Published:Updated:

வினு விமல் வித்யா: தள்ளுவண்டிக் கடை நடத்தும் கவுன்சிலர்!

 சாக்‌ஷி தன்வார்,  சானியா மிஸ்த்ரி
பிரீமியம் ஸ்டோரி
சாக்‌ஷி தன்வார், சானியா மிஸ்த்ரி

சஹானா

வினு விமல் வித்யா: தள்ளுவண்டிக் கடை நடத்தும் கவுன்சிலர்!

சஹானா

Published:Updated:
 சாக்‌ஷி தன்வார்,  சானியா மிஸ்த்ரி
பிரீமியம் ஸ்டோரி
சாக்‌ஷி தன்வார், சானியா மிஸ்த்ரி

“என்னா வெயில்... என்னா வெயில்” என்ற வாறே வினு வீட்டுக்குள் நுழைந்தார் வித்யா.

“வாங்க வித்யாக்கா. உங்களுக்காக கேரட் ஜூஸ் போட்டு வச்சிருக்கேன். எடுத்துட்டு வரேன்” என்று வினு சொல்லிக்கொண்டிருந்த போதே, விமல் நுழைந்தாள்.

“கேரட் ஜூஸை அப்புறம் சாப்பிடலாம். இந்தாங்க ஆளுக்கொரு பாட்டிலைத் திறந்து குடிங்க...” என்றாள் விமல்.

“இது என்ன விமல்? பேரெல்லாம் இல்ல.”

“வித்யாக்கா, இது நுங்கு இளநீர். வரும்போது ஒரு கடையில பார்த்தேன். நமக்கெல்லாம் நுங்கு ரொம்பப் பிடிக்குமே, அதான் வாங் கிட்டு வந்தேன்!”

மூவரும் குடித்தனர்.

“பிரமாதம்னு சொல்ல முடியல. ஆனா, நல்லாருக்கு விமல். நுங்கை இப்படி முழுசா அரைக்காம, அரைகுறையா போட்டிருந்தா இன்னும் நல்லாருக்கும்ல... நுங்கோட சுவையே அதை மென்னு சாப்பிடறதுலதானே இருக்கு. விலை அதிகமோ?”

“நீங்க சொல்ற ஐடியா நல்லாயிருக்கு. விலை அதிகம்னு சொல்ல மாட்டேன். இளநீர் விலை அதிகம். ஒரு நுங்கே பத்து ரூபாய்க்கு விற்கறாங்க. அதனால ஓகேதான்...”

“உன்னால இன்னிக்கு ஒரு புது டேஸ்ட் எங்களுக்கு அறிமுகமாயிருக்கு” என்று சிரித்தாள் வினு.

“சேலம் நரசிங்கபுரம் கவுன்சிலர் புஷ்பாவதி பத்திக் கேள்விப்பட்டீங்களா?”

வித்யாவின் கேள்விக்கு வினுவும் விமலும் இல்லையென தலையசைத்தனர்.

“அவங்க பல வருஷங்களா கணவரோட சேர்ந்து தள்ளுவண்டி உணவகம் நடத்திட்டு வர்றாங்க. கவுன்சிலரான பிறகும் தள்ளு வண்டிக் கடையைக் கைவிடல. ரொம்ப சீக்கிரமே எழுந்து வீட்டுவேலைகளை முடிச் சிட்டு, கவுன்சிலர் வேலைகளைச் செய்யறதா சொல்றாங்க. மதியம் வீட்டுக்கு வந்து கடைக் கான உணவுகளைத் தயார் செய்யறாங்க. ஈவ்னிங்ல பரபரப்பா கடையில வேலை செய்யறாங்க. அவங்களுக்கு சமூக பணியும் பிடிக்குமாம், கடை நடத்தவும் பிடிக்குமாம். ‘கவுன்சிலரான பிறகும் நான் தள்ளுவண்டிக் கடை நடத்திட்டிருக்கேனேன்னு எல்லோரும் ஆச்சர்யப்படறாங்க. இதுதான் எங்க தொழில். அதை விட்டுட முடியாது. என் தொழில், சமூகப் பணியை எந்தவிதத்துலயும் பாதிக்காம பார்த்துக்கறேன்’னு சொல்றாங்க...”

“சூப்பர் வித்யாக்கா... ராணிப்பேட்டை மாவட்டத்துல வேடல்ங்கிற கிராமத்தோட ஊராட்சித் தலைவர் கீதா குடும்பத்தை, சாதி வன்மத்தால சிலர் தொடர்ந்து தாக்கிக்கிட்டு இருக்காங்க. ஒரே மாசத்துல மூணு தடவை தாக்குதல் நடந் திருக்கு. கீதாவோட கணவர் ஆஸ்பத்திரில இருக்கார். ஹூம்ம்ம்ம்... எவ்வளவுதான் முன்னேறினாலும் நம்ம மக்கள்கிட்ட சாதிய மனோபாவம் மட்டும் மாறாது போல” என்று வேதனையுடன் சொன்னாள் விமல்.

“ம்... சித்திரையில தென் மாவட்டங்கள்ல எல்லாம் நல்ல மழை பெஞ்சிருக்கு. இந்தச் சென்னைலதான் வெயில் வாட்டி எடுக்குது... இந்த வருஷம் தண்ணீர்ப் பஞ்சம் வந்துரு மோன்னு இப்பவே பயமா இருக்கு” என்றார் வித்யா.

“ஆமாக்கா. இப்பவே மகாராஷ்டிராவுல நாசிக் மாவட்டத்துல தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரிச்சு ஆடுது. பெண்கள் ரெண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து, ஒரு பெரிய கிணத்துலயிருந்து கயிறு கட்டி, தண்ணி எடுக்கறாங்க. சில பெண்கள் உயிரைக் கைல பிடிச்சிட்டு, கிணத்துக்குள்ள இறங்கி எடுக்க றாங்க. பார்க்கும்போதே பதறுது. ஆப்பிரிக்கா வுல சில நாடுகள்ல பெண்கள் தண்ணிக்காகத் தான் அதிகமான நேரத்தைச் செலவு செய்றாங்க” என்று வருத்தப்பட்டாள் வினு.

“எந்தப் பிரச்னைனாலும் அது பெண்களைத் தான் அதிகமா பாதிக்குது. இன்னொரு விஷயம் சொல்றேன், மும்பையில வசிக்கிறாங்க சானியா மிஸ்த்ரி. 15 வயசான இந்தப் பொண்ணு ராப் பாடகரா கலக்கறாங்க. ஹிஜாப் அணிஞ்சுகிட்டு அவங்க பாடறதைக் கேட்க, அவ்வளவு அமர்க்களமா இருந்துச்சு. பத்து வயசுலயிருந்தே பாடல் எழுத ஆரம்பிச் சிட்டாங்களாம். ‘இந்த உலகத்துல பெண்ணா பிறந்து, வாழறது சாதாரணமான விஷயமில்ல. பெண்கள் ஒவ்வொரு விஷயத்துக்கும் ரொம்ப ரொம்ப போராட வேண்டியிருக்கு. அதனால என்னோட பாடல்கள்ல பெண்களோட பிரச்னைகளைத்தான் அதிகமா பாடறேன். மும்பை ஒருபக்கம் பணக்காரங்க புழங்கற இடமாவும் இன்னொருபக்கம் ஏழைகள் நிரம்பியிருக்கிற இடமாவும் இருக்கு. நாங்களும் கடினமாத்தான் உழைக்கிறோம்... ஆனா, நாங்க மட்டும் பணத்துக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படறோம்?’னு கேட்கறாங்க. பாடகி மட்டுமில்ல, ரொம்ப புத்திசாலியாவும் இருக் காங்க சானியா!”

“நீ சொல்றது சரிதான் வினு. கஷ்டப்பட்டு உழைச்சாலும் ஏன் அந்த உழைப்புக்கேத்த ஊதியம் கிடைக்கலைன்னு எவ்வளவு பெரிய விஷயங்களையெல்லாம் யோசிக்கிறாங்க இந்தக் குட்டிப் பொண்ணு. பெரியாளா வரணும்” என்றாள் விமல்.

ஜில்லென்று கேரட் ஜூஸைக் கொண்டு வந்து கொடுத்தாள் வினு.

“என்ன வினு, ஜூஸெல்லாம் பிரமாதமா செய்ய ஆரம்பிச்சிட்டே!”

“போங்க வித்யாக்கா... கிண்டல் பண்ணா தீங்க... வெயில் நேரத்துல ஜில்லுனு எது குடிச்சாலும் நல்லாதான் இருக்கும். கேள்விப் பட்டீங்களா.... அமெரிக்காவோட உச்ச நீதிமன்ற நீதிபதியா கேதன்ஜி பிரெளன் ஜாக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காங்க!” என்றாள்.

“இதுல ஏதாவது ஸ்பெஷலா?”

“ஆமா, வித்யாக்கா. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தோட 233 ஆண்டுக்கால வரலாறுல, முதல்முறையா ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் நீதிபதியா வந்திருக்காங்க. இதுவரைக் கும் ஐந்து பெண் நீதிபதிகள்தான் பதவியிலிருந் திருக்காங்க. இப்போ ஆறாவதா 51 வயசு கேதன்ஜி வந்திருக்காங்க. அங்கே நீதிபதி யாகறதுக்கு வாக்கெடுப்பு நடத்துவாங்க. அதுல இந்த முறை கேதன்ஜி, பெரும் பான்மையான வாக்குகளை வாங்கியிருக் காங்க... செம்ம இல்ல!”

“வாவ்... சூப்பர் வினு. இனிமேலாவது ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண்கள் இந்த மாதிரி பொறுப்புகளுக்கு அதிகமா வரட்டும். ஆமா, உக்ரைன் போர் நிலவரம் எப்படி யிருக்கு?” கவலையோடு கேட்டாள் விமல்.

வினு விமல் வித்யா: தள்ளுவண்டிக் கடை  நடத்தும் கவுன்சிலர்!

“அது சொல்லிக்கிற மாதிரி இல்ல விமல். போர் ஆரம்பிச்சதிலிருந்து 40 லட்சம் குழந்தைகள் நாட்டைவிட்டுப் போயிருக்கிறதா இன்னிக்கு ஒரு நியூஸ் படிச்சேன். போரால சீரழிஞ்ச நாடுகளைப் பார்த்த பிறகும் போரை எப்படித்தான் நடத்தறாங்களோ? இந்த ரணகளத்துலயும் உக்ரைனைச் சேர்ந்த அனா ஹொரோடெட்ஸ்கா, இந்தியக் காதலனைக் கல்யாணம் பண்ணிருக்காங்க. அனா ஐடியில வேலை செய்யறாங்க. 2019-ல இந்தியாவுக்கு வந்தப்ப, யதேச்சையா அனுபவ் பாசின்ங்கிற வழக்கறிஞரை சந்திச்சுருக்காங்க. இன்ஸ்டா கிராம்ல நட்பைத் தொடர்ந்திருக்காங்க. ஒருகட்டத்துல நட்பு காதலாயிருச்சு. கொரோ னாவால இந்தக் கல்யாணம் உடனடியா நடக்கல. போர் பூமியிலிருந்து தப்பி இந்தியா வுக்கு வந்த அனாவை, விமான நிலையத்துலயே சிறப்பா வரவேற்பு கொடுத்து, பிறகு கல்யாணமும் பண்ணிக்கிட்டார் அனுபவ்!”

“அடடா! இத்தனைக்கும் நடுவில் ஒரு காதல் பூக்கத்தானே செய்கிறது!” என்றாள் விமல்.

“ஆமா... எங்கேயோ படிச்சதை அழகா சொல்லிட்டே!” என்றார் வித்யா.

“ஆமா, ஏதாவது மூவி பார்த்தீங்களா வித்யாக்கா?”

“இல்ல வினு... வேலை கொஞ்சம் அதிகம்...”

“சாக்‌ஷி தன்வார் நடிச்சிருக்கிறாரேன்னு `மாய்’ங்கிற வெப் சீரிஸ் பார்த்தேன்...”

“சாக்‌ஷி யாரு?”

“தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும்.

‘உள்ளம் கொள்ளை போகுதே’ன்னு ஒரு சீரியல்ல ராம் கபூரோட நடிச்சிருப்பாங்க. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. ‘டங்கல்’ படத்துல அமீர்கானுக்கு ஜோடியா வந்திருப்பாங்க. வாய் பேச முடியாத மருத்துவ மாணவியோட அம்மா சாக்‌ஷி. இவங்களும் டாக்டர். மகள் கொல்லப்பட்ட பிறகு, கொன்னவங்களைத் தேடிப் போறதுதான் கதை. இவங்க சர்வசதாரணமா ஒரு பிணத்தைத் தனியா தூக்கிட்டுப் போறதை யெல்லாம் ஏத்துக்கவே முடியல. கதையை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம். புத்தி சாலித்தனமா காரணத்தைக் கண்டுபிடிச்சு, பழி வாங்கற மாதிரி காட்டிருக்கலாம்னு எனக்குத் தோணுச்சு. ஆனா, சாக்ஷி ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. முதல் சீசன்தான் வந்திருக்கு. அடுத்த சீசனும் வரும் போல!” என்றாள் வினு.

“ஓ... சாக்‌ஷிக்காக வேணா பார்க்கலாம்னு சொல்லு!”

“ஆமா, உங்களுக்கு ஏதாவது டிபன் செய்யட்டுமா?”

“இன்னொரு நாள் சாப்பிடறோம்... இப்ப கிளம்பறோம்... வித்யாக்கா நீங்க வண்டியில வரலையா... டிராப் பண்ணட்டுமா?”

“சர்வீஸுக்கு விட்டிருக்கேன். அங்கே விட்டுடு” என்று வித்யா சொல்லவும் வினு

வுக்கு பை சொல்லிவிட்டு, விமல் வண்டியை எடுத்தாள்.

- அரட்டை அடிப்போம்...

****

வினு தரும் வித்தியாசமான தகவல்

ஏப்ரல் 21-ம் தேதி உண்மையான பிறந்தநாள், ஜூன் இரண்டாவது சனிக்கிழமையில் உத்தியோகபூர்வ பிறந்தநாள் என இங்கிலாந்து ராணி ஒவ்வோர் ஆண்டும் இரண்டு பிறந்த நாள்களைக் கொண்டாடுகிறார்.

உயரும் விலை... அரசு என்ன செய்ய வேண்டும்?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

பெட்ரோல், சமையல் காஸ், தேநீர், ஹோட்டல் உணவுகள் என எல்லாவற்றின் விலையும் எகிறிவிட்டது. அரசு என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

அரசியல் ஆதாயதம் இன்றி, எதன் மூலம் நிதியைப் பெருக்கலாம் என்றுணர்ந்து செயல்பட்டால் அடிப்படை தேவைக்கான காஸ், பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது என் எண்ணம்.

எந்தப் பொருள் வாங்கவும் டூவீலரை எடுத்துக்கொண்டு போவேன். இப்போது வெளியே கிளம்பும்போது தபால் நிலையம், பேங்க், கடை என அனைத்து வேலைகளையும் ஒருசேர முடித்துவிடுகிறேன்.

அருகிலுள்ள நூலகம், கோயில் போன்ற இடங்களுக்கு நடந்து செல்கிறேன். இரண்டு மாதங்களாக அப்படிச் செய்ததால் பெட்ரோல் செலவு மிச்சமானதை உணர்ந் தேன். சிறிய முயற்சியிலும் சிக்கனம் இருப்பதை உணர்ந்து மகிழ்ந்தேன்.

- ஆர். நேஹா யாழினி, சேலம்-30

அரசு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கார்கள் உற்பத்தியை பெருக்க வேண்டும். இ-வாகனங்களை மக்கள் வாங்கு வதை ஊக்கப்படுத்த மானியம் வழங்க வேண்டும்.

காஸ் சிலிண்டர் விலையேற்றத்தை சமாளிக்க சூரிய அடுப்பு போன்ற மரபுசாரா எரிபொருள்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் உபயோகத்தைக் கட்டுப்படுத்த ஒரு வாகனத்துக்கு இவ்வளவுதான் என்று ரேஷன் கொண்டு வர வேண்டும். வாரம் ஒருமுறை பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த , நாம் ஸ்கூட்டர், கார்கள் உபயோகப்படுத்தாத ஜீரோ டேயை (Zero Day) மேற்கொள்ளலாம். அருகிலுள்ள இடங்களுக்குச் சென்றுவர சிங்கப்பூர் , மலேசியா போல் சைக்கிளை பயன்படுத்தலாம். எரிபொருள் விலை யேற்றத்துக்கு அரசை மட்டுமே குறைகூறிக் கொண்டிருக் காமல் நமக்கும் பொறுப்பிருப்பதை உணர்ந்து எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

- என்.சாந்தினி, மதுரை-9

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் குறைக்கப்பட வேண்டும். தேர்தல் பயத்தால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நிச்சயமாக உயராது. பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பைக் குறைக்க வேண்டும். ஹோட்டலுக்கு செல்வதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். அலுவலகம், வெளியிடங்களுக்குச் செல்லும்போது வீட்டில் இருந்தே தேநீரை ஃப்ளாஸ்கில் கொண்டு செல்ல லாம்.

- கீதா பஞ்சாபகேசன், திருச்சி-21

இந்த இதழ் கேள்வி

பொருளாதாரப் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தள்ளுவண்டியில் டீக்கடை நடத்துகிறார் ஒரு பெண். இவரைப் போல பலர் படிப்புக்குத் தொடர்பில்லாத பணியைத் தேர்ந்தெடுக்கின்றனர் அல்லது தள்ளப்படுகின்றனர். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப் பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 3.5.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism