறி ரெக்கார்டில் பதிந்துதான் அனுப்பினோம்" என்றார்.