Published:Updated:

வினு விமல் வித்யா: மனத்தடையை தாண்டினால் மாரத்தானும் ஓடலாம்!

 கங்குபாய் கதியவாடி,  அம்பிகா கிருஷ்ணா,  ஜாக்கி ஹன்ட்
பிரீமியம் ஸ்டோரி
கங்குபாய் கதியவாடி, அம்பிகா கிருஷ்ணா, ஜாக்கி ஹன்ட்

- சஹானா

வினு விமல் வித்யா: மனத்தடையை தாண்டினால் மாரத்தானும் ஓடலாம்!

- சஹானா

Published:Updated:
 கங்குபாய் கதியவாடி,  அம்பிகா கிருஷ்ணா,  ஜாக்கி ஹன்ட்
பிரீமியம் ஸ்டோரி
கங்குபாய் கதியவாடி, அம்பிகா கிருஷ்ணா, ஜாக்கி ஹன்ட்

கோத்தகிரிக்கு ஒரு கல்யாணத் துக்காகக் கிளம்பினாள் விமல். அவளுடன் வித்யாவும் வினுவும் சேர்ந்துகொண்டனர்.

“ரெண்டு நாளாவது இந்த க்ளை மேட்டை அனுபவிக்கணும். சென்னையில வெயில் தாங்கலை” என்றபடி நடந்தார் வித்யா.

“திடீர் ப்ளானா இருந்தாலும் டிக்கெட், ஹோட்டல் எல்லாம் சிறப்பா அமைஞ்சிருச்சு. வித்யாக்கா, மெதுவா ஜாகிங் பண்ணுவோமா?” என்றாள் வினு.

“ஏம்மா, என்னைப் பார்த்தா எப்படி இருக்கு? நடக்கும்போதே மூச்சு வாங்குது, இதுல ஜாகிங் வேறயா?”

வினு விமல் வித்யா: மனத்தடையை தாண்டினால்
மாரத்தானும் ஓடலாம்!

“எல்லாம் மனத்தடைதான் அக்கா. ஜாக்கி ஹன்ட் புரோ யர்ஸ்மான்னு 46 வயசு பெண், 104 நாள்ல 104 மாரத்தான்கள் ஓடி சாதனை படைச்சிருக்காங்க தெரி யுமா...”

“ஜாக்கி ஹன்ட் உடம்பை ஃபிட்டா வச்சிருப்பாங்க வினு. அதனால 200 மாரத்தான்கள்கூட ஓடுவாங்க.”

“வித்யாக்கா, நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல. அவங்களுக்கு ஒரு கால் இல்ல.

26 வயசுல ஜாக்கிக்கு அரியவகை புற்றுநோய் வந்திருக்கு. உடனடியா காலை எடுத்தாதான் உயிர் பிழைக்க முடியும்னு, இடது காலை முட்டிக் குக் கீழ் வரைக்கும் வெட்டி எடுத்துட்டாங்க. கால் இல்லை யேங்கிற கவலையில இருந்தவங் களை, அவங்க கணவர்தான் மீட்டெடுத்தாராம். அவர் லாங் டிஸ்டன்ஸ் ஓடக்கூடியவராம். போட்டிகள்ல அவரை உற்சாகப் படுத்த ஜாக்கி கூடவே போனாங்க. அவங்களுக்கு செயற்கைக்கால் கிடைச்சதும், நாமளும் ஓடினா என்னன்னு நினைச்சிருக்காங்க.

10 கிலோ மீட்டர் ஓட்டத்துல கலந்துக்க பதிவு செஞ்சாங்க. முதல்ல கஷ்டமாயிருந்தாலும் சீக்கிரமாவே ஓட ஆரம்பிச் சிட்டாங்க. அப்புறம் அரை மாரத் தான்கள்ல கலந்துகிட்டாங்க. அடுத்து முழு மாரத்தான்கள்லயும் ஓட ஆரம்பிச்சிட்டாங்க!”

“என்ன வினு சொல்றே...

42.2 கிலோமீட்டர் தூரம் ஓடினாங் களா?”

“ஆமா, விமல். இதுக்கு முன்னால அலிசா அமோஸ் க்ளார்க் 95 மாரத் தான்கள் ஓடினதுதான் சாதனையா இருந்துச்சு. அவங்க மாற்றுத் திறனாளியும் இல்ல. அதனால

96 மாரத்தானை இலக்கா வச்சாங்க ஜாக்கி. ஆனா, போன மாசம் பிரிட்டனைச் சேர்ந்த கேட் ஜேடன், 101 மாரத்தான்கள் ஓடி, அலிசாவோட சாதனையை முறியடிச்சாங்க. அதனால ஜாக்கியின் இலக்கு இன்னும் அதிகமாயிருச்சு. ஆனாலும், மனம் தளராம தொடர்ந்து 104 நாள்கள்ல 104 மாரத்தான்கள் ஓடி சாதனை படைச்சிட்டாங்க ஜாக்கி. இவங்க சாதனையை இன்னும் சில வாரங்கள்ல கின்னஸ் அதிகாரபூர்வமா அறிவிக்கிறதா சொல்லி யிருக்கு” - விளக்கமாகச் சொன்னாள் வினு.

“சாதாரண ஜாக்கி இல்ல, சூப்பர் ஜாக்கி! எந்த நாட்ல இருக்காங்க?” என்றார் வித்யா.

“தென்னாப்பிரிக்காவுல பிறந்தவங்க. அமெரிக்காவுல வசிக்கிறாங்க. இவங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க” என்று வினு சொல்லி முடிக்கும்போது, ஒரு தேநீர்க் கடை எதிர்ப்பட்டது.

அங்கே இஞ்சி, ஏலக்காய் டீயைக் குடித்துவிட்டு மீண்டும் மூவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

“ஆன் ஃப்ரான்க் தெரியும்ல... ஜெர்மன் நாஜிப்படைகள் யூதர்களை வேட்டையாடினப்ப, நெதர்லாந்துல 13 வயசு ஆன் ஃப்ரான்க் குடும்பம் ஒரு வீட்டுல தலைமறைவு வாழ்க்கை நடத்தினாங்க. அப்போ ஒரு பிறந்தநாளுக்குக் கிடைச்ச டைரியில அந்தக் காலகட்டத்துல நடந்த சம்பவங்களை எழுத ஆரம்பிச்சாங்க. 15 வயசுல நாஜிப் படைகளால கொல்லப்பட்டாங்க. அந்தக் குடும்பத்துல ஆனோட அப்பா மட்டுமே உயிர் பிழைச்சார். ஹிட்லர் ஆட்சி முடிவுக்கு வந்தப்புறம், நெதர்லாந்துல ஆன் குடும்பம் வசிச்ச வீட்டை அருங் காட்சியகமா மாத்திட்டாங்க. அந்த வீட்டுல ஆனோட அப்பா ஓட்டோ ஃப்ரான்க் தனியா நிக்கும் காட்சி நெஞ்சை உலுக்கும். இந்த வீடு பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்பட்டு, 62 வருஷங்களாயிருச்சு. இந்த நிகழ்வை நெதர்லாந்துல பெரிய அளவுல நினைவுகூர்ந்திருக் காங்க” என்றார் வித்யா.

“உலகத்துல அதிகமா விற்கப்பட்ட பத்து புத்தகங்கள்ல ஆன் ஃப்ரான்க் டைரியும் ஒண்ணு. எங்கிட்ட இருக்கு. நீங்க படிக்கலைனா நான் உங்களுக்குத் தரேன் வித்யாக்கா.”

“ரொம்ப நாளா படிக்கணும்னு நினைச் சிட்டிருந்தேன் விமல். கொடு, படிக்கிறேன்.”

“சரி, நாம ஒரு வித்தியாசமான டூர் போலாமா?” என்றாள் வினு.

“அப்படியென்ன வித்தியாசமான டூர்?”

“புல்லட்டுலேயே டூர் போகணும். தூங்கற துக்கு மட்டும் ஹோட்டல்ல தங்கிக்கணும். நிறைய பேர் ஃபிரெண்ட்ஸோட போறாங்க. பெண்கள்கூடத் தனியா இப்படிப் போறாங்க. நாமளும் போனா, பிரமாதமான அனுபவமா இருக்கும்ல?”

“எனக்கு புல்லட் ஓட்டறது கஷ்டமாச்சே...”

“நீங்க பின்னாடி உட்கார்ந்துக்கலாம் வித்யாக்கா” என்றாள் வினு.

“ஆமா. புல்லட் அம்பிகா கிருஷ்ணா தெரியுமா... கேரளாவைச் சேர்ந்தவங்க. ஏப்ரல் மாசம் இந்தியா முழுசும் புல்லட்ல சுத்தி வர்றதுக்காகக் கிளம்பிருக்காங்க. இந்தப் பயணத்தை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிச் சிருக்காங்க. ஃபர்ஸ்ட் இயர் காலேஜ்ல படிக்கும்போதே அம்பிகாவுக்கு கல்யாண மாயிருச்சு. அடுத்த வருஷமே ராணுவத்துல வேலை செஞ்ச கணவரை இழந்துட்டாங்க. மூணு மாசப் பெண் குழந்தையை இவங்க ஃபிரெண்ட்ஸ்தான் கவனிச்சிக்கிட்டாங்க. அம்பிகா படிப்பை முடிச்சாங்க. ஒரு வேலைல யும் சேர்ந்தாங்க. 39 வயசுலதான் புல்லட் ஓட்ட ஆசை வந்துச்சு. கத்துக்கிட்டாங்க. ‘நான் ஓர் இடத்துலயும் என் மகள் ஓர் இடத்துலயும் இருந்தோம். அவளைப் பார்க்க புல்லட்ல கிளம்பிடுவேன். அப்புறம்தான் புல்லட்ல பயணம் செய்யும் ஐடியா வந்துச்சு. நான் ரேடியோவுல வேலை செய்யறதால, இந்தியா வுக்குள்ள எந்த இடத்துக்குப் போகவும் பிரச்னை இல்ல. இப்போ இந்தியா முழுக்க புல்லட்ல கிளம்பிட்டேன். ராத்திரி பயணம் செய்யும்போதுகூட எனக்கு பயமா இல்ல. காடு, மலைகள்லதான் கொஞ்சம் பயமும் சுவாரஸ்யமும் அதிகம் இருக்கும். தைரியம்தான் நமக்குப் பக்கபலம்’னு சொல்றாங்க அம்பிகா” என்றாள் வினு.

“செமயா இருக்கு! நாம முதல்ல புல்லட் கத்துக்கறோம். டூர் போறோம்” என்ற வித்யாவை வினுவும் விமலும் ஆச்சர்யத் துடன் பார்த்தனர்.

“ஜானி டெப் தெரியும்ல?” என்று கேட்டாள் விமல்

“ஆமா, ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்துல ஜாக் ஸ்பாரோவா நடிச்சவர். நல்ல நடிகர். இப்போ ஒரு வழக்குல அல்லாடுறாரே” - சட்டென பதில் சொன்னார் வித்யா.

“ம்... ஆம்பர் ஹேர்டு என்ற நடிகையை ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டார். ரெண்டு பேரும் 15 மாசத்துல அமைதியா பிரிஞ்சிட்டாங்க. ஆனா, மூணு வருஷத்துக்கு முன்னால ஆம்பர், பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னை பத்தி ஒரு கட்டுரை எழுதினாங்க. அதுலதான் ஜானி டெப் மாட்டிக்கிட்டார். வழக்கு நடந்துட்டிருக்கு. இந்த மூணு வருஷத்துல அவரால ஒரு படத்துலகூட கமிட் ஆக முடியல. அவரோட எதிர்காலமே கேள்விக்குறியாயிருச்சு. எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும் எவ்வளவு பெரிய ஆளுமையைக் கல்யாணம் பண்ணி னாலும் பெண்களைத் துன்புறுத்தறதை நிறுத்த மாட்டேங்கிறாங்க. இந்த வழக்கு மத்தவங் களுக்கு ஒரு பாடமா இருக்கட்டும்” - கோபமாகச் சொன்னாள் விமல்.

“பில்கேட்ஸ் விவாகரத்துக்குப் பிறகு, தன்னோட முன்னாள் மனைவி மேல அதே அன்பு இருக்கிறதாவும் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கறதாவும் சொல்லி யிருக்காரே...’’ என்றார் வித்யா.

“ஆமா, மெலிண்டா அதை ஏத்துக்கணுமே..?! ஆலியா பட் நடிச்ச ‘கங்குபாய் கதியவாடி’ படம் பார்த்தேன். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்துல ஆலியா அசத்தலா நடிச்சிருக் காங்க. கங்குபாய் கோத்தேவாலி என்பவரோட வாழ்க்கையை இன்ஸ்பிரேஷனா வச்சு இந்தப் படத்தை எடுத்திருக்காங்க. குஜராத்ல பிறந்து, காதல் திருமணம் செஞ்சு மும்பைக்கு வர்றாங்க கங்குபாய். கணவன் கங்குபாயை 500 ரூபாய்க்கு பாலியல் தொழில் நடக்கும் காமத்திபுரால வித்துடறான். அங்கே கங்குபாய் என்னவா ஆகறாங்கங்கன்றதுதான் கதை. ஆலியா ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க. வசனங்கள் எல்லாம் பல இடங்கள்ல கூர்மையாயிருக்கு. எல்லாரும் பார்க்க வேண்டிய படம்’’ என்றாள் விமல்

“கண்டிப்பா பார்த்துடுவோம்... தூறல் விழுது. வேகமா ரூமுக்குத் திரும்பிடலாம்” என்று வித்யா சொன்னதும் வினுவும் விமலும் ஓட்டமும் நடையுமாக விரைந்தார்கள்.

- அரட்டை அடிப்போம்...

வினு விமல் வித்யா: மனத்தடையை தாண்டினால்
மாரத்தானும் ஓடலாம்!

வினு தரும் வித்தியாசமான தகவல்

ஆனி லண்டன்டெரி என்பவர்தான் சைக்கிளில் உலகைச் சுற்றி வந்த முதல் பெண் (1894-95 ஆண்டுகளில்). ஆனி பயணத்தைத் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்புதான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டார்.

படிப்புக்குத் தொடர்பில்லாத பணி... உங்கள் கருத்து என்ன?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

பொருளாதாரப் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தள்ளுவண்டியில் டீக்கடை நடத்துகிறார் ஒரு பெண். இவரைப் போல பலர் படிப்புக்குத் தொடர்பில்லாத பணியைத் தேர்ந்தெடுக்கின்றனர் அல்லது தள்ளப்படுகின்றனர். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சிறந்த பதில் அளித்து பரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

கல்வி என்பது நம் அறிவை வளர்க்கக்கூடியது. எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையை கல்வி கற்பிக்கிறது. எந்தத் துறை சார்ந்த படிப்போ, தொழிலோ... மனம் ஒன்றிச் செய்யும்போது அதுவே கலையாகிறது. எனக்குத் தெரிந்த பெண் ஒருவர், தன் கணவருடன் சிக்கன் கடை வைத்திருக்கிறார். அந்தப் பெண் பி.காம் முடித்து, `டேலி' படித்து ஒரு வெங்காய மண்டியில் வேலை பார்த்தார். பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படித்த அவரின் கணவருக்கு ஒரு பரிசோதனை கூடத்தில் வேலை. இருவருக்குமே சம்பளம் குறைவு. அவர்கள் ஏரியாவில் சமையலுக்கு சிக்கன் வாங்க வெகுதூரம் போக வேண்டியிருந்ததை யோசித்து, சொந்தமாக சிக்கன் கடை வைத்தார்கள். வருமானம் உயர்ந்தது. அவர்கள் படிப்புக்கும், செய்யும் தொழிலுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. மனம் ஒருமைப்பட்டு, நேர்மையாகச் செய்யும் எந்தத் தொழிலிலும் கௌரவம் பார்க்க வேண்டியதில்லை. சொந்தத் தொழில் என்பதால் கூடுதல் முயற்சியுடன் உழைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

விஜயலக்ஷ்மி, மதுரை-9

பிடெக் முடித்த என் மகனுக்கு கேம்பஸ் நேர்முகத் தேர்வில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை கிடைத்து புனே சென்றான். ஓராண்டு முடிவதற்குள் தனக்கு ஐடி வேலை பிடிக்க வில்லையென்று கூறி வேலையை விட்டுவிட்டான்.கல்லூரியில் படிக்கும்போது ஸ்டாண்டப் காமெடி மற்றும் தெருக்கூத்து போட்டிகளில் கலந்துகொண்டு கலக்கியவன், ரேடியோ ஜாக்கி வேலைக்கு முயற்சி செய்து புதிதாகத் தொடங்கப்பட்ட பண்பலையில் குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தான். மூன்று ஆண்டுகள் அங்கு வேலை கற்றுக்கொண்டு இப்போது நல்ல சம்பளத்தில் ஓர் அயல்நாட்டு எஃப்எம்மில் ஆர்ஜேவாக வேலைக்குச் சேர்ந்துவிட்டான். படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்த மில்லை. இளைய தலைமுறையினர் ரிஸ்க் எடுக்கும்போது தயவுசெய்து முட்டுக்கட்டை போடாதீர்கள்.

- எஸ்.விஜயலக்ஷ்மி, சென்னை-50

புலவர் பட்டம் பெற்ற என் கணவர், தவிர்க்க முடியா சூழலால் சாராயக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றியுள்ளார். எந்த வேலையையும் இழிவு என நினைக்காமல் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்பவர். கடலூரில் அருள்திரு பாதிரியார் எம்.பீட்டர் அடிகளார் இவருக்கு தமிழாசிரியர் பணியைத் தந்தார். இவரும் நல்லொழுக்க வகுப்பில் மாணவர்களிடத்து `படித்த படிப்புக்கேற்ற வேலையைத்தான் செய்வேன் என்று பிடிவாதமாக இல்லாமல் கிடைத்த வேலையை பிடித்துச் செய்தால் என்னைப் போல் நீங்களும் வாழ்வில் உயர்வது திண்ணம்’ என சொன்னதால் பல மாணவர்கள் உயர்ந்துள்ளதை நானேறிவேன். தேநீர் விற்பனை செய்தவர்கள் வாழ்வில் முன்னேறி மாநிலத்தை, நாட்டை ஆண்ட, ஆளுகிற நிலையை நீங்களும் அறிவீர்கள்தானே!

- எஸ்.ஜெயலெட்சுமி சுப்பிரமணியன், கடலூர்

இந்த இதழ் கேள்வி

வருமான வரி, அது சார்ந்த சேமிப்புத் திட்டங்கள் பற்றிய முதலீட்டு முடிவுகளில் நம் பெண்களின் பங்கு எந்த அளவு இருக்கிறது? குறிப்பாக இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப் பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 17.5.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism